மதயானைக்கு அங்குசம்?

தேசியக் கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை
மதயானைக்கு அங்குசம்?
Published on

‘தேசியக் கல்விக்கொள்கை2020-ஐப் படித்து, அதில் பள்ளிக்கல்வியைப் பற்றிய பக்கங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற வஞ்சகமான திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறேன்’ என்று தொடங்குகிறார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். தேசியக் கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை என்ற இந்த நூல், அக்கொள்கைக்கு எதிராக பலமாக வாதிடுகிறது. இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற தமிழக அரசின் வாதத்தில் பெருமிதம் கொள்கிறது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சமூக நீதி, மொழிக்கொள்கை உட்பட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால் திமுக அதை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாசகங்களாகும். அதன் தொடர்ச்சியாக இந்நூலைப் பார்க்கலாம். தற்போது தமிழக அரசுக்கென்று தனித்த  பள்ளிக் கல்விக்கொள்கையை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கி உள்ளனர்.

இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்துடனும் கல்வியை சேவையாக அளிப்பதில் இருந்து அரசுகள் வெளியேறவேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நூலில் அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அடிப்படைக் கல்வி கிடைக்கவேண்டிய வயதில் திறன் மேம்பாடு என்ற பெயரில் மாணவர்களைக் குலத்தொழிலுக்குள் தள்ளுவதாகவும் குறிப்பிடுகிறார். மூன்றுவயதில் கல்வி, பத்து வயதில் குலத்தொழில் என்று கல்விக் கொள்கை வகுத்திருக்கிறார்கள் எனச் சொல்கிறார். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, சமூக நீதிப் பறிப்பு, மதவாதம், அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா போன்றவற்றுக்கு இது இட்டுச்செல்வதாக விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார். வரிக்கு வரி கல்விக்கொள்கையை விமர்சிக்கும் நூலாக இது அமைந்துள்ளது.

இதற்காக நேரம் ஒதுக்கி தன் பெயரில் ஒரு நூலை எழுதவேண்டும் என்று எந்த தேவையும் இல்லைதான். ஆனாலும் இப்படி விரிவான நூல்களை எழுதும் அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது மிகுந்த ஆச்சர்யமே. அன்பில் ஆச்சர்யப்படுத்துகிறார்.

வெளியீடு: அன்பில் பதிப்பகம், 53/22, கேஜி நட்ராஜ்பேலஸ், சரவணா தெரு, தியாகராய நகர், சென்னை – 600017. பேசி: 7358500250. விலை ரூ: 300

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com