பண்ணையில் ஒரு மிருகம்
பண்ணையில் ஒரு மிருகம்

பண்ணையில் ஒரு மிருகம்

நோயல் நடேசன் எழுதிய நாவல் பற்றிய விமர்சனக்குறிப்பு

இந்நாவலில்  காஞ்சிபுரம்  மாவட்டத்திலமைந்த ஒரு கால்நடைப்பண்ணையில் 30 வருடங்களின் முன்பு நடந்த  சம்பவங்களையும், அங்கே பணிபுரிய நேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மரபுகள், ஜாதி அபிமானத்தையும், அங்கு இரகசியமாக நடந்தேறிய கொலைகளையும் அவற்றைத் தற்கொலையெனவே நம்பவைத்த மேலாண்மை ஜாதியினரின்  தந்திரங்களையும்  கண்முன்னே  படைத்திருப்பதன்மூலம்  அருமையான வாசிப்பு இன்பத்தையும் அள்ளி வழங்கியிருக்கிறார் இப்புதினத்தின் ஆசிரியரும் அப்பண்ணையில் பணிபுரியநேர்ந்த கால்நடைமருத்துவருமான இலங்கையைச்சேர்ந்த நோயல் நடேசன்

இன்றைக்கிருப்பதைப்போல்  3 தசாப்தங்களுக்கு முன்னான வாழ்க்கைமுறை.  அங்கே எலியோட்டம் எனும்வகையிலான  ஒன்றல்ல. மக்களுக்கு ஆறுதலாக நின்றுநிதானித்து மற்றவர்களுடன் பேசவும் அவர்களின் சுகநலன்களை விசாரிக்கவும் அவர்கள்மேல் அக்கறைகொள்ளவும் முடிந்தபோது உதவவும் நேரமிருந்தது. பண்ணைப்பராமரிப்பளர்கள் ஆறுதலாக நகரத்துக்குப்போய் மாடுகளுக்குத்தேவையான தீவனங்கள், இன்னும் அங்குதேவையான பொருட்களை, மருந்துவகைகள் போன்றவற்றை வாங்கிவருவது சமையல்செய்வது சாப்பிடுவது, பாடுகள் பேசுவதெல்லாம் இப்புதினத்தில் நிதானமாக அவதானித்து விவரிக்கப்பட்டுள்ளன.

 30 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவின் தொலைதூரத்தொடரிகளில் பயணஞ்செய்ய நேர்ந்திருந்தால் ஆண்களில் செவ்விகிதம்பேர் சலவைகாணாத வேட்டிகளையே உடுத்தியிருப்பார்கள், பத்துவீதமானவர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்திருக்க இன்னொரு பத்துவீதம்பேர் நீளக்களிசான் சேர்ட்டு அணிந்திருப்பார்கள். பயணிகளில் பாதிப்பேர் ஆணோபெண்ணோ இடைப்பாலினத்தவரோ வெற்றிலையையோ புகையிலையையோ வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டு அருகிலிருப்பவர் எதிரிலிருப்பவர்களுடன் வாய்மூடாது சலம்பிக்கொண்டும் உல்லாசமாகவும் பயணங்களை அநுபவித்தபடி பயணிப்பார்கள். இப்போது அதேதொடரிப்பயணங்களில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டதைக்காணலாம். செவ்வீதம்பேர் களிசானும் ஜீன்ஸும் டீ ஷேர்ட்டிலுமிருக்க, ஒரு 20 சதவீதமானவர்களே வேஷ்டி அணிந்திருப்பார்கள். அநேகமானோர், தத்தம் பத்திரிகைகளிலும், அலைபேசிகளிலும் மடிக்கணினிகளிலும் மூழ்கியிருக்க யாராவது சிலபேரே மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைக்குதப்புவோர் அருகி அலப்பறைகளும் அருகலாகவே காதில் விழும். சும்மா தமிழகத்தினூடு பயணஞ்செய்ய நேர்ந்த எமக்கே  இத்தனை மாற்றங்களை அவதானிக்க முடிந்தால் இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அங்கே வாழ்ந்து ஒரு பண்ணையில் கால்நடைமருத்துவராகப் பணியும்செய்ய நேர்ந்தவொரு இலக்கியருக்கு எத்தனை விஷயங்களை அவதானிக்க முடிந்திருக்கும்!

