
கடந்த ஆண்டில் ஒரு நாள் இயக்குநர் ராம் அழைத்து, ‘ஐயா, சுதா கொங்கரா ஒரு படம் இயக்குகிறார். அதில் ஒரு தமிழ் பேராசிரியர் வேடத்திற்கு நடிகர் தேடுகிறார். நீங்கள் முயற்சி செய்யலாம்,'என்றார். எனக்குப் புரியவில்லை.
உண்மையிலேயே நல்ல நோக்கத்தினாலான அழைப்பா, அல்லது ‘சினிமாவப் பத்தி அகராதியா அப்பப்ப எழுதுறீங்கள்ள… உண்மையான சினிமாவ வந்து களத்துல பாருங்க’ என்ற அன்பு கலந்த வன்மமா? என்று புரிபடவில்லை. என் தயக்கத்தை உடைத்து, நாடகத்திலெல்லாம் நடிப்பவர்தானே! என்று உற்சாகமூட்டினார். ஏற்கெனவே முப்பது வருங்களுக்கு மேலாக பேராசிரியராய் நடித்த அனுபவம்வேறு இருக்கிறதுதானே. நடப்பது நடக்கட்டும். பெரிதாய் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன்.
இயக்குநர் சுதா செல்பேசியில் அழைத்து சம்பிரதாயமாய் பேசி, உதவி இயக்குநர் சாந்தினி மற்றவிசயங்களை ஒருங்கிணைப்பார் என்றார். ஒருங்கிணைத்தார். சென்னை வீனஸ் காலனியில் இருக்கும் விரிவான இயக்குநரின் அலுவலகத்தில் இயக்குநர் அந்த கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். 60களில் நடந்த இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டத்தைக் களமாகக் கொண்ட கதை. மூன்று இடங்களில் பெருவாரியான கதை நிகழ்வுகள் நடக்கின்றன. சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களே அந்தப் போராட்டத்தை முழுக்க நடத்தியவர்கள். தியாகராசர் கல்லூரி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி என்று பேர்பெற்ற நாள்கள். பெரும் தமிழ் ஆளுமைகளை ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் பெற்ற கல்லூரி. 60கள் மொழிப்போரில் மாணவர்களோடு தோள்நின்ற ஒரு பேராசிரியர் பாத்திரம். திரைப்படத்தில் அவருடைய பெயர் நன்னன் என்ற முன்னுரையுடன் உரையாடல் பகுதிகளை வாசித்துக்காட்டச் சொன்னார் (உண்மையில் அந்தப்பாத்திரம் எந்தச் சாயலுடையது என்பதைச் சொல்ல கம்பெனி விதிகள் அனுமதிக்கவில்லை).
வாசித்தலுக்குப் பின் எந்த எதிர்பார்ப்புமின்றி ஊர்வந்து சேர்ந்து மதுரையின் சந்தடிக்குள் ஐக்கியமாகிவிட்டேன். ஒரு பாத்திரத்திற்கு பலரையும் அழைத்துப் பார்ப்பது வழக்கமானதுதானே. மேலும் இத்தகைய பாத்திரத்திற்குப் பொருந்திப் போகக்கூடிய சிறப்புத் தகுதி எதுவும் எனக்கு இல்லை என்பதையும் சென்னையில் நடிப்பு நமைச்சலுடன் நூற்றுக்கணக்கில் தகுதியானவர்கள் இருப்பதையும் மனதில் இருத்தி இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்று முடிவுசெய்த மூன்றாவது நாளில், டான் பிச்சர்ஸ் மேனேஜர் பேசுகிறேன் என்று அழைத்தார் ஒருவர். ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கவேண்டியிருக்கிறது. எப்போது வரமுடியும் என்றார். நடிப்பில் ‘குரல் நடிப்பு (voice acting)’ என்பது உண்டல்லவா. ஒரு நடிகன் வசனத்தை வாசித்துக் காட்டும் முறையிலேயே, அந்த நடிகனுக்கு கதையையும், காட்சியின் சூழலையும், தான் ஏற்கவிருக்கும் பாத்திரத்தின் தன்மையையும் உள்வாங்கும் திறனிருக்கிறதா என்பதை ஓர் இயக்குநரால் உணரமுடியும். அப்படி எதுவும் நடந்துவிட்டதோ!
