நெருப்பை எரிக்கும் நெருப்பு

Published on

கவிஞர் தேவேந்திர பூபதியின் கவிதைகள் ஆழ்ந்த இந்திய தத்துவ மரபின் பின்னணி கொண்டவை. மணிகர்ணிகா என்ற இந்த கவிதைத் தலைப்பு நம்மை உடனடியாக காசியின்கங்கைக் கரைக்கு அணையாது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு எடுத்துச் சென்று விடுகிறது. பிறப்பையும் இறப்பையும் மாயமானதொரு மொழியில் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன இத்தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள்.

முடிவற்ற பிறவிசுழற்சியை அறுத்துக்கொள்ளத்தான் மனிதன் விழையவேண்டுமென இந்திய சமயங்கள் சொல்கின்றன. அதிலிருந்து பிறந்த வரிதான் இது.

ஒருமுறைதான்

பிறப்பு என்பவன்

இன்னொரு முறையும்

அதையேதான்

சொல்கிறான்.

மனிதன் பலமுறை எரிந்து கொண்டிருக்கிறான். கோபத்தில் குரோதத்தில் காமத்தில் எரிகிறான். இந்தபூமியே மயானமாகத் தோன்றுகிறது. அதிலிருந்து பிறக்கிறது மணிகர்ணிகா என்ற தலைப்புக் கவிதை:

நெருப்பை எரிக்கும் நெருப்பு

எரிந்த உடலை

மீண்டும் எரிக்கிறது நெருப்பு

தேவேந்திர பூபதியின் கவிதைகளில் இருக்கும் வாழ்வு பற்றிய அவதானங்கள் நம்மை உலுக்குபவை. மொழியின் கட்டுமானத்தின் உச்சத்துக்கு இத்தொகுப்பில் இருக்கும் பலகவிதைகள் சான்றாக நிற்கின்றன.

மணிகர்ணிகா, தேவேந்திர பூபதி, காலச்சுவடு வெளியீடு, விலை: ரூ.140, பேச: 04652278525

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com