உலகிலேயே மிகக்கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது இந்திய குடிமைப்பணித் தேர்வு. இதில் வெல்வதற்கு மிகக் கடுமையான உழைப்பு தேவை. ஏனெனில் பத்துலட்சம் பேர் போட்டியிடுகின்றனர். இருப்பதோ சில நூறு இடங்கள் மட்டுமே. வெற்றி பெறும் ஒவ்வொரு இளைஞரிடமும் மிகக் கடுமையானதொரு உழைப்புப் பயணத்தின் கதை இருக்கும். நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் இடையிலான தவிப்பு மிக்க ஊசலாட்டம் இருக்கும். இவற்றைக் கடந்து ஐஏஎஸ் என்ற சிகரத்தை எட்டிப்பிடித்த ஏழு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கதையை சஜ்ஜன் யாதவ் மிகப்பரபரப்பான நாவலைப் போல் எழுதி இருக்கிறார்.
ஒவ்வொருவரின் கதையும் போராட்டமே. ஐந்தாண்டு கால கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றி பெறும் கேரளத்தைச் சேர்ந்த இளம் தாயான மின்னு பி.எம்., முதல் முறையில் வெற்றி பெற்ற பீஹார் கிராமத்து இளைஞர் சத்தியம் காந்தி, நான்கு ஆண்டுகள் போராடி வென்ற பரத் சிங், பார்வை இழப்பை மீறி வென்ற அஞ்சலி சர்மா, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வசீம் அகமது பட், மூன்றாம் முறை வெற்றி பெற்ற சுருதி சர்மா, ஐஐடியில் படித்து பன்னாட்டு நிறுவனத்தின் பணிபுரிந்து பின்னர் தேர்வெழுதி வென்ற லவீஷ் ஓர்டியா.. இவர்களின் கதைகளையும் அவர்களின் உணர்வுகளையும் சேர்த்து எழுதி இருப்பதால் நாமும் அவர்களுடன் துயர் அடைகிறோம். வெற்றியில் மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.
இந்த வெற்றியாளர்கள் பயன்படுத்திய வழிமுறைகளும் சொல்லப்பட்டு இருப்பதால் போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
இலக்கு: ஐஏஎஸ், சஜ்ஜன் யாதவ், மொழிபெயர்ப்பு: பி.எஸ்.வி குமாரசாமி, மஞ்சுள் பதிப்பகம், போபால்.
- மதிமலர்