அக்கறை கொண்ட கதைகள்

அக்கறை கொண்ட கதைகள்
Published on

அன்றாடம் கடந்து வந்த தன் வாழ்க்கையிலிருந்து கதைகளுக்கான கருப்பொருளைக் கண்டடைபவர் எழுத்தாளர் பாலஜோதி. அவரது பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு வெயில் அணிந்தவன். பரோட்டாவுக்காக அலைந்த இளம் வயசு நினைவுகளை படம்பிடிக்கும் பரோட்டா வாத்தியார் சிறுகதையில் வால் இருந்தால் நான் ஆட்டியிருப்பேன் என்று எழுதுகையில் சிரிப்பு வந்தாலும் அந்த உணர்வின் உச்சத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. மழை பிடிக்காத மனிதனான ஒருவனின் கதையை வெயில் அணிந்தவன் என எழுதுகையில் வாசிக்கையில் வெப்பம் நம்மை எரிப்பதையும் மழை நம்மை நனைப்பதையும் உண்ர இயலுகிறது. நகைச்சுவையாக ஐம்பால் என்றொரு கதையை எழுதிப்பார்த்தாலும் அதிலும் இயற்கையின் மீதான அக்கறையை முடிச்சிட்டு, கற்பனை செய்து பார்த்திருக்கிறார். பூமர் தாத்தா கதையும் பனைமரத்தின் பெருமை சொல்கிறது. பெரும்பாலும் சமூக அக்கறையுடன் கூடிய பார்வையும் மானுட உணர்வுகளை மையப்படுத்தும் கூர்மையான எழுத்துகளும் கொண்ட சிறுகதைகள்.

வெயில் அணிந்தவன், பாலஜோதி ராமச்சந்திரன், எழுத்து பிரசுரம், எண் 55(7), ஆர் பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை 40. பேச: 8925061999 விலை ரூ 260

எளிமையைத் தாண்டி

குதிரையின் காலடியைப்

பற்றிக்கொண்டது லாடம்

சட்டையை உரிக்கமுடியாமல்

திணறி நெளிந்தது பாம்பு

ஆழமான அர்த்தங்களைக் கொண்ட இந்த வரிகளில் சிக்கித் தவிக்கும் வாழ்வை பொன் தனசேகரன் படம் பிடித்திருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் இந்த உணர்வைக் கொண்டு வந்துள்ளார். எளிமையாக த் தோன்று வரிகளைக் கொண்டே அவர் தன் கவிதைகளை சமைத்துள்ளார். எப்படியோ பின் தங்கிவிடுகிறேன்/ தூங்கி அல்ல என்ற வரிகள் பலருக்கும் சுயவாழ்வைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துவிடக்கூடும். மரணத்தையும் தனிமையையும் குறிக்கும் பல கவிதைகள் கொண்ட இத்தொகுப்பின் எளிமையைத் தாண்டிச் செல்கையில்தான் அதன் பின்னுள்ள சாரங்கள் பிடிபடும்.

பரமபத சோபன படம், பொன் தனசேகரன், போதிவனம்,12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை -14 பேஅச்: 9841450437

மறக்க முடியுமா?

இலக்கியத்துறை, கலைத்துறை இரண்டிலும் தீவிரமாக இயங்கி வருகிறவர் ராசி. அழகப்பன் வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த தாய் இதழ், அதன் காலத்தில் மிகவும் பரபரப்பாக வாசிக்கப்பட்ட இதழ். அந்த இதழில் பணியாற்றிய காலத்தில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி உள்ளார் ராசி அழகப்பன். தாய் இதழில் அவர் வேலைக்குச் சேர்ந்த சம்பவமே மிக சுவாரசியமாக இருக்கிறது. அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்று அது. அதுபோல் வியப்பூட்டும் சம்பவங்கள் இந்நூலில் நிறைய உள்ளன. வலம்புரி ஜான் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தாய் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், வலம்புரி ஜானின் பரந்த உள்ளம் இந்நூலில் பதிவாகிறது தாய் இதழில் தயாராகி இன்றைய ஊடக உலகில் முக்கிய பங்கு வகிக்கும் பல ஆளுமைகளைப் பற்றியும் அவர்கள் பற்றிய சம்பவங்களைப் பற்றியும் அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார் நூலாசிரியர். அந்த ஆளுமைகளைப் பற்றிய விரிவான வாழ்க்கைக் குறிப்புகளையும் பின்னிணைப்பாக தந்துள்ளார். நக்கீரன் கோபால், கவிஞர் பழநிபாரதி, சூரியகாந்தன், தாய் பிரபு போன்றோரின் வரிசை அது. தாயின் விரல்நுனியை மறக்காமல் இருக்கிறார் ராசி அழகப்பன். உண்மையில் யாரால்தான் இயலும்?

