
சங்ககாலத் தமிழர்களின் வீரத்தை நிறுவுகின்ற பாடல்களின் தொகுப்பான புறநானூற்றை ஆய்வு செய்து, அது உலக அமைதிக்கான நூல் என நிறுவுகிறார் பாவலர் அறிவுமதி. இந்த மண் மழையால் நனைக்கப்படுவதற்கானது. ஏர்க்கலப்பைகளால் உழுவதற்கானது.உழுதபின் விதைத்து விளைவித்து அறுவடை செய்து உலக உயிர்க்கெல்லாம் பகுத்தளித்து பசியாற்றுவதற்கானது என கொட்டை எழுத்தில் சொல்கிறார் பாவலர். இதற்குச் சான்றாக போர்க்களத்தில் வாயோடு வெட்டப்பட்டு யானையின் துதிக்கை தனியாகப் புரண்டு கிடப்பதைப் பார்த்தால் ஏர்க்கலப்பையைப் போல் இருக்கிறது என்று புறநானூற்றுப் புலவன் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.
புறம் -20 வது பாடல், திருவில் அல்லது கொலைவில் அறியார்/ நாஞ்சில் அல்லது படையும் அறியார் – என்கிறது. அந்த அரசனது மக்கள் கொலைவில்லா? அப்படியென்றால் என்னவென்று கேட்பார்கள். ஏர்ப்படை தெரியுமே தவிர அவன் மக்களுக்குப் போர்ப்படை தெரியவே தெரியாது. இந்த சிந்தனைகளை 3000 ஆண்டுகளுக்கு முன்பே பாடியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். உழவைத்தான் உயரிய தொழிலாக உயரத்தில் வைக்கிறார்கள் தமிழ்ப்புலவர்கள். கொலைக்கருவிகளையும் உழவின் பாற்பட்டுத்தான் சிந்தித்துச் சொல்கிற மரபு நம்முடையது.
வில்லேர் உழவின், வாளேர் உழவர், வில்லுழுது உண்மார் போன்ற சொற்றொடர்களை இதற்காக அவர் முன்வைக்கிறார். ’விளைக வயலே, வருக இரவலர்!’ என்கிறது ஐங்குறுநூறு. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்திய மரபு போரையா முன்னிறுத்தி இருக்கும்?
திண்டுக்கல் ராசாவின் அழகான ஓவியங்களுடன் மிகச் சிறப்பான அச்சில் வெளியாகி இருக்கிறது இந்நூல்.
உலக அமைதிக்கான நூல் புறநானூறு, அறிவுமதி, வெளியீடு: நெல்லி, தமிழ்நாடு. சென்னை 86. பேச: 9940221800 விலை: ரூ.250