மந்தாகினியின் மடியில்

மந்தாகினியின் மடியில்

உத்தராகாண்ட் மாநிலத்தில் இமய மலைகளின் சரிவில் கர்வால் நிலப்பகுதியில் நடக்கும் கதை இது. மூன்று நாட்களில் நிகழும் காதல் கதை. பயணம், காதல் இரண்டுமே உற்சாகம் தருபவை. இவை இரண்டும் இணைந்துவிட்டால் எழுகின்ற உணர்ச்சிப்பெருக்கை சொல்லவும் கூடுமோ? இளம் எழுத்தாளர் அஜிதன் விளையாடி இருக்கிறார். ருத்ரபிரயாக்கிலிருந்து சோன்பிரயாக் வரை பேருந்தில் செல்லும் வழியில் மைத்ரி என்ற பெண்ணை சந்திக்கிறான் ஹரன்.

அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் உறவின் போக்கினை மிக அழகான மொழியில் சித்திரித்து, பெண்மையின் மாபெரும் ஆளுமைக்கு முன்னால் ஆண் ஒன்றுமே இல்லாத கூடு மட்டுமே என உணர வைத்துச் செல்லும் நாவல் இது.

மந்தாகினி நதிக்கரையில் இது நடப்பதும் இமயத்தின் சரிவில் வளர்ந்திருக்கும் தேவதாரு மரக்காடுகளின் வழியாக வளர்ந்து செல்வதும் இந்த எளிய காதல் கதைக்கு பல்வேறு ஆழமான அடுக்குகளைத் தருகின்றன. கர்வால் நிலப்பகுதியின் பண்பாட்டுச் சித்திரங்களை தமிழில் இந்த அளவுக்கு அழகாக எந்த நாவலும் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தை நமக்குக் கடத்துவதன்மூலம் இந்நாவல் முக்கியமானதொன்றாக மாறுகிறது. அதே சமயம் ஆணுக்குப் பெண் எதிர்பார்ப்பின்றி எதையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள், அந்த விரிந்து உயர்ந்த மலைகளைப்போல, வானுயர்ந்த தேவதாரு மரங்களைப் போல, ஓடிக்கொண்டேயிருக்கும் மந்தாகினி நதியைப்போல என்று உணர்த்துவதன்மூலம் மைத்ரி, ஹரனுக்குள் ஒரு பிரளயத்தை உருவாக்கச் செய்கிறாள். அவன் அடைவது ஒரு பிரிவுத் துயர் என்பதைத் தாண்டி, வேறொரு வாழ்வியல் அனுபவம்.

செம்மறி ஆடுகளுக்கு இயற்கையான குழந்தை முகம் உண்டு என்பதுபோன்ற திடீரென முளைத்து, கைபிடித்து நிற்க வைக்கும் வரிகளும் இந்நாவலில் சிறப்பியல்பு.

மைத்ரி, அஜிதன், விஷ்ணுபுரம் பதிப்பகம் 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர் 641041 விலை ரூ:300

வைகறையைப் பருகுதல்

புத்துணர்ச்சியும்  தனித்துவ அனுபவக் காட்சிகளும் நிரம்பிய ஹைகூ தொகுப்புடன் வந்திருக்கிறார் க.ராஜகுமாரன்.

ஏரிகுளம் கடந்து

தன்னை இழக்கிறது

கடலிடம் நதி

---------------------------------------------------

அவ்வளவு சுவை

வைகறை நிரம்பியிருக்கும்

தேநீர்க் கோப்பை

இவை இரண்டும் உதாரணங்கள்தான். நதியையும் தேநீரையும் காலத்தின் கூறுகளாக முன்வைப்பது ஹைகூவின் இயல்பு. முதல் கவிதையில் காலம் கரைந்துகொண்டே இருக்கிறது. பின்னதில்  காலத்தைப்  பருகுகிறோம். இத்தொகுப்பில் இருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் காலத்தைக் காட்சிகளுடனும் பார்வை-களுடனும் கலந்து பின்னித் தரும் தரிசனங்-கள் அபாரமானவை. ரசித்துப் பருகையில் மிடறுகளின் இடைவெளியில் புத்தனைப் பிடித்துவந்து கவிஞர் நிறுத்துகிறார். கவிஞர் பழநிபாரதி, நாணற்காடன் ஆகியோரது முன்னுரைகளுடனும் தயானி தாயுமானவனின் கோட்டோவியங்களுடன் அழகுற உள்ளது இந்நூல்.

