புகழ்பெற்ற இத்தாலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஓரியானா ஃபல்லாச்சியின் தீவிரமான பெண்ணியப் படைப்பை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எம்.டி.முத்துக்குமார சாமி. ஓர் பெண் தன் வயிற்றில் வளரும் சிசுவுடன் நடத்தும் உரையாடலாக இந்த நாவல் அமைந்துள்ளது.
வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு ஆன்மா இருக்கிறதா? அது தாயுடன் உரையாட முடியுமா? என்ற அடிப்படைக் கேள்விகளைத் தாண்டி தாயுடன் அது நடத்தும் ஆழமான உரையாடல்கள் ஒரு தாய்மை அடைந்த பெண்ணின் போராட்டத்தைப் பதிவு செய்கின்றன. பிறப்பையும் இறப்பையும் சொற்களில் விளக்க முயற்சி செய்கின்றன. கடைசியில் சிசு வளர்ச்சி அடைவதற்குள் இறந்துவிட, தாய் நோய்த்தொற்றில் பாதிக்கப்படுவதற்குள் மருத்துவர்கள் அதை கருப்பையிலிருந்து அகற்றுகிறார்கள். ’வாழ்க்கைக்கு நீயோ நானோ தேவையில்லை. நீ இறந்துவிட்டாய். நான் இறந்துகொண்டிருக்கிறேன். அது முக்கியமில்லை. ஏனென்றால் வாழ்க்கை இறப்பதில்லை!’ என்ற வரிகளுடன் இப்படைப்பு முடிவடைகிறது. கருவுற்ற அல்லது குழந்தைகளைப் பெற்றெடுத்த அனுபவம் கொண்ட பெண்களால் இப்படைப்பை மேலும் சிறப்பாக அணுகிப் புரிந்துகொள்ள இயலும். உலகின் முக்கியமான ஒரு பெண்ணிய கிளாசிக் நாவலை அழகாக தமிழில் கொண்டுவந்திருக்கிறார் எம்.டி. முத்துக்குமாரசாமி. 1970களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட இந்நாவலின் உணர்வுகள் இன்னும் அவசியமானவையாகவும் கிளர்ந்தெழச் செய்வதாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம், ஓரியானா ஃபல்லாச்சி, தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி, தமிழ்வெளி,1, பாரதிதாசன் சாலை, ஶ்ரீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை 600122. பேச: 9094005600. விலை ரூ. 200
- மதிமலர்