ஆண்களுக்கு உணர்த்துதல்

ஆண்களுக்கு உணர்த்துதல்

ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள் என்ற ஒரு குறிப்புத் தொடருடன் தன்னை முன்னறிவித்துவிடுகிறது இந்நூல். பெண்களின் பார்வையிலிருந்து ஆண்களின் இயல்புகளை, செயல்பாடுகளை விமர்சிக்கும் அதைவிட தோழமைச் சுட்டலாகச் சொல்லும் நூலாக இதைச் சொல்லலாம். தாம் செய்வது வழக்கமாக தன் தந்தையர், தாத்தாக்கள் செய்துகொண்டிருந்த பெண்ணடிமைப் பார்வை பூசிய செயல்கள்தான் என்பதை ஆண்களுக்கு உணர்த்தும் விதத்தில் இக்கட்டுரைகளை எழுதி உள்ளார் நூலாசிரியர். பாலின வேறுபாடற்ற நட்பு வேண்டும் என்பதை பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் சங்கம் கட்டுரையில் வலியுறுத்துகிறார். இன்னமும் பெண்களின் கண்ணைப் பார்த்துப்பேசத் தயங்கும் ஆண்பிள்ளைகள் இருக்கும் காலம்தான் இது என்கிற நோக்கில் இது மிக அவசியமானதொரு கட்டுரையாகும். பெண்கள் மீது அலுவலகங்களில் பேசப்படும் கிசுகிசுக்கள், திரைப்படங்களில் தொடரும் பெண்வெறுப்பு, ஆண்களின் அரசியல் உலகில் பெண்களின் நுழைவு போன்ற பல விஷயங்களை அழகாக அலசுகிறது இந்நூல். தாயைத் தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் தனக்கு இணையாக வந்தவளும் தாய்போலத் தன்னைக் காக்கவந்தவள் என்று ஆண்கள் வரித்துக்கொள்வது எவ்வளவு தவறு என்று சுட்டிக்காட்டும் இடத்தில் எழுத்தாளரின் பேனா நிமிர்ந்து நிற்கிறது.

குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!ஜெ.தீபலட்சுமி 

வெளியீடு:

ஹெர் ஸ்டோரீஸ், 15, மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,

1, ராக்கியப்பா தெரு, சென்னை -  600004

நாட்டியப் பேரொளி

 திரைப்பட நடிகை பத்மினியின் கலை வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பதிவுசெய்யும் நூல் இது. திருவனந்தபுரத்தில் பிறந்து கலைஉலகில் வெற்றிக்கொடி நாட்டிய லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் திருவாங்கூர் சகோதரிகள் எனப்பட்டனர். இதில் பப்பி எனப்பட்ட பத்மினி, திரையுலகில் நாயகியாகச் ஜொலித்தார். திருவனந்தபுரத்தில் சிறுவயதில் நாடகம் ஒன்றில் நாரதராக பத்மினி நடித்தார். அந்நாடகத்தில் கிருஷ்ணன் வேடமிட்ட இன்னொருவருக்கு கோப்பை அளிக்குமாறு அந்நாடகத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ கிருஷ்ணனை விட நாரதராக நடித்த பெண்ணே பாராட்டுக்குரியவர் எனப் புகழ்ந்து எதிர்காலத்தில் பேரும் புகழும் பெறுவார் என்றும் பாராட்டினார். அவரது வாக்குப் பொய்க்கவில்லை என்பதை காலம் நிரூபித்தது. 1943இல் ஜெமினி தயாரித்த கல்பனா என்ற இந்திப்படத்தில் துணை நடிகையாக ஒப்பந்தமானார் பத்மினி. ஆனாலும் இப்படம் வெளியாவதற்கு முன் 1947 - இல் வெளியான கன்னிகா என்ற படத்தில் பத்மினி நடனம் ஆடினார். ஆகவே இந்த படமே பத்மினி முதலில் தோன்றிய படம் ஆயிற்று. இந்திய விடுதலையும் பத்மினியின் முதல் படமும் ஒரே ஆண்டு. அதற்கடுத்த எட்டு ஆண்டுகளில் லலிதா- பத்மினி சகோதரிகள் சுமார் 60 படங்களில் தோன்றி நடனம் ஆடியிருக்கிறார்கள் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கலைவாணரின் மணமகள் படம்தான் பத்மினி நாயகியாக அறிமுகமான முதல் படம். இதிலிருந்து தொடங்கி, பத்மினி நடித்த தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட்ட அனைத்து படங்களைப் பற்றியும் புகைப்படங்களுடன் விரிவாக எழுதி மலைக்கச் செய்கிறார் நூலாசிரியர். அக்கால பத்திரிகைகளில் வெளியான அவரது பேட்டிகள், தகவல்கள் என எதையும் ஒன்றுவிடாமல் தொகுத்து பத்மினி பற்றிய முழு விவரங்களைத் தந்துள்ளார். தமிழ் சினிமா ஆய்வாளர்களுக்கு பல பயனுள்ள தகவல்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன.