மிடறுகளின் இடைவெளியில் புத்தன், க.ராஜகுமாரன், வேரல் புக்ஸ், 6, இரண்டாவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம்,

சென்னை-93. பேச: 9678764322; விலை: ரூ 100

பெருமூச்சின் மணம்

புலம்பெயர்ந்து பெருநகருக்கு வந்த மனத்தின் ஏக்கங்களையும் பெருமூச்சுகளையுமே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது இயக்குநர் சீனு ராம

சாமியின் இந்த கவிதைத் தொகுப்பு.

நோக்கம் என்ற ஒரு கவிதை இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்று. மத்தியானத்தை வெறுக்காதவர் எனத் தொடங்கும் இக்கவிதை மதியத்தைக் கொண்டாடும் ஒரு வசதியான மனிதரின் உணர்வுகளையும் அதே ஊரில் தனிமையில் தவித்திருக்கும், வாய்ப்புத் தேடி அலையும் ஒரு மனிதனின் உணர்வுகளையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. ஒருவர் மத்தியான கொண்டாட்டத்தின் பீடாதிபதி; இன்னொருவர் தெருக்களில் கறிக்குழம்பின் வாசனையில் பசித்து அலைகிறவர். எவராக இங்குவந்தீர்கள்? அதன் பொருட்டே மத்தியானங்கள் இந்நகரத்தில்.. என இக்கவிதை முடிகிறது. தனிமையில் பசித்திருக்கும் ஞாயிற்றுக்கிழமைகள் கொடுமையானவை. அனுபவித்தவருக்கே புரியக்கூடியவை.

புலம்பெயர்ந்த/வாழ்வில்தான்/ தெரியவரும்/ தன் தாய்பூமியில் விளையும்/ கிழங்கின் குணம் என்று சீனு ராமசாமி எழுதுகையில் கிழங்கு என்பது கிழங்கை மட்டும் குறிப்பதல்ல. அது ஊர் மடியின் ஞாபகம்; ஊர்க்காற்றின் சுகந்தம்.

இத்தொகுப்பின் ஊடாகப் பயணிக்கையில் மெல்ல ஊரையும் நகரையும் தாண்டி தன் சுயத்தையும் அகத்தையும் குடும்பத்தையும் நோக்கிக் கவிதைகள் திரும்பி, பின்னர் அகன்ற பார்வையில் உலகை நோக்கித் திருப்பம் கொள்வதையும் உணர முடியும். இயக்குநரின் படங்களைப் போலவே சமரசமில்லாமல் இருக்கின்றன கவிதைகளும்

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை, வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், எண் 9, பிளாட் எண் 1080 ஏ, ரோகிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கேகே நகர் மேற்கு, சென்னை -78 பேச: 99404 46650 விலை ரூ: 330

புலிப்பெண்கள்

ராஜஸ்தானில் உள்ள ரந்தம்ப்பூர் புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகளைச் சென்று பார்க்க எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும் என்று தெரியாது. ஆனால் இந்த வேங்கைவனம் நாவல் அந்த வனப்பகுதிக்கு கூட்டிச் செல்வதுடன் அங்குள்ள புலிகள் ஒவ்வொன்றையும் வரலாற்று ரீதியாக அறிமுகம் செய்துவைக்கிறது. வேட்டைக்காடு, அணிநிழற்காடு என இரண்டு பகுதிகளாக விரியும் இந்த நாவலை நகர்த்திச்

செல்பவை பெண் பாத்திரங்கள். இந்திய வரலாற்றில் முக்கிய இடம்பெற்றிருக்கும் நூர்ஜஹான், மும்தாஜ் ஆகிய இருவர், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வேட்டைக்கு வந்த பெண்கள். இவர்களுடன் இன்னொரு பக்கம் காட்டை ஆளும் பெண்புலிகள்.  இந்திய விடுதலைக்குப் பின்னர் ரந்தம்பூர் காடு புலிகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கே வேட்டை தடை செய்யப்பட்டு, புலிகள் பாதுகாக்கப்படுவதை விவரிக்கிறது இரண்டாம் பகுதி.

