அழகான சினிமா

அழகான சினிமா

' கிடாயெ அப்பிடியே படுக்கப் போடுங்கடே' என்று ராமசுப்பு ,ட்ராக்டரின் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி பின்னால் திரும்பிச் சொல்வதுடன் ஒரு சினிமா ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ , அப்படியே தான் ஏக்நாத் நாவல் ' சாத்தா' வும் ஆரம்பிக்கிறது.

ஒரு பக்கா ஸ்க்ரிப்டை நாவலாக எழுதியிருக்கிறார். சீன் பிரித்து, பிரமாதமா வசனமும், லொகேஷனுமாக இருக்கிற இதை அப்படியே படம் பிடிக்கத் துவங்கிவிடலாம்.

காட்டில் இருக்கிற சாத்தாவை ஊருக்குள் இறக்குதல் என்பது தான் ஒன் லைன். கதாநாயகன் - கொத்தனார் இசக்கியின் தம்பி - முத்துசாமி ஏற்கனவே கோ டைரக்டராக இருப்பவர். அவர் பார்வையில் தான், கதை சொல்லப் படுகிறது. பொதிகை , அம்பை ஆஸ்பத்திரி , முதலியார்பட்டி, மறைமலை நகர் தி.நகர் மேட்லி ரோட், துக்காராம் மூன்றாவது தெரு, மலேஷியா கெந்திங் ஹைலேண்ட், சென்னை ஏர்போர்ட் என்று லொகேஷன்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.ஆண்டி, செவநம்பி, மாசானம், விசில் மணி, ராசாமணி, அந்த சென்னை அறைத் தோழ்ரான மெடிக்கல் ரெப் ,அவர்களுக்கு ஏக்நாத் எழுதியிருக்கும் அச்சசல் திருநவேலிப் பேச்சும், சென்னைக் குடிமொழியும்.முத்துசாமி யசோதா காதல் கதை அதன் ஃப்ளாஷ் பேக் சோகம் எல்லாவற்றையும் விட, அந்த முத்தையாவுக்கும் லட்சுமி டீச்சருக்குமான இடங்கள் அருமையாக இருக்கின்றன. லேசாக முத்துசாமிக்கும் மரகதத்துக்கும் சாத்தாவைக் கும்பிட வந்த இடத்தில் உண்டாகும் தம்தன தம்தன தாளம் மென்மையானது.குல தெய்வம் பாட்டி காட்டில் இருந்து கீழே இறங்கமாட்டேன் என்று சாமியாடுவது, செவநம்பிக்கும் மாசானத்துக்கும் கிடாவெட்டுக்குப் பிறகு பந்தியில் நடக்கும் தகராறு...

அதுதான் சொல்லிவிட்டேனே. அப்படி ஒரு அழகான சினிமா இதில் இருக்கிறது. என்னை டிஸ்கஷனுக்குக் கூப்பிட்டால் ஏக்நாத்தின் ' கிடைகாடு' நாவலின் இரண்டு மூன்று காட்சிகளையும் விஷுவல்ஸையும் தூக்கி இதில் வைத்துப் பிரமாதப் படுத்திவிடுவேன்.

என்ன முதல் வரியில் இருந்தே , சாத்தா நாவல் குறித்து, வேறொரு விதமாக , சந்தோஷத்தில் குதிக்கிறது போல,, எழுதிக்கொண்டே போகிறானே இவன் என்று தோன்றுகிறதா?!சந்தோஷம் தான். நிஜமாகவே ஒரு சினிமாகவே இந்த நாவலைப் பார்த்துக் குதித்துக்கொண்டு இருக்கிறேன். ஏக் நாத் இந்த நாவலை எனக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

சாத்தா (நாவல்) ஏக்நாத், விற்பனை உரிமை: ஸ்நேகா, விலை: ரூ.220

-வண்ணதாசன் (முகநூலில் எழுதியதிலிருந்து)

நமக்கே பறை தருவான்

இறையும் பறையும் எதிரெதிர் நிலை அல்ல என்பதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நிறுவியுள்ளார் இந்த நூலில் முனைவர் மு.வளர்மதி. காரைக்காலம்மையார், திருஞானசம்பந்தர் தொடங்கி அருணகிரிநாதர் வரையிலான பக்தி இலக்கியங்களில் பறை என்கிற இசைக்கருவி எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது மிக அழகாக இந்நூலில் விளக்கப்படுகிறது. பறை மட்டுமல்லாமல் தமிழர்களின் பழங்கால இசைக்கருவிகளைப் பற்றியும் எப்படி பறை என்பது குறிப்பிட்ட சாதி அடையாளமாக்கப்பட்டது எனவும் விளக்குகிறார் ஆசிரியர். சமூக விழிப்புணர்வுக்காக பறை இசையை தற்காலத்தில் மீட்கும் முயற்சிகள் பற்றியும் இந்நூல் விளக்கம் தருகிறது. ஓர் இசைக்கருவி மீதான பார்வையை மாற்றி அமைப்பது மட்டுமல்ல இந்நூலின் நோக்கம். அதன் மூலம் சமூகக் கொடுமைகளை மாற்றி அமைப்பதுவும்தான்.

