இது ஒருவிதத்தில் புதுமையான முயற்சி. பெண்கள் தாங்கள் கடந்து வந்த பல சிக்கல்களை வெளியே சொல்லத் தயங்குவார்கள். ஆகவே உங்கள் பெயரை வெளிப்படுத்தாமலே அவற்றை எழுதிக் கொடுங்கள் என்று முகநூலில் இந்நூல் தொகுப்பாசிரியர் நிவேதிதா அறிவித்து, வந்து சேர்ந்த கட்டுரைகளை நூலாக்கி இருக்கிறார். 42 பெண்களும் 2 குயர் தோழர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். பெரும்பாலும் தங்கள் குழந்தைப் பருவத்தில் கடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளைத் தாங்கிய கட்டுரைகள். சாதிய ஒடுக்குமுறை, உறவுச் சிக்கல்கள் மறுமணம், பாலியல் வறட்சி எனப் பல விஷயங்களைப் பேசும் பதிவுகள். நூலில் பல இடங்களில் சாதியமும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. வக்கிரங்களை எதிர்கொண்ட அனுபவப் பதிவுகள் பதறவைப்பவையாக இருக்கின்றன. கணவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காத பெண்கள், மாமியார், மாமனார், நெருங்கிய உறவுகளின் தொல்லைகள், டிவோர்ஸ், ஆண்மை இன்மை, சுரண்டல்கள் என்று இத்தொகுப்பு முழுக்க பெண்களின் பார்வையில் குவிந்துகிடக்கின்றன நினைவுகள். கல்வியும் வாய்ப்புகளும் உள்ள சமகாலத்திலேயே இப்படி என்றால் இவை மறுக்கப்பட்ட காலத்தில் பெண்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
பெண்ணுரிமை சார்ந்து முக்கிய நூலாக இதைக் கருதலாம். ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கையில் ஆண் மைய சமூகத்தின் அழுக்குகள் பற்றிய புரிதல் மேலிடும்.
பெயரற்றவர்களின் குரல், தொகுப்பும் பதிப்பும்: நிவேதிதா லூயிஸ் வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை-83 பேச:9600398660 விலை ரூ.500