ஆற்றின் இக்கரையில்/ புள்ளிமானும் அதன் சிறுகுட்டியும்/ பொறுமையாக நீர் அருந்துவதை/ அக்கரையில் நடந்தபடி/ பார்த்துக்கொண்டே போகிறது சிறுத்தையும் அதன் குட்டியும்/- இந்த வரிகளினூடாக அழகிய காட்சி ஒன்றைச் சொல்கிறார் தன்னுடைய இந்த ஒன்பதாவது கவிதைத் தொகுப்பில் இயக்குநர் சீனுராமசாமி. சிறுத்தை ஏன் அக்கரையில் இருக்கும் மான்குட்டியை வேட்டையாடச் செல்லவில்லை? இந்த வரிகளுடன் நிறுத்தி இருந்தால் நமக்கு இந்த கேள்விக்கு நாமே ஒரு விடையைத் தேடிக்கொண்டிருப்போம். கவிஞர் மேலும் தொடர்ந்து செல்கிறார்:
பிரபஞ்சத்தின் பேரருளாக
மான்களுக்கும்
சிறுத்தைகளுக்கும்
வாழ்வின் சவாலாக
இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு – என முடிக்கிறார். ஆற்றைக் கடத்தல் என்பது சிறுத்தைக்கு அந்த கணத்தில் ஆகாத காரியமாக இருக்கிறது எனப் புரிந்துகொள்கிறோம். அல்லது சிறுத்தைக்கும் அதன் குட்டிக்கும் வயிறு நிரம்பி இருக்கலாம்.
தடுப்பணைகளை உடைக்காமல்
கரைகளை உடைத்துக்கொண்டு வெளியேறுகிற
நிறை கண்மாய்
ஒரு முழுப்பைத்தியம்
-என்கிறார். ஏனாம்?
அடைப்பவனை விட்டுவிட்டு
அணைப்பவனை
அடித்துவிடுகிறது.
இதுபோன்ற எளிய சொற்களில் ஆழமான உணர்வுகளைக் கடத்தும் கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு.
நதியழகி, சீனு ராமசாமி, வெளியீடு: நாதன் பதிப்பகம், 16/10 பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், சென்னை 600093 பேச: 9884060274 விலை ரூ 120.