
பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு தலைசிறந்த பெண் கவிஞர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழுக்கு வந்துள்ளனர். மீராவும் லல்லாவும் தான் அவர்கள். மீரா ராஜஸ்தானைச் சேர்ந்தவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. லல்லா ஜம்முகாஷ்மீரைச் சேர்ந்தவர். காலம் பதினான்காம் நூற்றாண்டு. இந்திய வரலாற்றில் மிக முக்கிய பெண்கவிஞர்கள் பட்டியலில் இடம் பிடித்த இவ்விருவரின் கவிதைகளையும் தமிழுக்கு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். மீராவின் கவிதைகளை காதலின் குறுவாள் என்ற தலைப்பில் செங்கதிர் மொழிபெயர்க்க, லல்லாவின் கவிதைகளை கொடுங்காற்றில் ஒரு விளக்கு என்ற தலைப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார்.
லல்லாவின் வாக்குகள் என்று இந்த கவிதைகளை அறிமுகப்படுத்தும் கோபாலகிருஷ்ணன், இன்றைய புரிதலின்படி அவைகளை கவிதைகள் என்று அவரை கவிஞர் என்றும் சொல்ல முடியாது என்கிறார். அதுவே தான் மீராவுக்கும் பொருந்தும் எனலாம். அவை வழிவழியாகப் பாடப்பட்டு வந்த வரிகள். மீரா ராஜகுடும்பத்தில் பிறந்தவர். கண்ணனின் மீதான ஆன்மீகக் காதலில் திளைத்தவர்.
அவரது பாடல்கள் இசைத்தன்மை கொண்டவை. நவீன கவிதைகளைப் போல தனிமையில் அமர்ந்து படிப்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. ராஜஸ்தானிய மொழியில் நாட்டார் வழக்குக்கு நெருக்கமான நடையில் பாடப்பட்டவற்றை நவீன மொழியில் கற்பனை செய்வது சுலபமானது அல்ல என்கிறார் செங்கதிர்.
கோபிகையே!
கருநீலனின் கண்கள் காதலின் குறுவாள்!
அவனை நோக்கியதுதான் தெரியும்
மதி கலங்கிப் போனேன்
புத்தியும் இழந்தேன்
என்கிற ரீதியில் கவித்துவமும் கிருஷ்ண பக்தியும் இணைந்த பாடல்கள் மீராவினுடையவை.
லல்லாவின் வாய்மொழிகள் வாக்குகளாகக் கேட்டு எழுதப்பட்டவை. அவை இன்று காஷ்மீர் முழுக்க மந்திரங்களாகவும் பாடல்களாகவும் கவிதைகளாகவும் ஒலிக்கின்றன என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்த வாக்குகள் அன்று சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் விதத்திலும் அன்றைய வழக்கிலிருந்த பல நடைமுறைகளைக் கேள்வி கேட்பனவாகவும் இருந்திருக்கின்றன. லல்லாவின் வாக்குகளைப் பார்த்தால் தமிழின் சித்தர்கள் மரபில் எளிதில் சேர்த்துவிடுமளவுக்கு கிளர்ச்சியாளர் எனலாம்.
நினைவில் கொள்
அண்டங்காக்கைகள்
கொத்தித்தின்னவே இந்த உடம்பு
-என்கிற லல்லாவை நாம் பின் எப்படிக் கருத முடியும்?
சிவன் என்றோ
கேசவன் என்றோ/
மகாவீர் என்றோ
புத்தன் என்றோ
எந்தப் பெயரிலும் இருக்கட்டும் அவன்
வறியவள் இவளின்
பிறவித் துயரைக் களைந்திட்டால் போதும்
அவனோ இவனோ எவனோ உவனோ
- இவையும் லல்லாவின் வரிகள்தான்.
இந்த இரண்டு கவிஞர்களின் தொகுப்புகளும் தனித்தனியாகவும் இரட்டைப் புத்தகங்களாகவும் அழகிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரும் பெண்கவிகளே, தமிழுக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!
வெளியீடு: நூல்வனம், ராமாபுரம், சென்னை -89
பேச: 9176549991. விலை: மீராவின் கவிதைகள்
- ரூ.180, லல்லாவின் கவிதைகள்- ரூ.250