
ஆத்மார்த்தி எழுதிய தேவதாஸ் என்ற இந்நாவல், எழுத்து அறக்கட்டளையால் திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. பரிசுத் தொகை ரூ 2 லட்சம்.
இந்நாவலில் பல பாத்திரங்கள் இருந்தாலும் முக்கியமான பாத்திரமாக இருப்பது மதுரை நகரம்தான். நாவலில் வரும் பிரதான பாத்திரம் தேவதாஸ். மனவளர்ச்சி குன்றிய இளைஞன். இட்லி சுட்டு வயிற்றைக் கழுவும் அன்னத்தாயின் மகன். கணவனை இழந்து கைப்பிள்ளையுடன் மதுரைக்கு வந்தவள். அவளை அரவணைத்த தூரத்து சொந்தமான ஆச்சியின் மறைவுக்குப் பிறகு சாலையோர இட்லிக்கடை நடத்தி ஜீவனம் தள்ளுகிறாள். இந்த விளிம்பு நிலை மனுஷியின் நிழலில் இன்னொரு ஆதரவற்ற பெண்ணாக வந்து சேர்கிறாள் பவளம். கடைகளில் சேலை திருடுவது அவளது பூர்வீகக் கதை. இவர்களுக்கெல்லாம் நிழலாக இருக்கிறார்கள் விடுதி முதலாளி அண்ணாச்சியும் அவரது மகன் சக்தியும். கிளாஸ்கார தெருவில் இந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை கேன்வாஸில் கோடுகளாகக் கிழித்துப்பார்க்கிறார் ஆத்மார்த்தி.
பவளமல்லியைத் துரத்திவந்த பழைய சுவடுகளில் ஒன்று அவளைத் தொடுகையில் அவள் எடுக்கும் விபரீத முடிவில் தேவதாஸ் பலியாகிப்போகிறான். யாரும் கெட்டநோக்கில் எதையும் செய்வதில்லை. ஆனால் சூழல் எல்லோரையும் உருட்டிப்போட்டு விளையாடுகிறது. மதுரையின் அன்றாட வாழ்வு, அதன் பெரிய மனிதர்களின் நிழல்வாழ்க்கை, கட்டபஞ்சாயத்துகள் எனச் சென்றாலும் மதுரை என்றாலே கொடூரமான அரிவாள் கலாச்சாரமாக எழுதாமல் எதையும் பேசித்தீர்த்துக் கொள்கிற சாமானிய மனிதர்கள் உலவும் உலகாகப் படைத்தமைக்காக ஒரு கும்பிடு.
வெளியீடு: எழுத்து- கவிதா, பேச: 7402222787, விலை ரூ.200