
இந்த 49வது சென்னை புத்தகக் காட்சியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளுடன் புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த "ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை" புத்தகம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது என்றே கூற வேண்டும். ஏனென்றால் இந்த நூல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பரிசு விழாவில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. அது கிட்டத்தட்ட அந்த எழுத்தாளர்களின் வாக்குமூலம் போல் அமைந்திருக்கிறது. அந்த வகையில் ஆல் பெர் காம்யு , ஸால் பெல்லோ, செஸ்லா மிலஸ், காப்பிரியல் கார்சியா மார்க் கேஸ், நதீன் கோர்டிமர், டோனி மாரிசன், சீமஸ் ஹீனி, சரமாகோ, ஓரான் பாமுக், ஹெர்த்தா மில்லர், மரியோ வர்கர்ஸ் லோசா, மோ யான், ஸ்வெட்லானா அலெக்சி விச், ஹான் ஹாங் என 15 படைப்பாளிகளின் வாக்குமூலங்கள் போன்ற உரைகள் பதிவாகியுள்ளன. அவர்கள் எழுத்தாளரான பின்னணி,குடும்ப - சமூக சூழல்,கடந்து வந்த பாதை,எழுதுகிற மனநிலை , எழுத எடுத்துக் கொள்ளும் கருப்பொருள் இப்படி பல்வேறு கேள்விகளுக்குப் பதிலாகவும் அமைந்து படிப்பவருக்கு சுவாரஸ்யம் தருகிறது.நல்ல வாசிப்பு அனுபவமாகவும் மாறி விடுகிறது.
புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரும், தொகுப்பாளருமான ஸிந்துஜா முன்னுரையில் சொல்வது போல " நோபல் உரைகள் எப்போதும் இலக்கிய ஆசிரியனின் காலத்திய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலைச் சூழல்களைப் பிரதிபலிக்கும் விதத்தில்தான் வெளிப்படுகின்றன." பதினைந்து உலக இலக்கிய ஆளுமைகளின் உரைகளில் வெளிப்படும் வார்த்தைகள் உண்மையுடனும் அனுபவங்களின் ஆழமான சக்தியுடனும் பின்னிப் பிணைந்து வருவதால் அவற்றின் தாக்கம் சீரிய வாசகரின் நினைவுகளில் ஆழமான தடங்களைப் பதித்து விடுகின்றன.
தொகுப்பின் முதல் உரை ஆல்பெர்காம்யுவிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆல்பெர் காம்யு தனது நாற்பத்தி நான்காவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.(இவ்வளவு இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற இரண்டாமவர்), அவர் ஒரு பிரெஞ்சு தத்துவவாதியாக, நாவலாசிரியாராக, நாடக ஆசிரியராக,பத்திரிகையாளராக, உலகக் கூட்டாட்சி விரும்பியாக, அரசியல் சீர்திருத்தவாதியாக உலகெங்கும் அறியப்படுபவர். காம்யுவின் நாவல்களும் நாடகங்களும் இருத்தலியல் பற்றியும் அந்நியமாதல் பற்றியும் பேசும் உயர்ந்த இலக்கிய படைப்புகளாக வலம் வருகின்றன.
படைப்பாளி அவனது சமூகத்தின் அன்பைப் பெற்றிட முடியும். என்று கூறும் காம்யு அவனது படைப்பின் மேதைமையை உருவாக்கும் இரண்டு பொறுப்புகளை அவன் தனது திறமைக்கு ஏற்ப ஒப்புக்கொண்டு செயல் புரிய வேண்டும் என்கிறார். சத்தியம், மர்மங்கள் நிரம்பிய, எளிதில் கிட்டி விடாத, அடக்கியாள வேண்டிய ஒன்று. விடுதலை பயங்கரமானது,கட்டுப்பாட்டுக்கு அடங்காதது. நாம் இந்த இரண்டு குறிக்கோள்களை நோக்கிச் செல்ல வேண்டும். அவை வலியை ஏற்படுத்தினாலும் உறுதியுடன் நாம் செயல்பட வேண்டும் என்கிறார். ஒன்று எழுத்தாளன் அவனிடம் முன் வைக்கப்படும் உண்மைக்குப் பாடுபட வேண்டும்; இரண்டாவது சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்ற வேண்டும். தன்னைப் பொறுத்தவரை தனது கலை இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது; ஆனால்,அதேசமயம் அது எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று தான் கருதவில்லை.என்றும் மிகத் தெளிவாக உரைக்கிறார்.
