
திரைப்படம் என்பது ஒரு கலை .அது தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்குவதால் நாள்தோறும் வளர்ந்து வருகிறது.திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர் தான் தலைமை என்ற போதிலும் திரைப்படம் என்பது ஒரு சேர்ந்திசைப் பாடல் போன்றது எனலாம்.அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் அந்தக் கலை வடிவம் பெரிய மாயாஜாலங்களை கண்முன் நிகழ்த்தும் சாத்தியம் கொண்டது. திரைப்படம. ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும் ,இன்னொரு பக்கம் குறைந்த அளவிற்கு ரசனையை வளர்த்தாலும் அதன்வழி வெளிப்படும் நடிகர்கள் மிகை பிம்பம் கொண்டு வளர்ந்து வளரும் அபாயமும் உள்ளது.அப்படி வெளிப்படுபவரை யுக புருஷர்களாக லட்சிய மாந்தர்களாக நம்பக்கூடிய நிலை நிலவுகிறது . குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்தப் போக்கு தொடர்ந்து வருகிறது.சகல துறைகளிலும் இந்த சினிமா பிம்பம் சுய தகுதிகளை மீறி சம்பந்தப்பட்டவர்களைப் பல படிகளில் உயர்த்தி வைக்கிறது.
அரசியலில் சினிமாசெல்வாக்கு ஏற்படுத்தும் மிகை பிம்பங்களையும் அதன் விளைவுகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட நிலையில் சினிமாவை எப்படி அணுகுவது? சினிமா என்கிற கலையை அந்தத் தொழில் நுட்பத்தை அதற்கான புரிதலை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் அதுதான் இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள 'சினிமாவின் ஆன்மா' என்கிற நூலாகி இருக்கிறது.
உலகில் உள்ள எத்தனையோ தொழில்நுட்பம் போன்றதே சினிமாவும் .ஆனால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அதன் மீது இப்படி ஒரு மிகை மதிப்பு காட்ட வேண்டுமா? சினிமா எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும் ? உண்மையான சினிமா எது ?
திரையில் தோன்றுபவர்களை ஆராதிக்கும் மனநிலை எப்படி வருகிறது ? ரசிகவுள்ளம் வழிபடும் உள்ளமாக எப்படி மாறுகிறது?
மனச்சமநிலையில் சினிமாவை எப்படிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்?என்றெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பள்ளி பருவத்திலேயே ஒன்றாம் வகுப்பில் இருந்தே சினிமா பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் 'சினிமாவின் ஆன்மா' நூலாசிரியர் இயக்குநர் சீனு ராமசாமி.
சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும் கொண்டிருக்கிறது இந்த நூல்.
இயக்குநர் சீனு ராமசாமி இந்தியாவின் தேசிய விருது மட்டுமல்ல ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச அங்கீகாரம், அமெரிக்காவின் சடோனா மற்றும் ஹூஸ்டன் சர்வதேச விருதுகள் பெற்றவர்.
பாலுமகேந்திராவின் மாணவராக அறியப்படும் இவர், இதுவரை ஒன்பது படங்களை இயக்கியுள்ளார்.
ஓர் இயக்குநராக மட்டுமல்லாமல் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள நூலாசிரியரும் கூட .
இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.எல்லாவற்றுக்கும் மேலாகத் தீவிரமான தொடர் வாசிப்பாளராகவும் இருப்பவர்.
வணிக சினிமாவிலிருந்து கொண்டு அதன் வணிக சூத்திர பரமபதக் கட்டங்களில் நின்று கொண்டே சினிமாவில் இலக்கியத்தின் மணம் கமழ வேண்டும் என்று விரும்புபவர்,அதற்காக முனைபவர்.
இவரது படங்கள் மண்ணின் மணத்தையும் பிரதேச மொழிக் கூறுகளின் ஆன்மாவையும் தாங்கி நிற்பவையாக அறியப்படுகின்றன.
ரஷ்யாவுக்கு தமிழ் கலாச்சார பிரதிநிதியாக சென்று வந்த பெருமையும் இவருக்கு உண்டு.
சினிமாவைப் பள்ளி பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு ரசனைக்கானதான ஒரு கலையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
'உலக சினிமா என்பது எங்கோ அந்நிய தேசத்தில் எடுக்கப்படுவதில்லை. உலக சினிமா என்பது உள்ளூரில் எடுக்கப்படும் நேர்த்தியான சினிமா' என்கிற கருத்துடையவர் இவர்.
'நமது நிலத்தின் கதைகளை அதன் ஆத்மார்த்தமான ஈரத்தோடு நாம் பதிவு செய்யும் போது அது தானாக உலகளாவிய மொழியாக மாறி விடுகிறது' என்று நம்புகிறவர்.
