
எனது சென்னை வாழ்க்கையில் இந்த கணம் வரை மேன்சனில் பணி நிமித்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த 2006 ஆண்டில், நான் ஒரு தொலைக்காட்சிக்கு பணிக்கு சென்னை வந்தபோது நண்பர்கள் குடியிருந்த அறையில் கடும் நெருக்கடிகளுடன், ஒரு வருடங்கள் எப்படியோ ஓட்டினேன் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு நாளிதழில் பணியில் சேர்ந்தபோது தங்க இடமும், உணவும் கிடைத்தது. இப்படியாகத்தான் எனது பத்திரிக்கை பிழைப்பு இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் சென்னையே வேண்டாம் என்று ஊருக்கு போனேன். சிலஆண்டுகள் கழிந்தன. ஆனால், வாழ்க்கை மீண்டும் என்னை ஊரிலிருந்து சென்னைக்கு விரட்டியது. 2015 வாக்கில் ஒரு மாலை நேர பத்திரிக்கையில் முழு நேர பணியில் சேர்ந்தேன். தங்குவதற்கு வாடகை வீடு தேடி பல இடங்களில் அலைந்தேன். காரணம் வீடு புரோக்கர்கள் கேட்ட முன் பணமும், வாடகையும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. இந்த நிலையில் நான் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்சன் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். கொரோனா காலகட்டம் வரை பணியில் இருந்த காலம் வரை- மேன்சனில் பல தரப்பட்ட ஆட்களை சந்தித்து இருக்கிறேன். இப்போதும் கூட ஆனால் மேன்சனில் நாவலில் வரும் வெள்ளந்தியான மனிதர்களை சரவணக்குமரனைப்போல நான் சந்திக்கவில்லை. இது அவருக்கு ஏற்பட்ட வியப்பான அனுபவம். அது தான் இந்த நாவல்.
நாட்டின் எந்த மூலையில் இருந்தும் பல்வேறு நெருக்கடிகளால் ஒடி வரும் நபர்களை இரு கரம் கொண்டு அணைத்துக் கொள்ளும் ஒரு வரப்பிரசாதம் சென்னை. எளிய வாழ்க்கையும் வாழ முடியும் எப்படியும் வாழ முடியும் என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டேயிருக்கும் ஒரு மாநகரம். சென்னையை குறித்த எழுத எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது வட சென்னையின் பல்வேறு கூறுகளை கரன்கார்க்கி தனது நாவல்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அதே போன்று அமிர்தம் சூர்யா, பாக்கியம் சங்கர், தமிழ்பிரபா போன்றவர்கள் நேர்த்தியாகவும் செழுமையாகவும் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரான சரவணக்குமரன், மேன்சன் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை வரலாற்று சம்பவங்களின் கோர்வையாடு நேர்த்தியாக பதிவு செய்து உள்ளார்.
நாவலின் முதல் வரி இப்படித்தான் தொடங்கிறது “மொட்டை மாடியின் சிமெண்ட் தரையிலிருந்து அனல் மேலேறிக் கொண்டிருந்தது. ஏன் எனில் மேன்சனில் வாடகை இருப்பவர்களின் கூடுமிடம் அதன் மொட்டை மாடி தான் அங்கு தான் இரவு எல்லாம் கூடி பேசுவது- மது அருந்துவது. சாப்பிடுவது உறங்குவது எல்லாமே அறையை விட மொட்டை மாடி ஒரு சாசுவதமான ஒரு வெளியை உருவாக்கி தரக்கூடியது. ஆனால் இப்போது உள்ள பல மேன்களில் மொட்டை மாடிகளே இல்லை அதனையும் ஒரு ஆள் படுக்கும் மிக சிறிய அறையாக மாற்றி பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாவல் முழுவதும் வீட்டினால் புறக்கணிப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள், வேலைத் தேடும் இளைஞர்கள், குடும்பம் இல்லாத மாத பென்சன் பெறுபவர்கள், இதனை விடவும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள் என பல பாத்திரங்களாக வருகிறார்கள். அவர்களின் வழியாக நேர்த்தியாக கதை சொல்லிக் கொண்டு செல்கிறார். இதில் எந்த பிணக்கும் இல்லை. வாசிப்புக்கு எந்த தடையும் இல்லாத சுவரசியம் குன்றாத நடை நாவலை எளிதாக வாசிக்கச் செய்கிறது. மேன்சன் குறித்து கவிதைகள், கதைகள், பத்திகள் ஆகியவற்றை ராஜமார்த்தண்டன், பிரபஞ்சன் ஒரளவுக்கு எழுதியிருக்கிறார்கள் என்றாலும், இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பல நூறு மேன்சன்கள் குறித்து தமிழில் நாவல் இல்லை என்பதை இந்நாவல் போக்கியுள்ளது.