*

கோடையின் புழுக்கம் தாங்கமாட்டாமல் ஷேர்ட்டைக்கழற்றிவிட்டு இயல்பாக இருக்கும் டாக்டரான இவரையே பண்ணையில் பால்கறக்கும்  ராமசாமி என்னும் தொழிலாளி   ஒருமையில் அழைத்து “ஷேர்ட்டைப்போட்டுக்கொண்டு இரு சாரே........ ஷேர்ட் இல்லாமலிருந்தால் உனக்கு அது டீசென்டாக இராது” என்று மதியுரைக்கிறான், பின் இவரும் சிலநாட்களில் அவனுடன் மிதியுந்தில் சினிமா பார்க்க கொட்டாரத்துக்கு ’டபிள்ஸ்’ போகிறார்.

அக்கிராமத்திலும் பண்ணையிலும் ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தும்போதும் அவர் பெயருடன் அவர்களின் சாதியையும் நாயர், கோனார், நாடார், அகமுடையார், முக்குலத்தோர்,  என்று தவறாது குறிப்பிடப்படுவது டாக்டருக்கும் எமக்கும் புதினமாக இருக்கிறது.

அப்பண்ணையில்  கொலைசெய்யப்பட்டுவிட்ட இளம்பெண்ணொருத்தி இரவுகளில் வந்து ஆவியாக இம்மருத்துவருடன் பேசுகின்றாள். இயல்பில் உத்தமியான அப்பெண் ஆவியுருவில்வந்தும் அவரை மிரட்டுவதெல்லாமில்லை. ஜாதிவாதியின் மகள் ஒருத்தி ஜாதியால் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள், அவனைத்தான் திருமணஞ்செய்வேன் என்று தந்தையுடன் வாதாடுகிறாள். ஜாதி அபிமானந்தான் அக்கொலைக்குக்காரணம். கொலையாளியும் அவனுக்கு உதவியவர்களும் கொலைக் குற்றவுணர்வு எதுவுமின்றி மிகவும் நல்ல மனிதர்கள்போலத் திரிகின்றனர். அவர்கள் அனைவரையும் அவர்களால் கொலையுண்ட அப்பெண் கற்பகமே காட்டிக்கொடுக்கிறாள். புதினம் பகுதியாக மாய யதார்த்தம் (மஜிகல் ரியலிஸம்) எனும் வகைமைக்குள் இயங்குகிறதெனலாம்.

இதேபோல கிராமத்தில் நீலமேகம் எனும் நிலச்சுவாந்தரின் மகள் கல்லூரியில் ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரப்பையன் ஒருவனைக் காதலித்து வீட்டுக்குத்தெரியாமல் மகாபலிபுரம் கோவிலருகில் ஒரு கிராமத்தில் தாலிகட்டவும் சம்மதித்துவிடுகிறாள். இதை அறிந்த நீலமேகம் ஆட்களை அனுப்பி அந்தப்பையனை அடித்தேகொன்றுவிட்டு மகள் கமலத்தையும் பிடித்துவந்துவிடுகிறார். இதெல்லாம் நாவலில் இடம்பெரும் துணைச்சம்பவங்கள்.

அப்பண்ணை முன்பொருகாலம் பிராமணர்களாக இருந்து நடுவில் இஸ்லாமியர்களாக மதமாற்றஞ்செய்துகொண்ட நிலப்பிரபுக்கள் வகையிலான குடும்பம் ஒன்றுக்குச்சொந்தமான பண்ணை. மனேஜர் சாதிக் அலி எனும் நேர்மையான ஒரு பொதுமுகாமையாளரின் நிர்வாகத்தின்கீழ் அங்கே விவசாயமும், கால்நடைவளர்ப்பும் நடைபெறுகின்றன.