இறையும் பறையும், முனைவர் மு.வளர்மதி, வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்ஹா, லாயிட்ஸ் சாலை, சென்னை 600005, பேச: 9444272500 விலை: ரூ.170

பாம்புகளும் பாம்புராணிகளும்

சிப்பிப்பாறை என்னும் கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவனின் வாழ்க்கைப் பாதை வளைந்து நெளிந்து கடினமாக பாறைகளைத் தாண்டி மேலே செல்கிறது. தன் வழியில் கண்ட சுவாரசியங்களை எழுத்தில் வடிக்கிறது. இது சுயசரிதைதான். தன் வாழ்வில் கண்டவற்றை பாம்புகள் முதல் தேர்வுகள் வரை தொகுத்து எழுதி அதனுடன் பழந்தமிழ் இலக்கியம் கூறும் தொன்மையான நிகழ்வுகளை சேர்த்து எழுதுவதன் மூலம் பெரும் இலக்கியப் பாடமே நடத்த முயன்றுள்ளார் நூலாசிரியர். மெய்வருத்தக் கூலி என்ற தலைப்பிலான கட்டுரை சிவில்சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற புது டெல்லி செல்வதற்காக பணம் கேட்பதில் இருந்து தொடங்குகிறது. சில ஆயிரங்களுக்கே தள்ளாடும் அந்த குடும்பம் கடன் வாங்கியோ நிலம் விற்றோ அவருக்குப் பணம் தந்து டெல்லி நோக்கி நம்பிக்கையுடன் அனுப்புகிறது. மிக உருக்கமான இக்கட்டுரை, ஒவ்வொரு இளைஞரும் வாசிக்கவேண்டியது.

மெய்ப்பாடுகள் (வாழ்வனுபவக் கட்டுரைகள்), இரா. திருப்பதி வெங்கடசாமி ஐஏஏஎஸ், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50, பேச: 044-26251968, விலை: ரூ 280

பேசிக்கொண்டே செல்வோம்!

நீண்ட மேடைப் பயணமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் இறையன்பு. அத்துடன் எதையும் சுவாரசியமாக எழுதிவிடும் திறனும் வாய்ந்தவர். அவரது புதிய நூல் பேச்சுக்கலை பற்றி வந்திருக்கிறது. பேச்சுக்கலை என்றால் மேடையில் பேசுவது மட்டும் எனக் குறுக்காமல் தனிமனிதர்களிடையே, அலுவலகத்தில், விழாக்களில், என சகல அம்சங்களி்லும் எப்படியெல்லாம் மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று துல்லியமாக எழுதியிருக்கிறார். ஏராளமான தகவல்களைத் திரட்டி, உலக அளவிலான முக்கிய தகவல் தொடர்பியல் நூலாக இதை ஆக்கி இருக்கிறார். ஆங்காங்கே பொடிப்பொடியாக அவருக்கே உரிய நகைச்சுவை. மதுரை மண்ணின் மைந்தர்களான ந. முருகேசபாண்டியன், ஆத்மார்த்தி இருவரும் அணிந்துரைகள் எழுதி உள்ளனர். மொழியைப் பயன்படுத்தி மனிதர்கள் மேற்கொள்ளும் தொடர்பாடல் குறித்த முழுமையான நூலாக இதைக் கருதலாம்.

என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!! இறையன்பு, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50, பேச: 044-26251968 விலை: ரூ. 1000

சோளப்பேரரசு!

குரங்கொன்று குரங்காட்டியின் மூக்கை செல்லமாகக் கவ்வும் படமொன்றை அட்டையில் தாங்கி வெளியாகி இருக்கிறது கார்த்தியின் மனுசபுராணம் கவிதை நூல். உப்பளத் தொழிலாளி, சர்க்கஸ் குள்ளன், தோல்பாவைக் கலைஞன், மக்காசோளம் சுடுபவள்(அடடே… கார்த்தி!), குதிரைக்காரன், ஐஸ்காரர், கீரை தருபவள், கோலப்பொடிக்காரர் என நாம் அன்றாடம் பார்க்கிற அறுபது மனிதர்கள் பற்றிய கவிதைகளை இந்நூலில் தந்துள்ளார். அழகானதொரு மொழிநடை, சிறப்பான ஓசை நயம் கொண்ட இக்கவிதைகளில் ஆங்காங்கே பிறந்திருக்கும் புதுமையான சித்திரங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

 கலர்க்கோழிகள் விற்பவனைப் பற்றி கவிதை எழுதமுடியுமா? கார்த்தி எழுதி இருக்கிறார். இன்குபேட்டரை அம்மாவாகக் கொண்டவை, சண்டை தெரியாத லெக்கார்ன் சேவல் , குஞ்சென்று சொல்லும்போது கூட்டத்தில் கூடும் சிரிப்பு போன்ற வரிகளில் தெரிகிறது புதியதொரு அன்றாடம். தேசிய நெடுஞ்சாலை ஆரியபவனில் கொடியசைத்துக் கூப்பிடுபவனை இந்நூலில் ஓரிடத்தில் தரிசிக்கிறோம். அவன் ஆள்வதற்குக் கிடைத்திருப்பதோ ‘சோளப்பேரரசு.’ ஒவ்வொரு மனிதருக்கும் அருமையான ஒளிப்படம் தந்திருப்பதும் சிறப்பே.

மனுசபுராணம், கார்த்தி, வெளியீடு: தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை - 635307 கிருஷ்ணகிரி மாவட்டம், 9843870059, விலை: ரூ.200

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com