மீண்டும் வீனஸ் காலனியில். சிலபத்து வருடங்களாக பாதுகாத்துவந்த தாடியை நீக்கி, மீசையை செப்பனிட்டு, தலையில் ஜெல் போட்டு சீவி, கொஞ்சம் தளர்வான கருப்புச் சட்டையையும் வேட்டியையும் துண்டையும் அணிவித்து கண்ணாடி முன்னால் நின்றபோது, இந்த ஆளை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே என்று தோன்றியது. பற்றாக்குறைக்கு அந்த உடையலங்காரப் பெண்மணி ஒரு பெட்டி நிறைய குவிந்திருந்த கண்ணாடிகளில் 60களைத் தேடி, நான் எந்தக் கண்ணாடி வந்துவிடக்கூடாது என்று நினைத்தேனோ அதையே பொறுப்பாக எடுத்து அணிந்துகொள்ளச் சொன்னார். முடிந்தது. படம்வெளிவந்தபோது ஒரு நண்பர் சொன்னார். நீங்கள் எந்த மாதிரியான தமிழாசிரியர் பிம்பத்தை வாழ்நாள் முழுவதும் விலக்கி வைத்திருந்தீர்களோ அந்தத் தமிழாசிரியாகவே உங்களை மாற்றிவிட்டார்களே என்றார். ஆமால்ல… என்று தோன்றியது. (துணை நடிகராகச் நடிக்கச் செல்லும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய பொன்விதி 1. நடிகனாக சினிமாவில் உங்களை ஒப்படைக்கும்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை நீங்கள் ஊகிக்க முடியாது. உங்கள் வாழ்நாள் விரதங்களை நொடியில் தகர்த்துவிடுவார்கள்!)
ஊர்வந்து சேர்ந்த சில நாட்களில் உதவி இயக்குநர் சாந்தினி அழைத்து, ‘சார் இந்த கதை 60கள்ள நடக்குது. அதுல மதுரைக் காட்சிகள்ள இருக்கிற வசனங்கள்ள ‘மதுரை ஸ்லாங்க’ சரி பாத்துசொல்ல யாராவது கிடைப்பாங்களா? அல்லது உங்களால முடியுமா?’ என்றொரு கோரிக்கையை வைத்தார். இந்தப் படத்தில் மூன்று காட்சிகளில் தலைகாட்டுவதாக இருக்கிறது. படம் முடியும் தறுவாயில் நீளத்தை குறைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போது கண்டிப்பாக நம்மைப் போன்ற ஆட்களை டிரிம் பண்ணுகிறோம் என்ற போர்வையில் கத்தரித்து எறிந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். அப்படிக் கத்தரித்தாலும் எந்த ரசிகரும் திரையைக் கிழிக்கப் போவதில்லை. ஆகவே திரைக்குப் பின்னுள்ள இந்தப் பணியை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று உள்மனம் உத்தரவிட்டது. ஏற்றுக்கொண்டேன். (இந்த ஸ்லாங் (வட்டாரவழக்கு) விசயத்தை பின்னர் பேசுவோம்)
இப்படியாக ஒரு வரலாற்றுப் பாத்திரத்தில் நடிப்பவனாகவும், அறுபதுகளின் மதுரை வட்டார வழக்கை மேற்பார்வை செய்பவனாகவும் சென்ற டிசம்பர் மாதம் தமிழ்த் திரையுலகில் வலது காலை எடுத்துவைத்தேன்.