பண்ணையில் ஒடுக்கப்பட்ட இனத்தைச்சேர்ந்த ஒரு பெண்தான் டாக்டருக்கும் சுவையாக மீன்வகைகளை எல்லாம் சமைத்துத்தருகிறாள். ஜாதிய அபேதவாதியாகிய டாக்டருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

அவரது சாப்பாட்டு இரசனையும், தேர்வும், சுவையும் அலாதியானது   அப்போது சாப்பிட்ட உணவுகளை எல்லாம் நினைவில்வைத்து  இப்போது விபரமாகத்தந்துள்ளார்.

கருப்பையா மேஸ்திரியால் அவருக்கும் அங்கேமுன்னர் பணிசெய்த கால்நடைமருத்துவருக்கு சமைப்பதற்காகவும் பண்ணையில் வேலைசெய்வதற்காகவும் கொண்டுவந்துசேர்க்கப்படும் குணவதியான கற்பகம் எனும் பெண்ணின் உடலம் சிலநாட்களிலேயே பண்ணையின் கிணற்றிலிருந்து நெற்றியிலொரு காயத்துடன் எடுக்கப்படுகிறது. அப்பெண் இரண்டுமாதக் கர்ப்பமாக இருந்ததாகவும் அதற்கு அந்த மருத்துவரே காரணம் என்றும் ஊரில் கதைகட்டப்பட்டு மருத்துவர் வேலையினின்றும் நீக்கப்படுகிறார். அப்படிக் கதைகட்டப்பட அவளின் குடிகாரக்கணவனுக்கு பணங்கொடுக்கப்பட்டு பண்ணையால் சரிக்கட்டப்படுகிறது.

அப்பண்ணையில் உழைப்பதற்காக வறுமைகாரணமாக  15 இலிருந்து 18 வயது வரையிலான சிறுவர்கள் வறிய பெற்றோரால் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள். அவர்களின் கல்வி பாழாவதைப்பற்றி பண்ணை நிர்வாகமுட்பட அவ்வூரில் யாருக்கும் கவலையில்லை.

பண்ணைக்குள் பணியாளர்களை எல்லாம் கட்டிமேய்க்கும் பொறுப்பிலிருக்கும் சமப்பாலுறவாளனாகிய கருப்பையா  மேஸ்திரியால் பகலில் வேலைசெய்துவிட்டுத்தூங்கும் சிறுவர்களுக்குத் துன்பம். அவர்களை நிம்மதியாகத் இரவில் தூங்கவிடாமல் அவர்களின் பிட்டத்தைப்பார்த்துவிடுவார். இத்தனைக்கும் கட்டிக்கொண்ட மனைவியை இரண்டு ஆண்டுகளாகக் கன்னிகழிக்கவே திராணியற்ற மனிதனான கருப்பையா அச்சிறுவர்களின் பிட்டத்தைக்கிழ்ந்துபோகும்படி செய்தார் எனும் விவரிப்பு எனக்குச் கொஞ்சம் நெருடலாக இருந்தது. இன்னும் ’பண்ணைக்குள் புகுந்துவிட்ட மிருகம்’ என உருவகமாக வர்ணிக்கப்படும் முதன்மைப்பாத்திரமான கருப்பையா மேஸ்திரியைப்பற்றிய பாத்திரவிபரணம் பிறன்கூற்றிலான  சிறியசிறிய தரவுகளாக அமையாமல்  ஆசிரியர் கூற்றிலேயே  இன்னும் விபரமாகத்தந்திருக்கலாம்.

.

ஒரு புதினத்தின் பகைப்புலத்தின் மண்வாசனை வெளிப்படுவதில் அவர்களின் மொழிவெளிப்பாட்டுக்குக்கும், தோரணைக்கும் முக்கிய இடமுண்டு. அநேகமான பாத்திரங்கள் சிற்சில சந்தர்ப்பங்களைத்தவிர   இலக்கணச்சுத்தமான தமிழ்பேசுவதும் நகைமுரண்.