"தனிமையில் நூறு ஆண்டுகள்" என்னும் உலகப் புகழ் பெற்ற நாவலை எழுதிய மார்க்கேஸின் நோபல் உரையின் தலைப்பு "இலத்தீன் அமெரிக்காவின் தனிமை!". "மாய யதார்த்தவாதம்" என்னும் சொல்லை 1925ஆம் ஆண்டு ஜெர்மானியக் கலை விமரிசகரான ஃபிரான்ஸ் ரோ முதன் முதலில் உபயோகப்படுத்தினார். பின்னர் அது சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் காலடி எடுத்து வைத்தது. இதை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் முன்னெடுத்துச் சென்றவர்களென மார்க்கேஸ், லோசா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
மாய யதார்த்தவாதம் என்பது புனைவையும் கலையையும் கலந்து ஒரு நம்பும் உலகை முன்வைக்கிறது. கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை மாயாஜாலங்கள் நிறைந்த கதை விடுவிக்க முயலுகிறது. உணர்வுகளைத் தூண்ட அல்ல, அவற்றை வெளிப்படுத்துவதே மாய யதார்த்தவாதத்தின் அடிப்படைப் பண்பு. மார்க்கேஸ் இதை நன்கு உணர்ந்தவராகத் தனது படைப்பில் வெளிப்படுத்தினார்.
இலத்தீன் அமெரிக்காவின் தனிமை என்று மார்க்கேஸ் குறிப்பது என்ன?
"இலத்தீன் அமெரிக்கா அதனுடைய சுய விருப்பமில்லாமலோ ஒரு பகடைக்காயாகவோ இயங்க விரும்பாது; அதனுடைய சுதந்திர தாகமும் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும் மேற்கத்திய விருப்பத்துக்கு உடன்படுவது என்பது ஒருவர் காணும் கனவே. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள இடைவெளியைச் சுருக்கிய ஊடுருவல் முயற்சிகள், எங்களின் கலாச்சாரத் தோற்றத்தை அதிகப்படுத்தி விட்டன. இலக்கியத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்ட சுயத்தன்மைக்கான சுதந்திரத்தை ஏன் எங்களின் சமூக மாற்றங்களுக்கான முயற்சிகளுக்குத் தர மறுக்க வேண்டும்? முற்போக்கான ஐரோப்பியர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு வேண்டும் என்று விரும்பிய அதே சமூக நீதியை, ஏன் எங்களது இலத்தீன் அமெரிக்காவுமான இலக்கு என்று வெவ்வேறு முறைகளில் வெவ்வேறு சூழல்களுக்கென்று அறிவிக்க முன்வரவில்லை? இல்லை. எங்கள் சரித்திரம் சந்தித்த அளவற்ற வன்முறையும் வலியும் நேர்ந்தது சமத்துவமின்மையினாலும் சொல்ல முடியாத கைப்புணர்வாலும்தான். எங்கள் நாட்டைச் சேர்ந்த மூவாயிரம் குழுக்களின் மேல் சாத்தப்பட்ட சதியால் அல்ல. ஆனால், பல ஐரோப்பியத் தலைவர்களும் பேரறிஞர்களும் நினைப்பது என்னவோ அப்படித்தான். சிறுபிள்ளைத்தனம் நிரம்பிய வயதானவர்கள் அவர்களது உல்லாசமான இளமை வாழ்க்கையை மறந்து விட்டு உலகின் இரு பெரும் வல்லரசுகளின் கருணையில் வாழ்வதை விட வேறு வழியில்லை என்று நினைப்பது சரியல்ல. என் நண்பர்களே, இதுதான் நமது தனிமையின் அளவீடாக ஆகிவிட்டது" என்ற சாரத்தை அவருடைய நோபல் உரை நமக்கு அறியத் தருகிறது. தற்போது வெனிசூலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் தாக்குதலின் பின்னணியில் இந்த உரை பொருத்தமாகவே உள்ளது.
’ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று ஆரம்பிக்கும் தென் ஆப்பிரிக்கப் படைப்பாளியான நதீன் கோர்டிமேரின் உரை, வார்த்தை மனிதர் கையில் கிடைத்து மனித நாகரிகம், மதச் சார்பு அரசியல் அதிகாரம் ஆகிய நிலைகளில் உயர்வையும் தாழ்வையும் சென்றடைந்தது பற்றி விரிவாகப் பேசுகிறார்.
தன்னைப் பற்றித், தனது எழுத்தைப் பற்றிக் கூறுகையில் காப்காவின் கீழ்க்கண்ட உருவகக் கதையை எடுத்து இயம்புகிறார்:
"என்னிடம் மூன்று நாய்கள். அவற்றின் பெயர்கள் - 'பிடி அவனை', 'கைப்பற்று அவனை', 'இனிமேல் கிடையாது'. இதில் 'பிடி அவனை', 'கைப்பற்று அவனை' என்னும் இரு நாய்களும் பெல்ஜிய கறுப்பு நிற நாய்கள். அவற்றைப் பற்றி யாரும் அறிந்ததில்லை, அவை தனியாக இருப்பவை. ஆனால், 'இனிமேல் கிடையாது' ஒரு வித்தியாசமான நாய். அலையும் தன்மை கொண்டது. ஒரு ஜிப்ஸி!"
நோபல் உரையில் கோர்டிமேர் தென்னாப்பிரிக்காவில் தான் வளர்ந்த வளர்ந்த சிறிய ஊரில் தானும் ஒரு 'இனிமேல் கிடையாது'வாக வளர்ந்தேன்.என்கிறார்!
கோர்டிமேர் சில சிக்கலான கேள்விகளை வாசகர்கள் முன் வைக்கிறார்: படைப்பாளி சீராகவும் நிலைத்த உறுதிப்பாட்டுடனும் தன் எழுத்து செல்லும் விதியை நிர்ணயிக்கிறானா? அவ்வாறு இயங்குவதன் மூலம் வாழ்க்கைக்குள் பொதிந்திருக்கும் உயிர்ப்புத் தன்மையை நாடி பிடித்து அவனால் பார்க்க முடிகின்றதா? அவரைப் பொறுத்தவரை உயிர்த்திருத்தலின் வலிமையை எழுத்தாளன் தனது வழிமுறைகளின் மீது கண்டடைய முயலுகிறான். ஆனால், வாழ்க்கையே குருட்டாம்போக்கு நிறைந்து வழிகின்ற ஒன்று. சூழலும் பிரக்ஞையின் பல்வேறு கூறுகளும் அவனை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இழுக்கின்றன. தூய உயிர்த்திருத்தல் என்று தனியே எதுவும் இல்லை. தூய எழுத்து என்று ஒன்று கிடையாது என்பது போல. அனைத்தும் கண்மூடித்தனமாக வந்து சேர்வது போலக் காணக் கிடைப்பதுதான் உண்மை. விமர்சன அலசல்களால் அவற்றைத் தீர்மானிக்க முடிவதில்லை அவை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும். பிரித்துப் பதம் பார்த்து மறுகட்டமைப்பு செய்வது என்பதே மறுத்துரைப்பதுதான். ஏனெனில், மறுகட்டமைப்பு என்பது உடைந்து விட்ட பாகங்களை ஒன்றையொன்று சேர்த்து வைக்கும் முயற்சியே.
உலகம் முழுவதும் பரவிக் கிடைக்கும் எழுத்தாளனின் மனநிலையை அவரது இந்த வாசகங்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன: "நாம் யாருக்காக எழுதுகிறோம் என்னும் துன்புறுத்தும் கேள்வி ஒவ்வொரு படைப்பாளியிடமும் எழுகிறது. வாலில் கட்டப்பட்ட தகரக் குவளையைப் போல ஒவ்வொரு பிரசுரத்தின் போதும் அது எழுப்பும் ஒலியில் கேட்பது பாராட்டுரையா அல்லது வசவா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுத்தாளனிடம் இயல்பாக இருக்கிறது!"
