புனைவும் நிஜமும்

புனைவும் நிஜமும்
Published on

பத்திரிகையாளர் சுந்தர புத்தன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதியிருக்கும் நாவல் 'பெரியவன்'. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு ஒரு தினசரி நாளிதழின் பகுதி நேர நிருபராகப் பணிபுரியும் நடராசன் தான் கதையின் நாயகன்.

குடும்பத்தின் பாரங்களைச் சுமந்து கொண்டும், இருக்கும் சொற்ப நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டும் அந்தச் செய்தியாளர் பணியைத் தொடர்கிறார். தன்னளவில் எழுத்து, வாசிப்பு என்று இறுதிவரை தொடர்ந்து வருகிறார். அதன் மூலம் தன்னளவில் விடுதலை அடைவதாக உணர்கிறவர், பொருளாதார வாழ்க்கையில் மிகவும் தோல்வியுற்றவராக இருக்கிறார்.

திராவிடர் கழகத்தின் தீவிரத் தொண்டராகவும் கட்சிப் பணிகளிலும் மாநாட்டுப் பணிகளிலும் ஈடுபடுகிறார். நாவலின் இடையிடையே அக்காலத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. கட்சிக்கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சென்று செய்தி சேகரிக்கிறார்.அப்போது தலைவர்களைச் சந்தித்தும் பேசுகிறார்.

அப்படி பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற கட்சி பிரமுகர்களிடம் நேரடியாகச் சந்தித்துப் பேட்டி எடுத்த அனுபவம் உள்ளவர். இந்த நாவல் பழைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றிச் சுழல்கிறது.

நாவலில் அமுது படையல், ஆடிப்பெருக்கு, காமன் பண்டிகை போன்ற பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. அரிகாய்ச்சல், அலக்கு, கவணை, காமன்டி போன்ற வட்டார வழக்குகளும் உண்டு. உண்மையை மையமாக வைத்து எழுதி இருப்பதால் புனைவாக உள்ள இடங்களுக்கும் கதையில் நம்பகத்தன்மை வந்துவிடுகிறது.

பெரியவன் நாவல், பக்கங்கள் 208, விலை ரூ. 300 தமிழ் வெளி வெளியீடு, 1,பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை 600 122. போன்: 90940 05600. -அபூர்வன்

நீலபத்மநாபன் கவிதைகள்

பசுமரமாக நிற்கையில்

பாதரசத்தைப் பாய்ச்சியவர்கள்

பட்டமரமாகி விட்டபின்

பால்விட்டுப் பராமரிக்க

பாய்ந்துவந்தனர்

புகைப்படக் காரருடன் (1980)

நெஞ்சில் மிதக்கும் சில எண்ணப்பொறிகளை சுருங்கிய சொற்களில் கொட்ட கவிதை எனக்குக் கைகொடுக்கிறது என்கிற முதுபெரும் எழுத்தாளர் நீல பத்மபநாதனின் முழுமையான கவிதைகளின் தொகுப்பு சம்பூர்ணம் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது. தன் கவிதைகள் அந்தந்த காலத்து தன் இதயத்துடிப்புகள் என்கிறார். ஆகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதப்பட்ட இவற்றை ஒரே தொகுப்பாகப் படிக்கையில் அந்தந்த காலகட்டத்து நிகழ்வுகளின் எதிர்வினையாக பலவற்றை எழுதி இருப்பது புலனாகிறது. எமர்ஜென்சி, விருதுகள், மொழிப்பிரச்னைகள், இலக்கிய விசாரங்கள், சுய அனுபவங்கள், கசப்புகள் என பலவற்றை பதிவு செய்துள்ளார். இவரது இருபதாவது நாவல் இலை உதிர்காலம். 2005-ல் வெளியானது. அதன் பிறகு நாவல் எழுதுவதை நிறுத்திவிட்டார். ஆனால் கவிதை வரிகளைக் கைவிடவில்லை. அவர் 1975- இல் எழுதிய கவிதையின் வரிகளை இங்கே குறிப்பிடலாம். எழுத்தாணி மழுங்கியும் சளைக்கவில்லை/ எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. இந்நிலைதான் அவரது படைப்புமனத்துக்கு தீராமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

படிக்கப் படிக்கத்

தீரவில்லை

படிப்பதை நிறுத்தியதும்

தீர்ந்தனவே

வாசிப்பு இல்லாவிட்டால் தேடலும் கூர்மையும் இல்லாமல் போய்விடும் என்பதை நறுக்கென்று சொல்லும் கூர்மையான மொழியாளுமை. இந்த கவிதைத் தொகுப்பு மீண்டும் மீண்டும் சொல்வதும் இதுதான். படைப்பாளிக்கு ஓய்வே கிடையாது.

