இரா.பிரபாகர் வேதமாணிக்கம்
இரா.பிரபாகர் வேதமாணிக்கம்

பிரபா அய்யா… அமெரிக்கன் கல்லூரியில் ஓர் ஆலமரம்!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெறுகிறார். அவரது பழைய மாணவர்கள் சேர்ந்து அவருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்துகிறார்கள்… அதையொட்டி ஒரு ஒரு நூலும் வெளியிடுகிறார்கள். என்ன தங்கள் பேராசிரியரைப் புகழ்ந்து கவிதை எழுதி இருப்பார்கள் என்று நம் பார்வைக்கு வந்த புத்தகத்தைப் புரட்டினால் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு அந்தப் பேராசிரியரின் ஆளுமைத் திறனும் வழிகாட்டல் திறனும் வெளிப்படும் அளவுக்கான அனுபவக் கட்டுரைகள்.

அந்த பேராசிரியரின் பெயர் இரா.பிரபாகர் வேதமாணிக்கம். மாணவர்கள் அழைப்பது அய்யா.. பிரபா அய்யா.

 முதல் கட்டுரையே பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தலைவருமான  ஜெரால்டு எழுதியது.  எதுக்காக தமிழ்ப் படிக்க வந்திருக்கீங்க என வகுப்பின் முதல் நாளே அய்யா கேட்க, சினிமா டைரக்டர் ஆகணும் சார் என பதில் உரைத்ததில் இருந்து, அய்யா பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டியாக சுற்றியது, அவர் வழிகாட்டலில் நவீன இலக்கியமும் உலகத் திரைப்படங்களும் பார்த்தது என அவர் எழுதி இருக்கும் கட்டுரையே அய்யாவைப் பற்றிய சரியான அறிமுகத்தைத் தந்துவிடுகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் பொன் சசிகுமார் எழுதியிருக்கும் கட்டுரை மிக நெகிழ்ச்சி தருவது. சசி மிகுந்த பொருட் கஷ்டத்தில் இருந்த மாணவர். கேரளாவுக்கு கற்றல் சுற்றுலாவுக்கு எல்லோரும் சென்றபோது இவரால் பணக்கஷ்டத்தால் போக முடியவில்லை. காண்டீனில் அமர்ந்திருக்கும்போது பிரபா அய்யா அங்கே வருகிறார். என்னய்யா.. நீங்க பொறீங்கள்ல என்று கேட்கிறார். இவர் விழுங்கியவாறே பணக் கஷ்டத்தைச் சொல்ல, உடனே கையில் இருந்து  ரூபாயைக் கொடுத்துப் போய்க் கட்டுமாறு சொல்கிறார். இன்று எனக்கு சென்னையில் ஒரு வீடு, மதுரையில் ஒரு வீடு , சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. ஆனாலும் அய்யா கொடுத்த அந்த ரூபாயை நான் திருப்பி அளிக்கவே இல்லை, அவர் என்னைப் பெற்றெடுக்காத பெற்றோர் என்கிறார்.

படிப்பு முடிந்து வெளியே போனாலும் அய்யாவுடனான நட்பை இவர்கள் தொடர்கின்றனர். ஒருவர் அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியர் நேர்கானலுக்கு விண்ணப்பிக்கிறார். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை கடைசி நாள் வரை வரவில்லை. ஏன் வரவில்லை எனக் கேட்க கல்லூரிக்குப் போகிறார். ஏதோ பதில் சொல்கிறரகள். சரி விடுவோம் எனத் திரும்புகையில் அய்யாவைப் பார்க்கிறார். அய்யா எல்லா விஷயங்களையும் பேசிவ்விட்டுருந்து அழைப்பாணை வந்ததா என்கிறார். இல்லை என இவர் கேஷுவலாகச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார். இரவுபத்து மணிக்கு தந்தி வருகிறது. என்னவோ ஏதோ என குடும்பமே அதிர, அது நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை. மறுநாள்தான் தெரிகிறது இவர் திரும்பிய பிறகு அன்று மாலை அய்யாவின் கடும் போராட்டத்தால் இவருக்கு தந்தி மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது.