டோனி மாரிசன் தன் உரையை ஒரு கதையாக வடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. கறுப்பினத்தவர் தீண்டப்படாதவர்கள் என்ற நிலைமை நாடு முழுவதும் படர்ந்திருந்த நாள்களில் வாழ்நாள் துயரங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு செல்வாக்கு மிக்க எழுத்தாளராக உச்சாணிக்குச் சென்றவர் டோனி மாரிசன். உலகப் புகழ் பெற்ற ராண்டம் ஹவுஸ் பிரசுராலயத்தின் தலைவராக அவர் இருந்த சமயம் எண்ணற்ற இளம் எழுத்தாளர்களைக் கண்டு பிடித்து வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை உடையவர். அவருடைய நோபல் உரையில் அவர் முக்கியமாக வெளிப்படுத்தும் கருத்து மொழியை அடக்கியாண்டு அதன் மூலம் அராஜகத்தை நிலை நாட்டும் அரசியல் வெளிப்பாடுகளை நாம் ஒழித்துக் கட்ட வேண்டும் எனபதைத்தான்.
பன்றி மேய்க்கும் குடும்பத்தில் பிறந்த சரமாகோ தனது பாட்டியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் படிப்பறிவு இல்லாத ஒரு மூதாட்டி சாவைப் பற்றிக் கூறும் கட்டம் பெரும் தத்துவ ஞானிகளின் ஆழ்ந்த புரிதலுக்கு இணையாக இருக்கிறது. சரமாகோ இவ்வாறு கூறுகிறார்.:
" ஒருநாள் மாலையில் வாசல் கதவுப் பக்கம் உட்கார்ந்தபடி வானத்தில் தென்பட்ட நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டு என் பாட்டி "உலகம் அற்புதமானது. அதை விட்டுவிட்டு நான் மரணம் அடைய வேண்டியிருப்பது பெரும் கொடுமை" என்றாள். அவள் சாவதற்குப் பயப்படுவதாகச் சொல்லவில்லை. வாழ்நாள் முழுவதும் உழைத்தே வளர்ந்த அவளுக்குக் கண்ணுக்கெட்டாத சக்தியின் அருளும் அமைதியும் தனது வாழ்நாளின் இறுதியில் பிரியா விடை தருவது போலத் தோன்றிய தருணத்தைத்தான் சாவு பரிதாபத்துக்குரியது என்று சொன்னாள் போலும்! அவள் வாசல் கதவருகில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அம்மாதிரிக் காட்சியை இவ்வுலகில் நான் வேறெங்கும் காண முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், அவள் வளர்ந்த அந்த வீட்டில் பன்றிக் குட்டிகளைத் தன் குழந்தைகள் போல அரவணைத்துக்கொண்டு, அழகான இவ்வுலகத்தைப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தை மனதில் இருத்திக்கொண்டு இருந்த தருணத்தை அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். என் தாத்தா ஜெரோனிமோ - அந்தப் பொல்லாத கிழவனோ - சாவு தன்னை நெருங்கி வருவதை முற்றிலும் அறிந்தவரைப் போலத் தோட்டத்தில் வளர்ந்து நின்ற ஒவ்வொரு மரத்துக்கும் அருகில் போய் நின்று அவற்றை அணைத்துக் கட்டிக்கொண்டு கதறினார். ஏனென்றால், அவற்றைவிட்டு நிரந்தரமாகப் பிரிய வேண்டுமே என்கிற சோகத்தில் மூழ்கி இருந்தார்."
சரமாகோ தான் சார்ந்திருந்த மற்றும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட குடும்பங்களைப் போர்ச்சுக்கல் அரசும் தேவாலய அமைப்பும், பெரும் பணக்காரர்களும் அடிமைகளாக நடமாட விட்டுச் செய்த பெரும் கொடுமைகளை விவரிக்கிறார். மூன்று தலைமுறை குடியானவக் குடும்பங்கள், 1974 ஏப்ரல் புரட்சியின் மூலம் சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்படும் வரை அடைந்த இன்னல்கள்... அந்த மனிதர்கள் ஆகியவற்றை அவரது 'ரிஸன் ஃ பிரம் தி கிரவுண்டு' நாவலில் அவர் உலவ விட்டிருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். சரமாகோவின் அனைத்து நாவல்களும் அவரது சொந்த அனுபவங்கள் உணர்த்திய உண்மைகளை வெளிக் கொணர்வதற்காக எழுதப்பட்டவையே என்று திட்டமாகத் தெரிகிறது.