அந்த வகையில் சமூக மதிப்பை மீட்டெடுக்கும் திரைப்படங்களை எதிர்காலத் தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பாலமாகவும் சினிமா ரசனைக் கல்வியை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இன்றைய குழந்தைகளுக்குக் காட்சி மொழி என்பது தாய் மொழியைப் போல இயல்பாக வாய்த்து விடுகிறது. அவர்கள் கைகளில் தவழும் அலைபேசிகள் நொடிக்கு 100 காட்சிகளை அவர்கள் மூளைக்குள் செலுத்துகின்றன. 'ஆனால் அவர்கள் கண்கள் எதைத் தேடிப் பார்க்கின்றன? அந்தப் பார்வை அவர்களை வன்முறையின் இருளுக்குள் தள்ளுகிறதா ?சக மனிதனின் வலியைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொடுக்கிறதா ? அல்லது ஒரு பூ மலர்வதைக் கண்டு வியக்கும் பேரன்பை நோக்கி நகர்த்துகிறதா என்பதுதான் நாம் இன்று விவாதிக்க வேண்டிய முக்கியமான கேள்வி' என்பவர், 'ஒரு குழந்தைக்கு நாம் எதைக் காட்டுகிறோம் என்பது தான் நாளைய சமூகம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கிறது' என்று கவலைப்படுகிறார்.
சினிமாவை வெறும் பொழுதுபோக்கு கலையாக பார்க்காமல் மனித மனங்களைச் செதுக்கும் கலையாக மொழிக்கு இணையான தொடர்புச் சாதனமாக பயன்படுத்தும் பல்வேறு நாடுகளின் சூழலை உதாரணப்படுத்துகிறார்.
'நம் இந்தியச் சூழலில் நாம் இன்னும் சினிமாவில் நட்சத்திரங்களைக் கொண்டாடும் திருவிழாவாக மட்டும் சுருக்கி விட்டோமோ' என்று கவலைப்படுகிறார்.'அந்தப் பார்வையை மாற்றி கலையை அதன் ஆழத்தோடு நேசிக்கக் கற்பிக்க வேண்டும் என்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம்' என்று தனது நோக்கத்தைத் தெளிவாக்குகிறார்.
ஜப்பானின் ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli )படங்கள் இயற்கை மீதான பேரன்பை ஒரு தாய் தன் குழந்தைக்குச் சொல்வது போல மிக நுட்பமாகப் போதிக்கின்றன.
ஜெர்மனியில் விஷன் கினோ ( Vision Kino) அமைப்பு சினிமாவை பள்ளிக் கல்வியின் ஓர் அங்கமாகவே மாற்றி மாணவர்களின் சமூக பார்வையை விசாலமாக்குகிறது.
இவ்வாறு சினிமாவை ஒரு கேளிக்கைக் கருவியாகப் பார்க்காமல் சினிமாவின் மூலம் நல்ல விழுமியங்களை வளர்த்தெடுக்கும் ஒரு மகத்தான சாதனமாக பயன்படுத்த முடியும் என்று பல்வேறு தரவுகளின் மூலம் நம்பிக்கையூட்டுகிறார்.
குழந்தைகளுக்கான ரசனைப் பாடமும் திசைகளும் என்ற தலைப்பில் ஏராளம் பேசுகிறார்.
முதல் வகுப்பில் வண்ணங்களும் உயிர்களும், என்று அறிமுகப்படுத்திப் பள்ளிக் குழந்தைகளின் வயதுக்கேற்ப விழுமியங்களை வெளிப்படுத்தும் திரைப்படங்களை ரசிப்பதற்குப் பழக்க வேண்டும் என்று வகுப்பு வாரியாகப் பட்டியலிடுகிறார்.
இரண்டாம் வகுப்புக்கு உணர்ச்சிகளின் திறவு கோல்,மூன்றாம் வகுப்புக்கு பகிர்தலின் பேரழகு,நான்காம் வகுப்பிற்கு நிலமும் நீரும் ,ஐந்தாம் வகுப்பிற்கு உழைப்பும் உன்னதமும் இன்று விழுமியங்களை வரிசைப்படுத்தி அறிமுகப்படுத்துகிறார்.
சின்ன வயதில் பார்க்க வேண்டிய 20 திரைப்படங்களை பட்டியலிட்டுள்ளார்.
தி ரெட் பலூன், நண்பனின் வீடு எங்கே ?, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் , மை நெய்பர் டோட்டோரோ , பதேர் பாஞ்சாலி, தி கிட், தி ஒயிட் பலூன் , போன்யோ, தி சாங் ஆஃப் த ஸீ, ஹெய்தி , கிகுஜிரோ,தி கலர் ஆப் பாரடைஸ், வஜ்தா, ஃபைண்டிங் நிமோ, ஈ.டி தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல், வேல் ரைடர், தி 400 ப்ளோஸ் , தி சீக்ரெட் வேர்ல்ட் ஆஃப் அரியேட்டி,ஈரானிய மனித நேய சினிமா, சினிமா பாரடைசோ என்று 20 படங்களை உதாரணமாகக் காட்டி திரை ரசனை வளர்க்கத் தூண்டுகிறார்.
பள்ளிச் சூழலில் சினிமா ரசனை அறிமுகம் என்கிற இந்த செயல் திட்டத்தில் இந்த நூல் ஒரு சிறு அறிமுக முயிற்சி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு தொடர் செயலாக தொடர் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது . அப்படி வளர்வதன் முதல் பல்வேறு தவறான கற்பிதங்களிலிருந்தும் மாயையிலிருந்தும் மாணவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முடியும்.
அது சார்ந்த முன்னெடுப்புகளுக்குத் தான் என்று உதவிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ரசனை மீட்பு மூலம் மாயைகளில் இருந்து விடுதலை பெற முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த நூல்.
சினிமாவின் ஆன்மா, கட்டுரை நூல் ,பக்கங்கள்: 140, விலை ரூ. 180, வெளியீடு :சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு,9 வது அவென்யூ,அசோக் நகர், சென்னை 83. போன் :98409 52919