வாங்க பாஸ், வாழ்க்கையைக் கொண்டாடலாம்!
வாங்க பாஸ், வாழ்க்கையைக் கொண்டாடலாம்!

வாழ்க்கையைக் கொண்டாடுதல்

‘எனக்கு வெங்கடேசனோட ஆராய்ச்சிக் கட்டுரையை படிச்சதும் கோபம் கோபமாக வரும். கூப்பிட்டு அனுப்புவேன், வந்தவுடன் பிச்சி எடுத்துடனும்னு ஒத்திகை பாத்து வெச்சிருப்பேன். இவன் உள்ள வருவான். குட்மார்னிங் சார்னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பான்! அவ்வளவும் மறந்துபோகும்,' - என தன் பேராசிரியர் சொன்னதைப் பகிர்கிறார் நூலாசிரியர்.

 தன் வாழ்வில் நடந்த இதுபோன்ற சின்னச்சின்ன சம்பவங்களைச் சுட்டிச் செல்வதன் மூலமாக வாழ்வின் மன அழுத்தங்களைப் போக்கும் நோக்கோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கர்நாடக மாநிலத்தில் வனத்துறையில் பணியாற்றும் ஐஎப்எஸ் அதிகாரியான இவர், தம் சக அதிகாரிகள் மன அழுத்தத்தில் இருப்பதைப் போக்குவதற்கு வழிகாட்டுவதற்காக வாட்ஸ் அப் குழுமத்தில் எழுதிவந்த எளிய கட்டுரைகள் இவை. படித்தால் மெல்லிய சிரிப்பொன்றை நம் மனதில் உணரலாம். அட இவர் சொல்வதுபோல் செய்துபார்க்கலாமே எனத் தோன்றவைக்கும் வார்த்தைகள் அடங்கி உள்ளன. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்நூலைப் படித்தால் எல்லா துன்பங்களும் தூசு என்று தூக்கிப் போடுவர்! சொந்தவாழ்வின் அனுபவங்களைப் பகிர்வதால் நம்பகத் தன்மையும் உள்ளது.

வாங்க பாஸ்,

வாழ்க்கையைக் கொண்டாடலாம்!,

Dr. S. வெங்கடேசன்

வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,

கோயம்புத்தூர் - 641001, பேச: 9047087058

விலை: ரூ 190

பொதியவெற்பன் பவளவிழா வெளியீடு

எழுத்தாளரும் விமர்சகருமான பொதியவெற்பன் பவளவிழாவை ஒட்டி அவரது நூல்கள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து பொதியவெற்பன் நூல்கள்: ஆற்றுப்படை மதிப்பீடுகள் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை கண.குறிஞ்சி தொகுத்துள் ளார். வீ.அரசு, கரு.ஆறுமுகத்தமிழன், கண.குறிஞ்சி, இரா.கந்தசாமி, ஜமாலன் பா.மதிவாணன், செந்தலை ந.கவுதமன், பொன்.குமார், சண்முக விமல்குமார் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதியவெற்பன் இந்நூலில் கடைசியாக எழுதியிருக்கும் தன்னுரையும் சிறப்பாக உள்ளது. ஒரு கட்டுரையாளர் தன் படைப்புகள் பற்றி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கும் இன்னொரு கட்டுரையாளர் எழுதியிருக்கும் கட்டுரையிலேயே பதில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறான கட்டுரைகள் ஒரே தொகுப்பிலேயே அமைவது அரிதான ஒன்றே. இது ஓர் எழுத்தாளரின் நூல்கள் பற்றிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு. பொதிய வெற்பனின் பார்வை மிக விரிவானது. அவரது இயங்கியலும் அப்படிப்பட்டதே. இதைப் புரிந்துகொள்ள இத்தொகுப்பு உதவி நிற்கிறது. அவரது விமர்சன முறை பற்றி விரிவாகக் கட்டுரைகள் பேசுகின்றன. கரு.ஆறுமுகத் தமிழன் இவரைப் பற்றி தன் கட்டுரையில் இரண்டே சொல்லில் சொல்லிச்

 செல்கிறார் - ‘ஊசலாடாப் பூசலாடி.' இவ்விரு சொற்களே அவரது இலக்கியப் பயணத்தை நிலைநிறுத்துபவை.

வெளியீடு: புதுமலர் பதிப்பகம், 6, முதல் வீதி,

சக்திநகர் மேற்கு, திண்டல் (அஞ்சல்) ஈரோடு, 638012. விலை ரூ 120

தமிழில் காந்தியாரின் இதழ்!