சென்னையில் முதல்நாள் படப்பிடிப்பு. ‘சார்.. நான் டிரைவர் பேசுறேன்.. கீழ வெயிட் பண்றேன் சார்.. மணி காலை ஐந்து. ஆறுக்கு கிளம்பினா போதும்ன்னாங்களே… இல்லை சார். நீங்க வாங்க சார். நான் வந்துட்டேன்ங்கிறத இன்ஃபார்ம் பண்ணத்தான்…’ என்றார். திட்டமிட்டுச் சரியாக காரியங்களை நிகழ்த்துவதில் சினிமா இண்டஸ்ட்ரியை மிஞ்ச முடியாது என சினிமா நண்பர் ஒருவர் கூறுவார். இன்றைக்கு கார்ப்பரேட் காரர்களின் திட்டமிட்டுச் செயலாற்றும் முறையை வெகுகாலமாக நடைமுறைப்படுத்தி வருபவர்கள் திரைப்படத்துறையினர்தான் என்பார். திரைத்துறையின் 20க்கும் மேற்பட்ட துறையினரும் இத்தகைய திட்டமிடலுக்கும் நேரந்தவறாமைக்கும் உட்பட்டவர்கள். இதில் விதிவிலக்கு சில நட்சத்திரங்கள்தான். அப்படி இருந்தால்தானே நட்சத்திரங்கள்? இப்படி அத்தனை துறைகளும் காத்திருக்கும்போது எந்த குற்ற உணர்ச்சியுமில்லாமல் 11 மணிக்கு வரக்கூடிய ஸ்டார்கள் எல்லாக் காலத்திலும் உண்டாம்.
என்னுடைய கார் பச்சையப்பன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தபோதே இருநூறு பேருக்குக் குறையாமல் பரபரத்துக்கொண்டிருந்தார்கள். காரைவிட்டு இறங்கியவுடன் அதிகம் அறிமுகமில்லாத திருமண வரவேற்பு அரங்கிற்குள் நுழைந்ததுபோல உணர்ந்தேன். பொதுவாகவே ‘ஆள்கூட்டத்தில் தனியே’ என்பது மாதிரியான ஆள் நான். யாரிடமும் எதையும் கேட்டுவிட நாலுமுறை யோசிப்பவன். அறிமுகமற்ற இடங்களில் சகஜமாக இருக்க முடியாதவன். அந்த மொத்தக்கூட்டத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் இயக்குநரையும் சேர்த்து 4பேர்தான். யாராவது தட்டுப்படுகிறார்களா என்று கண்களால் அலைந்து கொண்டிருக்கும்போதே… ‘இது உனக்குத் தேவையா?’ ‘ஒரு புது அனுபவம் வேணுமுன்னா அதுக்கு சில நீக்கு போக்குகள் வேணுமில்லையா? இது ஆரம்பம்தான் … உனக்கு இருக்குடி…’ இப்படிப் பலவிதமான மனக்குரல்கள் கேட்கத் தொடங்கிய நேரத்தில் ‘குட்மார்னிங் சார்’ என்றவாறு மானேஜர் ஹரி அங்கு வந்தார் என்பதைவிட தோன்றினார் என்பதே பொருத்தமானது. அப்பாடா… என்றிருந்தது. கேட்காமலே ஏய் சாருக்கு தண்ணி குடு .. என்றார். தண்ணீர் வந்தது. சார்… காபியா? டீயா? கேட்டார். உண்மையில் நான் காபிக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். காபி.. என்றேன் உற்சாகமாக. சே.. தரமான கம்பெனி.. தரமான மானேஜர்… என்று மனசுக்குள் மெச்சிக் கொண்டேன். ஆனால் அந்தக் காபி இன்று வரை வரவேயில்லை. காபி எடுக்கப் போனவர் போனவர்தான்.