காலந்தோறும் புலிகள் வேட்டையாடப்படுவதையே கதையின் முக்கியக் கூறாகக் கொண்டு படைத்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன். அதுவும் பெண் புலிகளின் வழியாகவே இந்த கதை சொல்லப்படுகிறது. வரலாற்றில் இடம்பிடித்த பெண்ணரசிகளுக்கு இணையாக பாகினி, பத்மினி, மச்லி என பெண் புலிகளும் தங்கள் காட்டை ஆளுவது மிக நுட்பமாக விவரிக்கப்படுகிறது. தங்கள் குட்டிகளைப் பேணுவதும் அவை வளர்ந்தபின் அவற்றில் ஒரு பெண் குட்டியிடம் தன் வசிப்பிடத்தை இழந்து வெளியேறி வேறுஇடத்தைத் தேடிச் செல்வதுமாக அவற்றின் கதை வளார்ந்து செல்கிறது.

வரலாற்றின் பெண்ணரசிகளையும் பெண்புலிகளையும் அவர்களின் தனித்த குணாதிசயங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வித்தியாசமாக எழுதிப்பார்த்திருக்கிறார் ஆசிரியர். பொதுவாகவே தன் எழுத்தில் வலிமையான பெண் பாத்திரங்களை உருவாக்குவதில் ஆசிரியர் வல்லவர் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கது. புலிகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் நேரில் பார்ப்பதுபோல் உள்ளன. வெறும் வரலாறு அல்லாமல் இந்நாவலின் ஊடாகச்

செல்வது உயிர்களில் பெண் வடிவம் பெற்றிருப்பவை எவ்வளவு காத்திரம் கொண்டவை, எவ்வளவு வலிமையுடன் காக்கும் திறன்படைத்தவை என்கிற சரடுதான். அதேசமயம் இது ஒரு விறுவிறுப்பான சுற்றுச்சூழலியல் நாவலாகவும் உருப்பெற்றுள்ளது.

வேங்கை வனம், எம்,கோபாலகிருஷ்ணன், வெளியீடு: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை& 51. பேச: 8667255103 விலை: ரூ 550

முருகனின் முளகு

பின் நவீனகாலத்துப் படைப்பாளி-களில் தனக்கென்றுஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்  இரா.முருகன். அவரது இப்புதிய நாவலின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மிளகைப் போல (இந்நாவலில் வரும் மதுரை உட்பட்ட தமிழ்நாட்டில் மிளகு, அம்பலப்புழை உட்பட்ட கேரளத்தில் குருமுளகு, நல்லமுளகு. மலையாளிகளுக்கு ‘முளகு' தமிழர்களுக்கு வத்தல் முளகு)

சிறிதாக இருக்குமோ என்ற எதிர்பார்த்தலுக்கு மாறாக 1189 பக்கங்கள் &-சின்ன எழுத்து&- மெகா நாவல் இது. தொல்காப்பிய கூற்றுப்படி களம், காலம் பற்றி பொருளடக்கத்திலேயே முன்கூட்டி (1596 மிர்ஜான் கோட்டை என்று துவங்கி..குறுக்கும் நெடுக்குமாக, அம்பலப்புழை, மதுரை, லண்டன் என்று 2000 ஆண்டு வரை) சொல்லப்பட்டிருக்கிறது... மெது நடையில் நாடகபாணியில் ஒவ்வொரு கட்டத்தையும் 

செதுக்கப்பட்டிருக்கிறது... எடுத்துக்காட்டுக்கு அந்த கட்டங்களை எல்லாம் இங்கே குறிப்பிட்டு இதை ஒரு மெகா உரையாக்க விரும்பவில்லையாயினும், மாதிரிக்கு ஒன்றை மட்டுமாவது சுட்டிகாட்டலாமென்று நினைக்கிறேன்... ராணியின் கையை போர்த்துகீஸ் அதிகாரி முத்தமிட்டதும், தாதி துடைப்பது... காரணம் பாத்ரூம் போனால் அவர்கள், நம்மைப்போல் நீரால் கழுவி சுத்தப்படுத்தல் இல்லை என்ற கூற்று...

