முதியவர்கள் கவனத்துக்கு: இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்!

முதியவர்கள் கவனத்துக்கு: இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்!
Published on: 

சாமுவேல் மோய்ன் (Samuel Moyn) எழுதிய "Gerontocracy in America"  என்கிற நூலை வாசித்தேன்.  Gerontocracy என்றால் முதியவர்கள் ஆதிக்கம் எனப் பொருள்கொள்ளலாம்.

அமெரிக்கா என்பது ஒவ்வொரு புதிய தலைமுறைக்கும் புதுப்பித்தலை (மாற்றங்களை) தருவதாக உறுதியளித்து உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று அது முதியவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பதற்றமான நாடாக மாறியுள்ளது என இந்நூல் நிறுவுகிறது.

அதிபர் பைடனின் உடல்நலக் குறைபாடுகள் பற்றியும், அதிபர் டிரம்ப்பின் நிலையற்ற நடத்தையைப் பற்றியும் நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், நம் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை கவனிக்கத் தவறிவிட்டோம். அது என்னவென்றால்: அதிகாரமும் செல்வமும் முதியவர்களிடம் குவிந்து கிடப்பதும், இளைஞர்களின் எதிர்கால வாய்ப்புகள் முடக்கப்படுவதும் தான் என்கிறது இந்நூல்.

வரலாற்று ஆசிரியரும் சமூக விமர்சகருமான சாமுவேல் மோய்ன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்த வயது இடைவெளியையும் அதன் விளைவுகளையும் மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து இந்நூலில் விளக்குகிறார்.

சமீபத்திய ஆண்டுகளில்:

 * 65 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், 35 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

 * அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள், மற்றும் வாக்காளர்களின் சராசரி வயது மிக வேகமாக உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முதன்மை வாக்காளர்களின் சராசரி வயது 65-ஐ எட்டியுள்ளது.

 * அதே சமயம், முதியவர்களே தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதிகளவில் நிதி வழங்கி, அரசியல் திட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தங்கள் அதிகாரத்திற்கு எவ்வித சவாலும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

 * அமெரிக்கப் பொருளாதாரமும் வரி முறையும் தங்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அது தங்களது நிதி மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்து, தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைக்க உதவுகிறது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

நிலைமை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, மூத்தவர்களின் இந்த அதிகார ஆதிக்கத்தை எவ்வாறு தகர்க்கலாம் என்பதை மோய்ன் தனது துணிச்சலான சிந்தனைகள் மூலம் காட்டுகிறார்:

 * ஓய்வூதிய உதவிகளை அதிகரிப்பது: பொது ஓய்வூதியப் பயன்களை அதிகரிப்பதன் மூலம் கட்டாய ஓய்வுபெறும் வயதை நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் சொத்துக்கள் அடுத்த தலைமுறைக்கு விரைவாக கைமாறும்.

 * இளைஞர்களுக்கு அரசியல் அதிகாரம்: அரசியல் களத்தில் இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையின் மதிப்பை (எடையை) கூட்டுவதன் மூலமும், பிற வழிகள் மூலமும் அவர்களை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றலாம்.

இத்தகைய ஒரு உலகில், முதியவர்கள் அதிகாரப் போட்டிகளிலிருந்து விடுபட்டு, வயோதிகத்தின் உண்மையான வாழ்க்கை வாய்ப்புகளை அமைதியுடன் எதிர்கொள்ள முடியும். அதே வேளையில், இளைஞர்களும் தடைகளற்ற வழிகளுடனும், தங்களுக்கு உரிய உரிய ஆதாரங்கள் மற்றும் வாய்ப்புகளுடனும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க முடியும்.

எண்பது வயதான டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியை தாண்டுவதற்குள் ஏதேனும் ஒரு காரணத்தினால் பதவியில் நீடிக்க முடியாமல் போனால் (அல்லது மரணமடைந்தால்), அவருக்கு அடுத்து ஜே.டி. வேன்ஸ் (J.D. Vance) அதிபராக பொறுப்பேற்பார்.

அப்படி நடக்கும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெருமையை வேன்ஸ் பெறுவார். 42 வயது. இதற்கு முன் தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) தனது 43-வது வயதிற்கு சற்று முன்பு அதிபரானதே சாதனையாக இருந்தது; வேன்ஸ் அதை முறியடிப்பார்.

இருப்பினும், அமெரிக்க அரசாங்கத்திலும் சமூகத்தின் பிற பகுதிகளிலும் "முதியோர்களின் ஆதிக்கம்" (Gerontocracy) தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

அமெரிக்கர்களுக்குப் புதுமைகளைப் படைக்கும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும், மற்றும் இளைஞர்களை அவர்களின் வாழ்வின் சிறந்த கட்டத்திற்குத் தயார்படுத்தி வழிநடத்தும் ஒரு சமுதாயம் தேவை என்றால், தற்போதைய நாடு தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

"அவர்கள் நம்பிக்கையை விடப் பழைய நினைவுகளிலேயே வாழ்கிறார்கள்" என்று கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், வயதானவர்களை விமர்சித்தும், வாழ்வின் சிறந்த பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் எழுதிய தனது பண்டைய உரையில் குறிப்பிட்டுள்ளதையும் இவர் சுட்டிக்காட்டுகிறார்.

மரணம் மற்றும் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்தல்: நாம் சாவைத் தவிர்க்க நினைக்கிறோம்; அதேபோல், இளமையும் பலமும் குறையும் வயோதிகக் காலத்தை (முதுமையை) மனதார ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.

 * அதிகாரத்தின் தீமை: எந்தவொரு பதவியோ அல்லது அதிகாரமோ நீண்ட காலம் நம்மிடமே நீடித்தால், அது நாளடைவில் நம்மைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கெடுத்துவிடும். காலம் வரும்போது அந்த அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.

 * தனிநபர் பெருமையை விட எதிர்காலமே முக்கியம்: நமது இளமையும் உடல் பலமும் ஒருநாள் கடந்து சென்றுவிடும். அப்போது நம் பங்களிப்பு குறைந்தாலும், நம்மைத் தாண்டி வரும் சமூகத்தின் கூட்டு எதிர்காலம்தான் மிக முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால்: "எல்லாக் காலமும் நமதே என்று இருக்க முடியாது. காலம் மாறும்போது நாமும் நம் அதிகாரத்தையும் இடத்தையும் விட்டுக் கொடுத்து, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்கு வழிவிட வேண்டும்." என்று இந்நூலில் கூறுகிறார்.

முதியவர்கள் கவனிப்பார்களா? இந்தியச் சூழலிலும் இந்நூலைப் பொருத்திப் பார்க்கலாம் என்ற ஆவல் எழாமல் இல்லை!