இயற்கைக்கான குரல்

இயற்கைக்கான குரல்
Published on

கீழத்தஞ்சை வட்டார மொழியில் எழுதப்பட்ட நாவல். சென்னையில் இருந்து நஞ்சில்லாத வேளாண்மை செய்யவேண்டும் என்பதற்காக கீழத்தஞ்சை கடற்கரையோர கிராமத்துக்குத் திரும்பும் செல்லமுத்து என்கிற ஆர்வலரின் கதையாக இந்நாவல் விரிகிறது. நாவலாசிரியர் வானவன் ஏற்கெனவே எழுதிய ஒரக்குழி என்ற நாவலின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். கொளஞ்சி என்ற பெயரில் கிராமவாசிகளின் இயற்கை விவசாயக் குழு ஒன்றை அமைக்கும் செல்லமுத்துவுக்கு நாகப்பட்டினத்தில் அரசு தரும் விற்பனைக் கடைகள் ஒதுக்கப்படுகின்றன. நஞ்சில்லாத கீரை, மதிப்புக்கூட்டிய உணவு வகைகளை அந்த கடைகளில் தம் குழு சார்பாக விற்கத் தொடங்குகிறார். இந்த வரிகளுக்கு இடையில் மரம் வளர்ப்பு, பனை விதைகள் விதைப்பு, இயற்கை மீதான ஆர்வம், விஷமில்லாத உணவுகள் என விரிந்து செல்கிறது நாவல். மறந்துபோன கிராமத்து உணவுகள் பக்கத்துக்குப் பக்கம் செல்லமுத்துவின் மனைவி சமைத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அந்த உணவுகளின் ருசியைப் பற்றி எழுதி, அவற்றை கலெக்டர் முதல் சாமானியர் வரை உண்டு உற்சாகம் அடையும் காட்சிகளை அழகாக எழுதி இருக்கிறார். நம்மாழ்வார் போட்டுவைத்த கனவுப் பாதையில் பயணம் செய்யும் கிராமத்து இளைஞர்களின் கதை. நஞ்சின்றி மண்ணைக் காக்கப் போராடும் சமகாலப் போராளிகளும் இந்நாவலில் பாத்திரங்களாக வந்துபோகிறார்கள்.

நாவல் என கடந்து செல்லாமல் ஓர் இயக்கத்துக்கான ஆவணமாக இதை வாசிக்கலாம். கடலும் தென்னையும் பனையும் சூழ்ந்த ஒரு கிராமத்தை நஞ்சின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சிக்கான தொடக்கமாகவும் வாசிக்கலாம்.

போத்து, வானவன், நாற்கரம், சென்னை-600074, பேச: 95510 65500. விலை ரூ: 330

logo
Andhimazhai
www.andhimazhai.com