கவிஞர் கலாப்ரியாவின் 75-வது பிறந்த நாளையொட்டி 'பஃறுளி' என்கிற பெயரில் ’கலாப்ரியா 75’ மலர் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது. 368 பக்கங்கள் கொண்ட இந்த நூல், உள்ளடக்கத்திலும் அடர்த்தி மிக்கதாக அமைந்துள்ளது.
இந்த நூலில் 60 பேருக்கு மேல் பங்களிப்பாற்றி-யுள்ளார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கலாப்ரியாவின் நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர் என்று பல்வேறுபட்டவர்களின் உணர்வுகள் கட்டுரை வடிவில் பதிவாகி உள்ளன.
கலாப்ரியாவின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், முன்னுரைகள், முகநூல் பதிவுகள் கூட விடாமல் எழுத்து சார்ந்தும் அவருடனான நட்பு சார்ந்தும் எழுதியுள்ளனர். கலாப்ரியாவைப் பற்றிப் பேசுவதன் மூலம் கவிதைகள் குறித்தும், அதன் ஆழ, அகலங்களையும் பேசுகின்றனர். கலாப்ரியா நினைவுகளினூடாக மொழி, கவிதை வளர்ந்த வரலாற்றைப் பற்றியும் எண்ணங்கள் விரிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் இலக்கிய இயக்கம், அவற்றின் வளர்ச்சி போன்றவை பற்றிய சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.
ஒரு கவிஞருக்கு மலர் என்கிற முயற்சியின்போது பெரும்பாலானவை சம்பிரதாயமான கட்டகங்களில் இருக்கும். உள்ளே உள்ளவை மேலோட்டமான, போலியான, விதந்தோதல்களாகவே இருக்கும். படிக்கப் படிக்க சோர்வூட்டும். ஆனால் இந்த மலர் ஒரு படைப்புக்கான வாசிப்பு அனுபவத்தை அளித்து ருசிக்க வைக்கிறது.
மலரிலுள்ள கட்டுரைகளில் கலாப்ரியா எழுதிய பல கவிதைகள் ரசனையுடன் எடுத்தாளப் பெற்றுள்ளன.
வெளியீடு: கவிநயா பதிப்பகம், 4/53, ஏ.ஆர்.எஸ்.தெரு, இடைக்கால், தென்காசி மாவட்டம் 627804. விலை ரூ.350.