நாட்டியப்பேரொளி பத்மினி,

திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்,

வெளியீடு: வாலி பதிப்பகம், தாமிரபரணி,

எம் - 8, இரண்டாவது தெரு, அழகாபுரி நகர்,

ராமாபுரம், சென்னை 89 பேச: 9040508595, விலை ரூ. 800

நஞ்சில்லா உணவு

 கீழத்தஞ்சை மாவட்ட வட்டார வழக்கைப் பதிவு செய்யும் படைப்புகள் தமிழில் குறைவாகவே வந்துள் ளன. அதைச் சரிசெய்யும் முயற்சிகளில் ஒன்றாக அப்பகுதி பேச்சுவழக்கை முழுமையாகப் பதிவு செய்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலைச் சொல்லலாம். நாவலாசிரியர் இயற்கை வாழ்வியலின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் அதையேயே நாவலின் களமாகத் தேர்வு செய்துள்ளார். சென்னையில் வாழ்க்கையை நடத்துவதற்காக ஓடிவந்த நாயகன், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு, தன் ஊருக்கே திரும்பிச் சென்று, அதைச் செய்து மனநிம்மதி கொள்வதுதான் இந்நாவலின் சாரம். விறுவிறுவென ஓடிக்கொண்டிருக்கும் நகரவாழ்வின் அல்லல்களை விட்டுச் செல்ல விருப்பம் பலருக்கும் இருக்கும்தான். ஆனால் வாழ்க்கைச் சூழல் மேலும் மேலும் வேகமாக ஓடவைக்கும். இந்நாவலின் நாயகன் செல்லமுத்து, அந்த சங்கிலியை உடைத்தெறிந்து, தன் மண்ணுக்கே திரும்பிச் செல்கிறான்.  அங்கே பாரம்பரியமான வேளாண்மையை தான் செய்வது  மட்டுமல்லாமல் ஊர் மக்களையும் அதை நோக்கித் திருப்புகிறான். ரசாயன உரத்தையும் பூச்சிக் கொல்லிகளையும் போட்டு உணவை விஷமாக்கிட்டீங்க என்கிற நம்மாழ்வாரின் லட்சியவாதக் குரல் நாவல் முழுக்க  ஒலிக்கிறது. கிராமப்புற மரங்கள், விவசாயப் பழக்கங்கள், புல் பூண்டுகள் என நகர்ப்புறத்துக்கு வந்தவர்களிந்நாவலில் அவற்றின் பெயர்களை பல காலம் கழித்துப் பார்க்கலாம். கொழுஞ்சி என்ற ஒரு வகைப் பூண்டும் அதிலுண்டு. செல்லமுத்துவும் ஊர்க்காரர்களும் சேர்ந்து நடத்தும் அமைப்புக்கும் இது பெயர். ஒரக்குழி என்பது மாட்டுச்சாணம் உட்பட்ட இயற்கையான உரப்பொருட்களை வயலிலேயே மக்குவதற்காக சேர்த்து வைக்கும் குழி.  அதையே ஒரக்குழி என நாவலின் தலைப்பாக ஆக்கி இருக்கிறார். இயற்கை விவசாயத்தைப் பேசும் இந்நாவல் அத்துடன் ஒரு வட்டாரத்தின் விவசாய வாழ்க்கையையும் பதிவு செய்கிறது.

ஒரக்குழி, வானவன்,

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 பெற்ற நாவல், வெளியீடு: எழுத்துபிரசுரம்,

எண் 55(7), ஆர் பிளாக்,

6வது அவென்யூ, அண்ணா நகர்,

சென்னை 600040. விலை ரூ 290

சோழ வரலாறு

 பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவானான ராஜராஜனின் காலத்தைப் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. கல்வெட்டுகள், தாமிரப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், அறிஞர்களின் கட்டுரைகள் நூல்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து சான்றுகளுடன் இந்நூல் ராஜராஜனின் காலம் பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறது. பிற்காலச் சோழர்களின் தொடக்கம், வளர்ச்சி பற்றியும் விரிவாகப் பேசும் இந்நூல் ராஜராஜன் காலத்து கட்டடக் கலை, ஊர் நிர்வாகம், வரி நிர்வாகம் பற்றியும் சமூகச் சூழல் பற்றியும் தெளிவான சித்திரங்களைத் தருகிறது. காந்தளூர் சாலை கலமறுத்தருளிய என்கிற மெய்கீர்த்தி ஒரு துறைமுகத்தில் இருந்த கலங்களை அழித்த என்றே பொருள் கொள்ளப்படவேண்டும் என இந்நூல் வாதிடுகிறது.  சோழர்கள் காலத்து இலக்கியங்கள் பற்றிய கட்டுரை சங்ககாலத்தில் தொடங்கி, தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் ஏற்பட்டு வந்த மாறுதல்களை விரிவாக விளக்கிய பின்னர் அந்த அடித்தளத்தில் நின்று சோழர்கால இலக்கியங்கள் பற்றிப் பேசுகிறது. அவர்கள் சைவர்களாக இருப்பினும் வைணவம் புறக்கணிக்கப்பட வில்லை. ராஜராஜன் காலத்தில் வைணவக் கோயில்களுக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நூலில் பிற்பகுதியில் கொடுக்கப் பட்ட அடிகுறிப்புகள் மேலும் விரிவான வாசிப்புக்கு நம்மைத் தூண்டுகின்றன.

ராஜராஜ சோழன், ராகவன் சீனிவாசன்,

தமிழில்:ஸ்ரீதர் திருச்செந்துறை,

வெளியீடு: சுவாசம் பதிப்பகம், 52/2,

 பி எஸ் மஹால் அருகில், பொன்மார்,

சென்னை 600127. விலை ரூ 250

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com