நிறைய இளைஞர்கள் 60களின் உடையில் விசித்திரமாக உலவிக்கொண்டிருக்க, இரண்டு பேர் ஆவி பறக்க இஸ்திரி செய்துகொண்டிருந்தார்கள். வாக்கி டாக்கிகள் தொங்க சில இளைஞர்கள் தூக்கமில்லாத கண்களுடன் எதற்காகவோ அவசரத்தில் போய்வந்து கொண்டிருந்தார்கள். துணை இயக்குநர்களாகத்தான் இருக்கவேண்டும். இரண்டு வேன்களிலிருந்து துவைத்த சட்டைகளையும் பேண்ட்டுகளையும் இழுத்துப்போட்டு, நடிகர்களின் இடுப்பளவை இஞ்ச் டேப் வைத்து அளந்து கால்சட்டைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு காஸ்ட்யூம் அன்பர். இடுப்பே இல்லாத சோனியான இளைஞரை உணர்ச்சியில்லாமல் பார்த்து அவருக்கான கால்சட்டையைத் தேர்ந்தெடுக்கப் போராடி ஒரு வழியாக அவரைவிட இருமடங்கு அளவான கால்சட்டையைக் கையளிக்க, இஸ்திரிக்காரரை அணுகிக் கொண்டிருந்தார் அந்த ஜீரோ சைஸ் இளைஞர். மூன்று நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களின் அடர்த்தியான மீசையை நறுக்கு மீசையாக மாற்றிக்கொண்டிருந்தார்கள் ஒப்பனைக் காரர்கள்.
காபியும் வரவில்லை. அடுத்து என்ன செயல் திட்டம் என்பதும் தெரியவில்லை. எல்லோரும் எல்லா திக்குகளிலும் நடந்துகொண்டிருக்கிறார்களே தவிர எதுவும் புரியவில்லை. எப்போதும் என் சிறிய தோள்பையில் ஒரு புத்தகமும் இயர்போனும் அவசியம் இருக்கும். ஏனெனில் இந்தியாவில் எங்கு சென்றாலும் காத்திருத்தல் நம் பண்பாட்டு அம்சமல்லவா. அதனால் எப்போதும் ஒரு புத்தகத்தை கையிருப்பில் வைத்திருப்பேன். நம் இறப்புக்குப் பின் மின்மயானத்திற்குச் செல்லும்போதுகூட நம் ‘பாடி’ காத்திருக்க வேண்டியிருக்கும். சவப் பெட்டியில் ஒரு புத்தகம் வைக்கச் சொல்லவேண்டும். சுற்றும் முற்றும் பார்த்ததில் அதே போல் புதிய இளைஞர்கள், கால்சட்டைகள், இஸ்திரிகள் என்று தொடர்ந்து கொண்டிருக்க, கவனத்தைத் திருப்பும் முகமாக ஜெயமோகனின் ஐந்து நெருப்புகள் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை வாசித்து முடித்து மூன்றாவது கதைக்குள் நுழைய முடியாத அளவிற்கு பசிக்கத் தொடங்கியிருந்தது. வழக்கமாக காலை உணவுக்கான நேரமில்லைதான். அதிகாலை விழிப்பல்லவா? எத்தனை பெரிய தியாகம். மீண்டும் புத்தகத்திற்குள் நுழைய முயன்று தோற்று நிமிர்ந்துபார்த்தபோது இயக்குநர் சுதா என்முன் நின்றிருந்தார். கம்பர்ட்டபிளா இருக்கீங்களா? என்று கரிசனையாக விசாரித்துவிட்டுச் சென்றார். அவர் கேட்டபின் கம்பர்ட்டபிளாக இருப்பதாகத் தோன்றியது.
