எண்ணங்களும் வண்ணங்களும்!

எண்ணங்களும் வண்ணங்களும்!
Published on

தனது கவிதைகளையே புகைப்படப் படிமங்களாக விரிப்பவர் கல்யாண்ஜி. தனது புகைப்படங்களையே கவிதையாக வெளிப்படுத்துபவர் புதுவை இளவேனில். இந்த இருவரது சேர்மானத்தில் உருவாகியிருக்கும் நூல் 'ஒளியில் மிதக்கும் சொற்கள்',

படைப்பாளனைப் புகைப்படங்களால் கொண்டாடி வருபவர் புதுவை இளவேனில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி புகைப்படங்களோடு 'ஒளியில் வடியும் படிமம்'என்று தொடங்கி, கி.ராஜநாராயணனின் புகைப்படங்களோடு 'ராஜபவனம்', கி.ரா. மிச்சக் கதைகள்', ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியங்களோடு கொண்ட 'உயிர்க்கோடுகள்', பிரபஞ்சனின் புகைப்படங்களுடன் 'பிரபஞ்சன் 55' ஆகிய நூல்களின் வரிசையில் கல்யாண்ஜியின் ஒளிப் படங்களோடு 'கல்யாண்ஜி: ஒளியில் மிதக்கும் சொற்கள்' நூல் வந்துள்ளது.

கல்யாண்ஜி இந்த நூலின் முன்னுரையில் ஓர் இடத்தில் கூறுகிறார், 'எதைத்தான் எழுத முடியாது? எனக்கும் எனக்கு உள்ளும் எனக்கு வெளியிலும், உங்களுக்கும் எனக்கும் இடையிலும், நமக்கும் நமக்கு மத்தியிலும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைதானே இவற்றின் ஒரு மலர்,ஓர் இலை, ஒரு வரி, ஒரு சொல்' என்று.

இன்னோரிடத்தில் 'என் சாயல்கள் மாறுவது எனக்குப் பிடித்திருக்கிறது. சாயல்கள் மாற மாற நான் சாயலற்றவன் ஆவேன் எனும் நம்பிக்கையை நான் அன்றாடம் எழுதும் கவிதைகள் அளிக்கின்றன: என்கிறார். இந்நூலில் கல்யாண்ஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பேசும் சித்திரங்களாகப் புதுவை இளவேனில் எடுத்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் எண்ணங்களும் புகைப்படக் கலைஞரின் வண்ணங்களும் சேர்ந்து இந்த நூலில் தனி அழகு காட்டுகின்றன.

அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பாவனை செய்து எடுத்த படமாக அமையவில்லை. கணத்தின் காலத்தை உறைய வைத்த புகைப்படங்களாக அற்புத தருணங்களின் சாட்சியங்களாக காணப்படுகின்றன.

கல்யாண்ஜி: ஒளியில் மிதக்கும் சொற்கள், வெளியீடு: சந்தியா பதிப்பகம், அசோக் நகர் சென்னை 600083. விலை ரூ 800.

logo
Andhimazhai
www.andhimazhai.com