தாயின் விரல்நுனி, ராசி அழகப்பன், வெளியீடு: பேஜஸ் பப்ளிகேஷன்ஸ், 7, 20வது குறுக்குத் தெரு, கிராம நெடுஞ்சாலை, சோழிங்க நல்லூர், சென்னை 119 பேச: 9176804412

சுவையான கதைகள்

சிறார்களுக்கு எப்போதும் கதைகள் பிடித்தமானவை. அதுவும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு சொல்லப்படும் கதைகள் மிக நெருக்கமானவை. இந்நாவலில் நடராசன் கற்பனைக் குதிரைக்குப் பதிலாக ஒரு கழுதையை தட்டிவிட்டிருக்கிறார். கழுதை வண்டிக்காரன் சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கிறது இந்த குறு நாவல். கதைகள் என்றால் வெறும் கதைகள் மட்டுமல்ல; அவற்றுக்குள் பல பொருள்கள் பற்றிய கல்வியும் தகவல்களும் வரலாறும் இருக்கிறது என்பதே இதன் சிறப்பு. அலெக்ஸாண்டரின் வாளாகட்டும் முகம் மழிக்கும் சவரக்கத்தியாகட்டும் எல்லாம் சிறுவர் கதைகள் ஆகின்றன. பேகனின் போர்வை, புறாவுக்கு தன் தசையை அரிந்துகொடுத்த சிபியின் நியாயத் தராசு போன்ற பொருட்களும் அதன் கதைகளுமாக ஆனது இது.

கழுதை வண்டி, ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018. பேச: 044- 24332424

போராட்டத்தின் கதை

நாலு தெருக்கத என்ற பெயரிலேயே இருக்கிறதே. இந்நாவல் வைக்கம் போராட்டத்தை நேரடியாக அதில் ஈடுபட்ட நிஜ ஆட்களை உலவவிட்டு சொல்லப்போகும் வரலாற்று நாவலோ என்ற எண்ணத்துடன் புரட்டியபோது இது சமகால கதை மாந்தர்களைக் கொண்டு வரலாற்றைப் புகட்டும்விதமாக எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. வைக்கம் போராட்டமும் அதில் ஈடுபட்ட தந்தை பெரியாரின் பங்களிப்பும் கேள்விக்குள்ளான சமயத்தில் வைக்கம் போராட்டம் என்ற ஆய்வு நூலை எழுதினார் பழ.அதியமான். அவரே இந்நாவலுக்கும் முன்னுரை எழுதி உள்ளார். நாவலில் வரும் சுயமரியாதைக் குடும்ப உறுப்பினர்கள் கதையின் ஓட்டத்தில் வைக்கம் போராட்டம் பற்றி முழுக்க பேசி முடிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் காலந்துகொள்கிறார்கள். வைக்கம் சிவன் கோவிலைச் சுற்றிய தெருக்களில் கூட ஈழவர்களை நடக்கவிடாத வைதீகர்களை ஒரு வீட்டில் காந்தி சந்தித்துப் பேசுகிறார். வீட்டுக்குள் விடாமல் வெளியே நிறுத்திப் பேசுகிறார்கள். அந்த இல்லத்தில் உள்ளே செல்லும் கதை நாயகன் இனியவன் காந்தியையே வெளியே நிறுத்திய வீடா என்று அதன் நடுமுற்றத்தில் அமர்ந்து பார்க்கிறான். போராட்டத்தின் இறுதியில் சிவன் கோவிலைச் சுற்றி இருக்கும் நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் ஈழவர்கள் நடக்க மகாராணி அனுமதி அளிக்கிறார். கிழக்குப் பக்கம் குளம் இருப்பதால் அனுமதி அளிக்க வைதிகர்கள் மறுத்துவிடுகிறார்கள். அதெல்லாம் அந்தக் காலம். நாயகன் குளத்தில் இறங்குவதுடன் நாவல் முடிகிறது. வரலாற்றை சுவைபட திரும்பிப் பார்க்க வைக்கும் நாவல் இது.

நாலு தெருக்கத, கி.தளபதிராஜ், திராவிடன் குரல், 48, சாய்வேல் அடுக்ககம், பலராமன் நகர், பூவிருந்தவல்லி, சென்னை-58 பேச: 9443493766 விலை ரூ.200

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com