வாசகர்களின் ஞாபகசக்தியை சோதிக்கும் எண்ணற்ற கதைமாந்தர்கள், ராணி, போர்த்துகீஸ் அதிகாரி, தவிர பிஷாரடி, சங்கரன் இத்யாதி இத்யாதி..கணிப்பொறி, ஸ்மார்ட் போன் போன்ற நவயுக சாதனங்கள் துணையிருந்தாலும் இந்த அவசர யுகத்தில் இப்படியொரு மெகாநாவலை மனதில் சூல்கொண்டு, குறைப்பிரசவமாகிவிடாமல் முழுதாய் பிரசவிக்க அபாரமான மானசீக வலுவும், பொலிவும், பொறுமையும் வேண்டும். அது இந்நாவலின் ஆசிரியருக்கு அநாயாசமாக

சித்தித்திருக்கிறது என்று ஐயமறச்சொல்லலாம்.

மிளகு, இரா.முருகன், வெளியீடு: எழுத்துப்பிரசுரம், எண் 55 (7), ஆர் பிளாக், 6- வது அவென்யு, அண்ணா நகர், சென்னை 600040, பக்கங்கள்: 1189. விலை: ரூ.1400

நீல பத்மநாபன்

போராட்ட வரலாறு

மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு பெறுவதற்காக நடைபெற்ற போராட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்டது. காகா கல்லேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகளை நேரு கிடப்பில் போட்டார். அதன் பின்னர் இதை ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் மண்டல் தலைமையில் ஆணையம் அமைத்து பரிந்துரைகள் வழங்கப்பட்டன. விபி சிங் ஆட்சியில்தான் இந்த பரிந்துரையின் படி 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கல்லேல்கர் ஆணைய பரிந்துரைகள் போல் மண்டல் பரிந்துரைகளும் கிடப்பில் போகாமலிருக்க வே.ஆனைமுத்து வடநாட்டில் மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பை 1990&இல் நூலாக வெளியிட்டார். அந்த நூலின் மறுபதிப்பு இதுவாகும். இதில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்து அவர்களின் தேர்தல் வாக்குறுதிப் படி பிற்படுத்தப்பட்டோர் இடொதுக்கீடு குறித்து ஆனைமுத்து உள்ளிட்ட குழுவினர் வாதிடும் பகுதி வாசித்துப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. நீங்கள்தான் (தமிழ்நாடு) எங்களுக்கு வாக்களிக்கவில்லையே? நான் ஏன் செய்யவேண்டும் என தேசாய் கேட்க, அவரிடம் வாதிடுகிறார்கள். இது போன்ற பல சம்பவங்களின் தொகுப்பு இந்நூல்.

மக்கள் நாயக உரிமைப்போர் - வகுப்புரிமை வரலாறு, திருச்சி வே.ஆனைமுத்து வெளியீடு: மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 2/12, சி.என்.கே.சந்து, சேப்பாக்கம், சென்னை - 5 பேச: 8668109047 விலை:ரூ 130

நாடகவியல்

நாடகக் கலை என்ற பெயரில் 1970 இல்,  ஆறு.அழகப்பன், மாத இதழ் ஒன்றை தொடங்கி,  இரு ஆண்டுகள் நடத்தினார்.  தமிழ் நாடகவியலுக்காக நடத்தப்பட்ட இந்த இதழை அறிமுகம் செய்கிறது இச்சிறு நூல்.

நாடகக் கலை, ஆ.தசரதன், வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர், சென்னை&40. பேச: 9840358301 விலை: ரூ 30

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com