
பேறிஞர் ஆனைமுத்து என தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டவர் ஆனைமுத்து. தோழர் எனவே அழைக்கப்பட எந்நாளும் விரும்பியவர். பெரியாரின் எழுத்துகளை அவர் ஒப்புதலுடன் முதலில் தொகுத்தவர். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர். திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதில் தொடர் ஈடுபாடு காட்டி அதற்காகவே வாழ்ந்து மறைந்தவர். அவரது நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடிய மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்த விளம்பரமும் இடம்பெறாத கருத்துச் செறிவுள்ள பெரியாரியத் தொண்டரைப் பற்றிய கருத்துக் கருவூலமாக இம்மலர் உருவாகி உள்ளது. பழ.நெடுமாறன், ஆ.இராசா, மு.நாகநாதன், விடுதலை இராசேந்திரன், தியாகு, ஓவியா, எஸ்.வி.ஆர். எனத்தொடங்கி 75 கட்டுரைகளை அடங்கிய மலர் இது. ஏராளமான அரிய செய்திகள். 1912 முதல் 1973 வரையிலான 61 ஆண்டு காலத்தில் பெரியார் என்ன செய்தார்? எந்த ஊரில் இருந்தார் எங்கு பேசினார் என்பதை நாள்வாரியாகத் தொகுத்த ‘பெரியார் ஈவேரா காலக்கண்ணாடி’ என்ற நூல் ஆனைமுத்துவின் கடும் உழைப்புக்கு ஓர் உதாரணம் என ப.திருமாவேலன் இம்மலரில் தன் கட்டுரையில் பதிவு செய்கிறார். பெரியாரியலில் ஆர்வம் கொண்ட அனைவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான தொகுப்பு இம்மலர் ஆகும்.
அறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு மலர், வெளியீடு: மார்க்சியப் பெரியாரியப் பொதுவுமைக் கட்சி. பேச: 8668109047