நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம்
Published on

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளரான வாசு முருகவேலின் சிறிய நாவல் மணிபல்லவம். மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையை மணிபல்லவம் என்ற தீவில்தான் மணிமேகலாத் தெய்வம் கொண்டுபோய் வைக்கும். பசிப்பிணி போக்கும் அமுதசுரபியை இங்கிருந்துதான் மணிமேகலை பெறுவாள். தற்போது இலங்கையில் உள்ள நயினா தீவுதான் அத்தீவு எனக் கருதப்படுகிறது. 1985-இல் நெடுந்தீவிலிருந்து நயினா தீவுக்கு குமுதினி என்றொரு படகு மக்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அப்படகைச் சூழ்ந்துகொண்ட சிங்களப்படையினர் அதிலிருந்த மக்களை ஆயுதங்களால் கொன்று குவித்தது, ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க இயலாத துயரங்களில் ஒன்று. இந்த கொடூர நிகழ்வின் மீதாக ஒரு படைப்பை எழுதிப் பார்த்திருக்கிறார் வாசு முருகவேல். தீவு வாழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்கள், வழக்கங்களை சொல்லி, ஷோபா என்றொரு பெண்ணின் கதையாக இது செல்கிறது. தீவின் காதல்கதைகள், ராணுவக் கண்காணிப்பு கோபுரம், புழுதியில் செல்லும் சைக்கிள், கடற்காற்று என நயினா தீவின் சித்திரம் முருகவேலால் கட்டி எழுப்பப்படுகிறது. இறுதியில் சிங்கள ராணுவ முகாமுக்குத் திரும்பிச் செல்லும் பண்டார என்கிற சிங்கள வீரனின் சித்திரம் உணர்த்துவது அதிகாரத்தின் கொடுங்கரங்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை என்பதையே. சுனில் கிருஷ்ணன் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல் இந்நாவல் அங்கு வாழ்ந்தவர்களுக்கும் மறைந்தவர்களுக்குமான நினைவுச் சின்னம்.

மணிபல்லவம், வாசு முருகவேல், நீலம் பப்ளிகேஷன்ஸ், பேச: 9894525815 விலை ரூ 150

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com