நீல பத்மநாபன் கவிதைகள் (சம்பூர்ணம்), விருட்சம் வெளியீடு, 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-33 பேச: 9444113205

போராட்டங்களின் தொகுப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ச.இராமதாஸ் எழுதி வெளியாகி இருக்கும் புத்தகம் போர்கள் ஓய்வதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளில் சுற்றுச்சூழல், இயற்கை, பொருளாதாரம், சமூக நீதி, கல்வி என சதா பேசிக்கொண்டும் போராடிக்கொண்டும் இருக்கின்ற முக்கிய கட்சி என பாமகவைக் குறிப்பிடலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது என்றால் எங்கிருந்தோ தனி உற்சாகம் மருத்துவருக்கு வந்துவிடுவதைக் காணமுடிகிறது. கோவையில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இந்து முஸ்லிம் மோதலை அடுத்து அமைக்கப்பட்ட ஒரு சோதனை சாவடியால் முஸ்லிம் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து ஒருநாள் இரவு ரயிலில் கோவைக்குச் செல்கிறார். ரயிலில் இறங்கியதும் யார் கண்ணிலும் படாமல் வழக்கமான விடுதியைத் தவிர்த்து வேறிடத்தில் தங்குகிறார். ரகசியமாக கட்சிக்காரர்களுக்குத் தகவல் தெரிவித்து, காலை பத்தரை மணிக்கு சோதனைச் சாவடியை அகற்றக் கோரி போராட்டத்தில் குதிக்கிறார். கைது ஆகிறார். வழக்கமான தன் ஸ்டைலில்’ 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். சோதனைச் சாவடி அகற்றப்படவேண்டும். இல்லையென்றால் தென் மாவட்டத்தில் இருந்து அனைத்து வண்டிகளும் திண்டி வனத்தைக் கடக்கும்போது பாமகவினரால் சோதனைக்கு உள்ளாக்கப்படும்’ என்கிறார். சோதனைச் சாவடி பிறகு நீக்கப்படுகிறது.

ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலைகளை ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் 1993-இல் திறந்துவைத்தது, காடுவெட்டி பகுதியில் இரட்டைக் குவளை முறையை ஒழிக்க முயற்சி எடுத்தது, அங்குள்ள அழகாபுரம் சிவன்கோவிலில் பட்டியலினத்தவரை அழைத்துக்கொண்டு நடத்திய கோவில் நுழைவு.. பெருமையுடன் சொல்லிக்கொள்ள தகுதியான பல அம்சங்களை மருத்துவர் இந்நூலில் அடக்கமுடன் கூறுகிறார்.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு என்பது பல நாள் கனவு. 2004 இல் ஐமுகூட்டணி மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றபோதுஅதில் இடம்பெற்ற பாமக சார்பில் போராடி அதை அமல்படுத்தச் செய்கிறார். இது போல் ஏராளமான தகவல்கள் அடங்கிய நூல் இது.

போர்கள் ஓய்வதில்லை, மருத்துவர் ச.இராமதாசு, வெளியீடு: புதிய அரசியல் பதிப்பகம், எண் 9., லின்வுட் சந்து, மகாலிங்கபுரம், சென்னை-600034 விலை ரூ 250 பேச: 9003118333

குழந்தைக் கதைகள்

குழந்தைகளுக்கான ஆறு குட்டிக்கதைகளின் தொகுப்பு இது. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அம்மா கதை சொன்னால் எப்படி இருக்குமோ அதே மொழியில் இனிமையாக எழுதப்பட்டுள்ளன. பெரிய எழுத்துகளில் படங்களுடன் கூடிய வடிவமைப்பு. சுற்றுச் சூழலையும் இயற்கையையும் கதைகளின் ஊடாக அறிமுகப்படுத்தும் நல் முயற்சி. கொய்யா மரமொன்றின் ஒரே பழத்தை மயில் ஒன்று பறித்துப் போய் குஞ்சுகளுக்குக் கொடுக்கிறது. பயந்துபோயிருக்கும் பழத்திடம் குஞ்சுகள் சொல்கின்றன:’ பயப்படாதே.. உனக்கு வலிக்காம சாப்பிட்றோம்,’

மழை மேகங்கள் பூமி நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. அதிலொரு குட்டி மேகம் எது கடல் என்று அறியும் ஆவல் கொண்டு தேடுகிறது. கிணறு, குளம், ஏரி, எனப்போய் கடைசியில் கடலைச் சேருகையில் அதுதான் கடல் என யாரும் சொல்லாமலே தெரிந்துகொள்கிறது.

குட்டிக்குழந்தை வளர்ப்புக்கான வரிகள் நிறைய கொண்ட கதைகள் இவை. தளிர்க்குழந்தைகளை இன்று செல்போன்கள்தான் வளர்க்கின்றன. இந்த நிலை மாற இதுபோன்ற கதைகள் மிக அவசியம். போன்களைப் பிடுங்கிக்கொண்டு, நூல்களைத் தாருங்கள்!

கதைப் புத்தகத்தின் கதை, ராஜலட்சுமி நாராயணசாமி, வெளியீடு: ஹெர்ஸ்டோரீஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை- 83. பேச: 9600398660. விலை ரூ 125

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com