ராமசாமி //அவசரமாக வாருங்கள் சார்// எனவும்,

ஆட்டுக்காரப்பொண்ணு // குட்டியின் கால்கள் வெளியில் வந்தும் வராமலுமிருக்குது, தயவுசெய்து உதவவும்// எனவும்,

வீரராகவன் //நான் சீமெந்து மூடைகளை    வண்டியிலிருந்து இறக்கியதால் எனக்குச் சரியான எண்ணிக்கை தெரியும் சார்// எனவும் இலக்கணத்தமிழ் பேசுகிறார்கள்.

கால்நடைகளைப்பற்றியதான பல அறிவியல் தகவல்களை அங்கங்கே விரவிவைக்கிறார் மருத்துவர். பிரசவத்தின்போது கருப்பைவழியில் கழுத்து மடிந்துவிடும் கன்றுஒன்றைக் கஷ்டப்பட்டு ஈன்ற பின்னாலும் அதுதானாக எழுந்துநிற்கமுடியாமலும் பால்குடிக்காமலும்  அவஸ்தை படுகிறது.. இன்னொரு ஆட்டுக்குட்டி ஈனுவதில் கஷ்டமேற்பட அதன் கருப்பைவழியில் விளக்கெண்ணெயைத்தடவி சுகமாக ஈனவைக்கப்படுகிறது..

நீலமேகம் தன் மகளைக்காதலிக்கிறானே சாதியிலிழிந்த வேலழகன் என்று யாரைக்கொலைசெய்தாரோ, அக்காதலனது பெயரையே சுருக்கி வேலன் எனத்தனது கிடாரிக்கு வைக்கிறாள் கமலம். அக்கிடாரிக்கு எப்படியாவது நலந்தட்டிவிடவேண்டுமென நீலமேகம் பலமுறை முயற்சிக்கின்றார். ஆனால் அது நிறைவேறாமற்போகிறது. கடைசியாக அவ் வேலனே நீலமேகத்தின் விதைப்பைகள் கிழிந்துபோகும்படி அவரை முட்டிக் கொல்கிறது.

கறுப்பையா மருத்துவர் படிக்கும் புத்தகங்களில் கொம்யூனிஸப்பிரதி ஒன்றை எடுத்துவந்து பண்ணை மனேஜரிடம் கொடுத்து அவரை ஒரு கொம்யூனிஸ்ட் என்றும் அவரால் பண்ணைக்கே ஆபத்தென்றும் போட்டுக்கொடுத்து அவரைப் பணியியிலிருந்து தூக்குவதற்குப் படாதபாடுபடுகிறார்.

செயற்கையாக மருத்துவரால்ச் சினைப்படுத்தப்பட்ட சிவப்பி எனும் மாடு சினையாகிவிட்டதாக மருத்துவருக்குக் கனவில் வரும் கற்பகம் தெரிவிக்கிறாள். மருத்துவரும் சிவப்பி ஈனும்போது அதன் கன்றுக்கு   அவரே  நீலன் என்றும் பெயர்வைக்கிறார். அதுவளர்ந்து காளையாகிக் கடைசியில் கார்மேகத்தின் குதத்தைக் கொம்புகளால் குத்திக் கிழித்துக்கொன்றுவிடுகிறது. இவ்வாறாகச் சில மாயயதார்த்த  வகையிலான உடநிகழ்வுகளும் பிரதியிலுள்ளன. எங்கும் பச்சையும் மரம், செடிகொடி, பயிர்களும் தண்ணீரும் சூழ்ந்தவொரு இயற்கைச்சூழலில் பண்ணைவாழ்வின் விபரணங்களும்.. தாம் சுரண்டப்படுகிறோம் ஒடுக்கப்படுகின்றோமென்ற அறிவேயில்லாமல் வாழ்வைத்தொடரும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும் நனவும் புனைவுமாகச் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது புதினம். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆசிரியரின் படைப்புக்களில் அதிகமான வாசிப்புச் சுகிர்தத்தை தருகின்றது  இப்புதினம்

*

காலச்சுவடு பதிப்பகம் பக்:150, விலை: 190.00 ₹

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com