மீண்டும் மானேஜர் ஹரி தோன்றி சார் சாப்பிடுறீங்களா? என்றார். அதுக்குத்தான்யா காத்துக்கிட்டு இருக்கேன் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு, ஆர்வத்தை வெளிக்காட்டாமல் … ம்.. சாப்பிடலாம் என்றேன். யாரையோ அழைக்கும் பாவனையில் ஹரி அவ்விடத்திலிருந்து மறைந்தார். நிமிடங்கள் வருடங்களாக நகர்ந்துகொண்டிருக்க. ம்ஹும்… வரமாட்டான்… அவன் வரமாட்டான்… அந்த காபி போலத்தான்… என்று மனம் அபசகுனமாக சிந்திக்கத் தலைப்பட்ட நேரத்தில் அந்த குசேலன் வந்து நின்றான். யாருமில்லாத காரவனில் உணவு பரிமாறினார். ஏறத்தாழ ஓர் உணவகத்தில் காலை உணவாகக் கிடைக்கக்கூடிய பலவும் அங்கு இருந்தன. தரமான சுவையான உணவு. என்ன… பரிமாறுபவரும் நானும் மட்டுமே இருந்த அந்த அறையில், அருகாமையில் நின்று அவர் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருந்ததால் வழக்கமான கைசூப்புதல், நக்கிச்சுவைத்தல் போன்ற தமிழரின் மரபான செய்கைகளைத் தவிர்த்து கூடுதல் நாகரிகத்துடன் உணவருந்தும் நிர்பந்தத்துடன் சாப்பிடவேண்டியதாகிவிட்டது.
அன்று எனக்கான காட்சிகள் எதுவுமில்லாததால் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு வாசிக்கத் தொடங்கினேன். பாடலுக்கான காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். 10மணிவாக்கில் உதவி இயக்குநர் ஒருவர் பரபரப்பாக வந்து என்னை அழைத்தார். படப்பிடிப்புத்தளத்தில் பரபரப்பாக இருப்பது உதவி இயக்குநருக்கான அடிப்படைத் தகுதி. அவசியமே இல்லாவிட்டாலும் அவர்கள் பரபரப்பாகவே இருந்தாக வேண்டும். அவர்களுடைய டிசைன் அப்படி. நான் அவரைத் தொடர ஓட வேண்டியிருந்தது. ராட்சத குளிர்சாதனப் பம்புகளைத் தாண்டி முதல் மாடியை அடைந்தபோது அங்கே ஒரு ஐம்பது பேர் நிற்க இடமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சைலன்ஸ்.. சைலன்ஸ்.. என்று எல்லாத் திக்குகளிலுமிருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. இயக்குநர் சுதா மானிட்டருக்கு முன்பு அவருக்கு அருகாமையில் ஒரு இருக்கையை ஒதுக்கினார். சார்.. சிவாவோட டைலாக்ல மதுரை ஸ்லாங்க கொஞ்சம் பாருங்க… மாத்தனும்னா சொல்லுங்க…’ என்றார். அந்தக் காட்சியை வாசித்துப் பார்த்ததில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் இடித்தது. ஓரிடத்தில் ‘வேலை பண்ணப் பண்ண சரியா வந்துரும் சார்’ என்று வருகிறது. உதவி இயக்குநர் சாந்தினியை அழைத்து…’மதுரைல நாங்க பண்றதில்லை… செஞ்சுதான் பழக்கம் என்றேன்’. ‘பண்ணப் பண்ண’ என்பதை ‘செய்யச் செய்ய’ என்று மாற்றிக் கொண்டார். பகல் ஒரு மணிக்குள் அந்தக் காட்சியை எடுத்துமுடித்தார்கள். சார்… மதியம் பாட்டுதான் எடுக்கப் போறோம். நீங்க கெளம்பலாம் என்றார் உதவி இயக்குநர் ஒருவர்.
இந்த முழு ஒரு நாளில் தமிழ்த் திரையுலகிற்கு நான் ஆற்றிய பணி என்பது ‘பண்ண’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘செய்ய’ என்ற வார்த்தையை அருளியதுதான். இது வெளியே சொல்லக்கூடிய அளவிற்கான சேவையாகத் தெரியவில்லையே…என்று தங்கும் விடுதிக்குத் திரும்பும்போது யோசித்துக்கொண்டே வந்தேன். ஆனால் ஐம்பது கோடியில் ஒரு படம் எடுக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் ஒரு வார்த்தை சில லட்சங்கள் மதிப்புடையதுதானே! எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்கவேண்டியிருக்கிறது பாருங்கள்….
(மீதி அடுத்த இதழில்)