நாவலில் கனகலிங்கம் என்கிற பாத்திரம் குடிகாரன். அவர் தினந்தோறும், ஒரு கட்டிங் அளவு குடிக்காவிடில் உறக்கம் வராது. அதற்காக அல்லாடுகிறார். குடிக்க பணமில்லாத நேரங்களில் அடுத்தவரைக் கெஞ்சுகிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவருக்கு போனஸ் பணம் ரூபாய் ஐயாயிரம் கிடைக்கிறது. அதை ஐம்பது நூறாக மாற்றிக் கொண்டு தனது மேன்ஷனை சுற்றிலும் வருவோர் போவோருக்குத் தந்துவிடுகிறார் இது குடி நோயாளிகளின் பலவீனத்தை மிக கச்சிதமாக சொல்லும் நாவலின் சித்திரமாக கருதுகிறேன். அடுத்த நாள் அவரிடம் பணம் இருக்காது இந்த நாவலில் மனிதர்கள் நிறைய பேர் வருகிறார்கள். சில பக்கங்களில் அவர்களது குறித்து கதைகள் முடிந்து போனாலும் அவர்களது கள்ளம் கபடமற்ற அவர்களது உள்ளம் நெகிழ வைக்கிறது.
என்னை பொறுத்தவரை மேன்சன் வாழ்க்கை ஒரு விளிம்பு நிலை என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது. ஏன் எனில், இங்கே நட்பாகி கொள்ளும் நபர்கள் முதலில் தொடங்குவது மது அருந்துவது, விலைமாதுவிடம் செல்வது குறித்து கதைப்பது, அடுத்து தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பெண்கள் அல்லது காதிலிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் குறித்து சக நண்பர்களிடம் பிற்றிக் கொள்வது அல்லது உரையாடுவது என்பதாக இருக்கும். அல்லது வாழ்வில் தான் உன்னதமான உயரங்களை தொட வேண்டும் என்று கனவில் சஞ்சரிப்பவர்களும் உண்டு. மேன்ஷன் நாவலில் வரும் அநேக பத்திரங்கள் குறிப்பாக வேடன் கிருஷ்ணன் என்ற பாத்திரம் எழுதப் போகும் நாவல் குறித்த தேடலில் அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் நிச்சயமின்மையே மேலேழுங்கியிருக்கிறது.
மேன்சன் வாழ்க்கையை என்பது முதலில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு வித சலிப்பை உருவாக்கும். பிறகு தனிமையை கிளர்த்தும் அதனாலேயே பலர் மது அருந்தி நிரந்தர குடிகாரர்கள் ஆகியிருக்கிறார்கள். சிலர் இறந்து போனதும் உண்டு என்பதை நாவல் கவலை தோய்ந்த மொழியில் சொல்கிறது. நாவலில் ஒரு இறப்புச் செய்தியைப் பிறர் உரையாடும் இடம் நீட்டித்துச் சொல்லப்படுகிறது. மேன்ஷன் நாவல் உருவாக்கும் மனநிலை என்பது பல்வேறு நபர்கள் மீது உண்டாகும் மனித கரிசனம்தான் என்று சொல்லிவிடலாம். ஊரிலிருந்து நகருக்கு வந்து பிழைக்கலாம் என வருகின்ற அன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை அவர்கள் சந்திக்கும் துவக்க கால நண்பர்கள் வயது வித்தியாசமின்றி ஒன்றாக கலந்து குடித்து, விவாதித்து, சாப்பிட்டு உறங்கி பிறகு காலத்தினால் பிரிந்தோ அல்லது கரைந்தோ போகிறார்கள்.
நாவலாசியர் முன்னுரையில் சொல்வது போல உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், உறவுகள் இருந்தும் கைவிடப்பட்டவர்கள், எங்கே செல்வது எப்படி வாழ்வது கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையே நடத்துபவர்கள் என அவர் சந்தித்த மனிதர்கள் மீது எந்த ஒப்பனை பூச்சும் பூசாமல் பதிவு செய்து இருக்கிறார். சமீப காலங்களில் நான் வசித்த நாவல்களில் மனதுக்கு நெருக்கமான பிரதி. எளிய மனிதர்களின் மனங்களை வெளிச்சம் போட்டு காட்டும் நல்ல நாவல். மனிதர்களின் துயரம் மிக்க கூடாரம். சென்னையை குறித்த நாவல் வரிசையில் தயக்கமின்றி இதனையும் சேர்த்துக் கொள்ளலாம். அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.
மேன்சன் (நாவல்): பா. சரவணகுமரன்
வெளியீடு: மின்னங்காடி
24.அண்ணா மூன்றாவது குறுக்குத்தெரு,
அவ்வை நகர், பாடி, சென்னை - 50
பக்கம்: 200 விலை:ரூ.250 ஃபோன்;78240 49160