
கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலாகட்டும், அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியமாகட்டும் இரண்டுமே நிகழ்கால அரசியல் மற்றும் தனிமனிதத் தரவுத் திருட்டு, சுதந்திரப் பறிப்பு, செய்யறிவின் பின்விளைவுகள் என்று பலவற்றையும் பேசியதோடு, குற்ற இனச் சட்டம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய விளைவையும், அதை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர்த் தியாகியர் பற்றியும் எடுத்துரைத்தன. அண்மையில் ஆகோளின் மூன்றாம் பாகம் நித்திலன் வாக்குமூலம் வெளியானது. மூன்றுமே தனித்தனி நாவல்கள்.
ஏ.ஐ எனப்படும் செய்யறிவைப் பற்றிய பல விளக்கங்களும், அவற்றின் வளர்ச்சியினால் மனித இனம் என்னென்ன மாதிரியான நன்மைகளையும், குறிப்பாகத் தீமைகளையும் சந்திக்க நேரிடலாம் என்று விவரிக்கிறது மூன்றாம் பாகம். எவையெவை மனிதக் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கவேண்டும்; அவை எந்திரக் கட்டுப்பாடுகளுக்குள் வந்தால் என்னவெல்லாம் நிகழலாம் என்று கண்முன் விரிக்கிறது நித்திலன் வாக்குமூலம்.
எதிர்காலத்தில் அப்படிச் சிக்கித் தவிக்கும் நிலையில் இருக்கும் சமூகத்தைக் காப்பாற்றக் கபிலன் வைரமுத்து உருவாக்கிய சூப்பர் ஹீரோக்களே நித்திலன், சின்னமாயன் மற்றும் நெய்தல் போன்றோர். மிக அழகான நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கால ரயில் மூலம் பயணித்துப் பல வரலாற்று நிகழ்வுகளையும், மாந்தர்களையும் தன் கதையின் பாத்திரங்களாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். படித்துமுடிக்கும்போது எது புனைவு, எது வரலாறு, யாரெல்லாம் உண்மையான மனிதர்கள், யாரெல்லாம் புனைவு மாந்தர்கள் என்று பிரித்தறியக் கொஞ்சம் நேரம் எடுக்கும். அத்துணை நேர்த்தி.
பல்லுயிர்ப் பிரிவு, ஹைப்பர்போலிக் தண்டவாளத்தில் கால இரயில், அதர்வாணா போன்றவற்றோடு மனத்தில் நினைக்கும் கடவுச் சொல்லை அறிந்து திறக்கும் பூட்டு போன்றவை கற்பனைத் தொழில்நுட்பத்தின் அபாரம்.
நித்திலன் வாக்குமூலம், கபிலன் வைரமுத்து, வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78 பேச:9940446650, விலை ரூ.300
-