"என் தந்தையின் கைப்பெட்டி" என்பது ஓரான் பாமுக் தனது உரைக்குத் தந்திருக்கும் தலைப்பு. அவரது தந்தையும் குடும்பத்தின் மற்ற உறவுகளும் அவரது படிப்படியான எழுத்தாள வாழ்க்கையைச் செதுக்கினார்கள் என்று விரிவாகக் கூறுகிறது. ஒரு எழுத்தாளனின் விழைவு எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட ஒருஅழகான துருக்கியப் பழமொழியை - ஓர் ஊசியின் உதவியுடன் கிணறு தோண்டுவது - அவர் குறிப்பிடுவது வாசகனிடத்தில் ஒருவித திடுக்கிடலையும், பின்னர் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.
சிந்தனையிலும் உள்ளத்திலும் உடம்பின் ரத்த நாளங்களிலும் பொங்கிப் பிரவகிக்கும் எழுத்தின் மீதான தனது எண்ணங்களை ஓரான் பாமுக் தனது உரையில் வடித்திருப்பது ஒப்பற்ற விதத்தில் வந்திருக்கிறது. அது பின் வருமாறு:
"சில இனிமையான வார்த்தைகளின் மூலம் ஒரு ரேடியோ இசையைப் போல நான் எழுத விரும்புகிறேன். என் போன்ற எழுத்தாளர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி: எதற்காக எழுதுகிறீர்கள்? எழுத வேண்டும் என்னும் உள்ளார்ந்த உந்துதலினால் நான் எழுதுகிறேன். மற்றவர்களைப் போல என்னால் பொதுவான வேலையை, பணியைச் செய்ய முடியவில்லை. நான் படிக்கும் புத்தகங்களைப் போன்று நான் எழுத விரும்புகிறேன். உங்கள் மீதும், ஒவ்வொருவர் மீதும் நான் கோபம் கொள்வதால் எழுதுகிறேன். நாள் முழுவதும் ஓர் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு எழுதும் விருப்பத்தினால் எழுதுகிறேன். வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதை ஒரு கைம்மாறு போலச் செய்ய எழுதுகிறேன். நாம் எம்மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று மற்றவர்களும், நாம் எல்லோரும், இந்த உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்று எழுதுகிறேன். இஸ்தான்புல்லின், துருக்கியின் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறேன். நான் உபயோகிக்கும் தாள், பேனா, மசி ஆகியவற்றின் வாசனை எனக்குப் பிடித்திருப்பதால் எழுதுகிறேன். மற்ற எதையும் விட எனக்கு இலக்கியமும் நாவலும் பிடித்திருப்பதால் எழுதுகிறேன். எழுதுவது எனது பழக்கம், எனது வெறி. நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்னும் பயத்தால் எழுதுகிறேன். எழுத்து கொண்டு வந்து தரும் புகழும் ஆர்வமும் என்னை எழுத வைக்கின்றன. நான் தனியாக இருக்க விரும்புவதால் எழுதுகிறேன். நான் ஏன் மிகுந்த கோபத்துடன் உங்கள் மீதும் ஒவ்வொருவர் மீதும் எரிச்சல் கொள்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள எழுதுகிறேன். நான் படிக்கப்பட வேண்டும் என்பதால் எழுதுகிறேன். ஒரு நாவலை, கட்டுரையை, ஒரு பக்கத்தை எழுத ஆரம்பிக்கும் போது, அதை முடித்து விட வேண்டும் என்று எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் நான் எழுதுகிறேன். நூலகங்கள் அமரத்துவம் உடையவை என்னும் என் சிறுபிராயத்து நம்பிக்கையில் என் புத்தகங்கள் புத்தக அலமாரிகளில் இருக்க வேண்டும் என்று எழுதுகிறேன். வாழ்க்கையின் அழகுகளையும் செல்வாக்குகளையும் வார்த்தைகளில் கொண்டு வர வேண்டும் என்று எழுதுகிறேன். நான் சொல்வதற்காக அல்ல, உருவாக்குவதற்காக ஒரு கதையை எழுதுகிறேன். நான் போக வேண்டிய, ஆனால், போக முடியாதவாறு தடுக்கும் உற்பாதத்திலிருந்து தப்பிக்க எழுதுகிறேன். நான் சந்தோஷமாக இருக்க முடிந்ததில்லை என்பதால் எழுதுகிறேன். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
தென் கொரியாவைச் சார்ந்த ஹான் காங் தனது "The Vegetarian" என்னும் நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார். இந்நூலின் மைய நோக்கம் அசைவத்தை மறுப்பதா, இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்னும் தணியாத ஆர்வமா, பெண்ணின் உரிமைக்கான போராட்டமா, மனச் சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவா என்றால் எல்லாம் அதனதன் முக்கியத்துவத்தில் கதாநாயகியின் பிடிவாதத்துடன் நாவலாக உருப்பெறுகின்றன. ஆரம்பத்தில்
நிகழ்காலம் இறந்த காலத்துக்கு உதவுமா?
உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களைக் காக்க முடியுமா?
என்னும் கவிதை வரிகள் ஹான் காங்குக்கு எழுப்பிய கேள்விகளை நாளடைவில் அனுபவங்கள் மூலம் சாத்தியமற்ற கேள்விகள் என்பதை புரிந்து கொள்கிறார். இந்த அனுபவங்கள் தந்த தெளிவில் மேற்குறிப்பிட்ட கேள்விகள் கீழ்க்கண்டவாறு மாறி விடுகின்றன:.
கடந்த காலம் நிகழ்காலத்துக்கு உதவுமா?
இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களைக் காக்க முடியுமா?
இவ்வரிகள் தனது முதல் நாவலிலிருந்து சமீப காலத்தில் வெளிவந்த நாவலுக்கு அவர் பெற்ற மாற்றங்களை வெளிப்படுத்தின என்கிறார். தன் உரையை முடிக்கும் போது தனக்கும் வாசகனுக்குமான நெருங்கிய உறவை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
பார்த்ததை, கேட்டதை, முகர்ந்ததை, தண்மையுடைய குளிரையும் வலியைக் கொண்ட வெம்மையையும் அனுபவித்ததை, இதயம் படபடத்ததை, தூக்கத்தையும் பசியையும் உணர்ந்ததை, நடப்பதை, ஓடுவதை, காற்றையும் மழையையும் பனியையும் தொடுவதை, கைகளைச் சேர்த்துக்கொள்வதை என் உடல் அனுபவிக்க அவற்றை நான் எழுத்தில் கொண்டு வருகிறேன். இந்தப் பரவசம் நிரம்பிய உணர்வுகளை உடம்புக்குள் ஓடும் இரத்தத்தின் இயல்புடன் என் வாக்கியங்களில் கொண்டு வருகிறேன். ஏதோ நான் ஒருதொலைபேசி மின்னோட்டத்தைப் பாய்ச்சுவது போல. இந்த மின்சாரம் என் வாசகர்கள் மீது செலுத்தப்படும் போது எனக்கு ஆச்சரியமும் நெகிழ்வும் ஏற்படுகின்றன. இத்தகைய தருணங்களில் மொழி என்னும் சாதனம் ஏற்படுத்தும் தொடர்பை அனுபவிக்கிறேன்; எப்படி என் கேள்விகள் வாசகர்களை ஒரு மின்னோட்டமென அடைகின்றன என்று புரிந்துகெள்கிறேன். இந்த சரடின் மூலம் என்னோடு இணைந்து கொண்டவர்களுக்கும் இனிமேல் வரப் போகிறவர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை" புத்தகத்தின் ஸிந்துஜாவின் மொழிபெயர்ப்பு எளிதாகவும் சரளமாகவும் இருக்கிறது. பதினைந்து உலக இலக்கிய ஆளுமைகள், அவர்தம் வேறுபட்ட உலகங்கள், வித்தியாசமான அதே சமயம் மனதைக் கவரும் அவர்களது அனுபவங்கள் இவை எல்லாம் சேர்ந்து இந்தக் கட்டுரைத் தொகுதியைப் படிப்பது ஏதோ ஒரு சிறந்த நாவலைப் படிக்கும் அனுபவத்தைத் தருகிறது.
நூல் : "ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை"
(நோபல் உரைகள் தொகுப்பு)
ஆசிரியர் : ஸிந்துஜா
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
அலைபேசி : 97910 71218
விலை "ரூ. 250/-
(சென்னை புத்தகக் காட்சி அரங்கு எண்கள்: 493 - 494