பள்ளிக்கூடம் தொடங்கி பல்கலைக் கழகப் படிப்புவரை தான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன். நமக்கெல்லாம் பள்ளிக்குள் முதல்முதலாக நுழைந்த நாள் ஞாபகம் இருக்கிறதா? 1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, அப்பாவின் கைப்பிடித்து மங்கம்மாள் சத்திரம் எனும் காரைக் கட்டடத்தில் இயங்கிய தொடக்கப்பள்ளிக்குள் முருகேச பாண்டியன் விவரிக்கிறபோதும் நாமும் உடனிருப்பதுபோலிருக்கிறது. வகுப்பில் ஏதோ தவறிழைக்கையில் ஆசிரியை குப்பம்மாவின் பிரம்பு சுழலுகிறது. மு.பா.வின் தலையில் இருந்து ரத்தம் சொட்டுகிறது. மறுநாள் அவரது அம்மா தங்கம் பள்ளிக்கு வந்து ஆசிரியையை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் காட்சி, அன்றைக்கு சகஜம். இன்றைக்கு ஆச்சரியம்!
நான்காம் வகுப்பிலேயே வாசிப்பின் ருசி அறிகிற மு.பா. தன்னை வளர்த்துவிடும் அத்தனை ஆசிரியர்களையும் அவர்களின் வாசனையுடன் நினைவுகூர்ந்துகொண்டே செல்கிறார். அவரது கிராமமான சமயநல்லூரின் தெருக்களில், அவரது அப்பச்சியின் நெல் அரவை ஆலையில், அவர் பள்ளியருகே வாங்கி உண்ணும் சோளக் கருதில், பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் எல்லாவற்றிலும் நாமும் உடனிருக்கிறோம். பள்ளியிலிருந்து புதுமுக வகுப்புக்கும் கல்லூரிக்கும் மு.பா. வளர்கிறார். கணிதத்தில் இளநிலை, தமிழில் முதுநிலை படிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் துள்ளல்கள், நாடகங்கள், விடுதி வாழ்க்கை என மதுரையின் அக்கால கல்லூரிச் சூழலை அறியமுடிகிறது.
வாசிக்கும் ஒவ்வொருவரையும் தங்கள் கல்விக் காலத்தையும் நினைத்து அசைபோடச் செய்கிற நூலாக இது உருவாகி இருக்கிறது. இறையன்பு எழுதியிருக்கும் முன்னுரை அழகானதொரு வாசிப்பு அனுபவம்.
என் வகுப்பறை வாசனை, ந.முருகேசபாண்டியன், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50, பேச: 044-26359906, விலை ரூ:220.