காந்தி ஆங்கிலத்தில் நடத்திவந்த பத்திரிகைகளில் ஹரிஜன் முக்கியமானது. 1933 - இல் அவர் வார இதழாக தொடங்கி நடத்திவந்தார். 1946 - இல் காந்தி சென்னை வந்தபோது அவரை ராஜாஜியுடன் சந்தித்தார் சின்ன அண்ணாமலை. அப்போது சுதந்தர போராட்டத்தில் சின்ன அண்ணாமலை பலமுறை சிறை சென்றவர் என்பதை அறிந்து காந்தி மகிழ்ந்தார். அவரிடம் ஹரிஜன் இதழை தமிழில் நடத்த விரும்புவதாகக் கூறி அனுமதி வாங்கினார் சின்ன அண்ணாமலை. அனுமதி கிடைத்த அடுத்தமாதமே ஏப்ரல் 14 அன்று தமிழ் ஹரிஜன் என்ற பெயரில் அவ்விதழ் வெளிவரத் தொடங்கியது. 1948 ஜனவரியில் காந்தியின் படுகொலையுடன் நின்று விட்ட இந்த இதழின் பழைய படிகளைத் தேடி எடுத்து, அதில் முதலாண்டு இதழ்களின் தொகுப்பாக இந்நூல் வெளியாகி உள்ளது. தமக்கு மிகக் குறைவான பிரதிகள் அச்சடிக்கவே மத்திய அரசு அனுமதித்திருப்பதாக முதல் இதழில் குறிப்பிடும் சின்ன அண்ணாமலை இதழின் எஜெண்டுகள், இந்த இதழை வாசகசாலை, பொது சங்கங்கள் போன்றவற்றுக்கு முதலில் அளித்து நிறையபேர் படிக்க வழிசெய்யவேண்டுமென வேண்டுகிறார்.

சீனிவாச சாஸ்திரிகளுக்கும் காந்திக்குமான நட்பு ஆழமானது. சாஸ்திரி இறக்கும் முன்பாக காந்தி அவரைப் பார்க்கிறார். அந்த சந்திப்பு பற்றி சுசீலா நாயர் எழுதி இருக்கும் உருக்கமான கட்டுரை ஒன்று இத்தொகுப்பில் உள்ளது.

கதர் நூற்றல், கைராட்டினம், இயற்கை மருத்துவம், காந்தியார் சந்திக்கும் மனிதர்கள், அப்போதைய அரசியல் சூழல், சத்தியாகிரகம், அகிம்சை போன்ற பல விஷயங்கள் பற்றி காந்தியார் எழுதித் தள்ளி இருக்கிறார். ராம நாமத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை பற்றி நிறைய எழுதுகிறார். எந்திரமயமாக்கல் குறித்து காந்திக்கு இருந்த ஒவ்வாமை பற்றி இதில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. காந்தியாரின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் தொகுப்பு சிறப்பாக உதவி செய்யும்.

தமிழ் ஹரிஜன்,

மகாத்மா காந்தியடிகள் நடத்திய வார இதழ்களின் தொகுப்பு, தொகுப்பும் பதிப்பும்: கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன், வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10. கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40 பேச: 9840358301

விலை ரூ 1500

காலத்தை அறிந்துகொள்வோம்!

நம் காலத்தின் முக்கியமான அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய முக்கியமான ஆங்கில நூல் காலத்தின் சுருக்கமான வரலாறு ( A Brief History of Time). இந்த நூலை அவர் 1988-இல் எழுதி வெளியிட்டார். அது உலகம் முழுவதும் பெருமளவு வாசிக்கப்பட்டது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய விளக்கம் எளிமையாக அந்நூலில் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்நூலில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளைப் பற்றி விரிவாக வாசகர்கள் கேட்டதால், காலத்தின் மிகச்சுருக்கமான வரலாறு ( A Brief History of Time ) என்ற இன்னொரு நூலை வெளியிட்டார். இந்த நூலின் தமிழாக்கம் மஞ்சுள் பதிப்பக வெளியீடாக நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது. சார்புக்கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற புரிந்துகொள்ள கடினமான அறிவியல் அம்சங்கள் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. எளிமையாக்கப்பட்டுள்ளன என்பது முக்கியம். அத்துடன் இத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள சமீபத்திய கண்டுபிடிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இயற்பியல் துறையில் முக்கியமானதொரு நூல் எல்லா தரப்பாரும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது என்பது ஆச்சரியகரமான உண்மை!

காலத்தின் மிகச்சுருக்கமான ஒரு வரலாறு, ஸ்டீபன் ஹாக்கிங், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், வெளியீடு:

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால் 462003.

விலை ரூ 299

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com