இயக்குநர் ராம் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் படித்தவர்.  முதலாண்டின் நடுவிலேயே அவர் ரயில் ஏறி ஊர் சுற்றப் போய்விட்டு திரும்பி இருக்கிறார். தேர்வு எழுதவே இல்லை. அவருக்கு நம்மால் டிகிரி வாங்க முடியாது போலிருக்கிறதே என்று தோன்ற, படிப்பை விட்டுவிடுவோம் என நினைக்கிறார். இதை போகிறபோக்கில் அய்யாவிடம் சொல்ல, அவர், ‘ நீங்க டிகிரி வாங்கணும் நினைக்காதீங்க.. அப்படியே இருங்க.. காலேஜ்ல படிக்கிற எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க’ என்று சொல்லி இருக்கிறார். ராம் மூன்றாம் ஆண்டு முடிக்கையில் எல்லாம் அரியர்ஸையும் கிளியர் செய்துவிட்டார்! அய்யாவுடனான தன் நட்பை விளக்குகையில் படிப்பு முடித்து சென்னைக்கு வந்து மேற்படிப்பு படித்தாலும் எப்போது நேரம் கிடைத்தாலும்  மதுரைக்குக் கிளம்பிப்போய் அய்யாவைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் பழக்கம் இருந்தது. அதிலிருந்து விடுபடுவதே பெரும் சிரமமாக இருந்தது என எழுதுகிறார்.

பிரபா அய்யா… தமிழ்துறைப் பேராசிரியராக இருந்தாலும் சங்க இலக்கியங்களை நடத்துவதை விட நவீன இலக்கியங்களைப் பற்றித்தான் மாணவர்களிடம் பேசி இருக்கிறார். எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் அவர் வகுப்பில் பேசிய கி.ரா. ஜெயக்காந்தன், கோணங்கி கதைகளைப் பற்றியும் அவர் பேசிய திரைப்படங்களைப் பற்றியும் எழுதி வைத்துள்ளனர். இது என்னடா சினிமா பத்தி பேசுறாரே என முதல் வகுப்பிலேயே மிரண்டு போய்விட்டதாக ஒருவர் எழுதி இருக்கிறார்.

‘அய்யாவில் மேசையில் இருக்கும் புத்தகங்கள் பெயர்களை எல்லாம் குறித்துக்கொண்டு அவற்றை மதுரை முழுக்க தேடி அலைந்து வாங்கிப் படிப்போம்’ என்கிறார் ஆவணப்பட இயக்குநரான திவ்யபாரதி தன் கட்டுரையில். இவரால் அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. சட்டக்கல்லுரிக்குச் சென்றுவிடுகிறார். இருப்பினும் அமெரிக்கன் கல்லூரியையையும் அய்யாவையும் மறப்பது இல்லை. தன் கக்கூஸ் ஆவணப்படத்துக்கு ஒரு பாடலுக்கு இசை அமைத்துத்தருமாறு பிரபா அய்யாவைத்தான் அவர் நாடுகிறார்.

என்னய்யா தமிழாசிரியர் என்றுதானே சொன்னீங்க.. இதில் என்ன இசை கிசை என்று? ஆமாம் பிரபா அய்யாவுக்கு இசையிலும் பெரு நாட்டமும் அறிவும் பயிற்சியும் உண்டு. தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசை அமைத்தவர் திரைப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

அய்யா ஓவியரும் கூட. அவர் வரைகின்ற ஓவியங்களையும் அவருக்கே உரிய எழுத்துருக்களைப் பற்றியும் நிறைய நினைவுக்குறிப்புகளை இதில் பார்க்க முடிகிறது.

அமெரிக்கன் கல்லூரியை மதுரையில் நாடகங்களுக்கான மையமாகவும் அவர் மாற்றி இருந்திருக்கிறார். தேசிய நாடகப்பள்ளியில் படிக்கப்போன ஒரு மாணவர் அய்யா தன்னை எப்படி மாற்றினார் என்று எழுதி இருக்கிறார். கொடைக்கானலில் அவர் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த நாடகப் பயிலரங்கு பற்றி திரும்பத் திரும்ப எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்கன் கல்லூரிக்கு வெளியே கலைடாஸ்கோப் என அமைப்புத் தொடங்கி கலை யார்வத்தை பெருக்கியதையும் உலகப்படகளை அய்யா மூலம்தான் பார்த்தேன் என்று இந்நூலில் சொல்லிக்கொண்டே போகிறார்கள்.

பழைய மாணவர்கள் இல்லாமல் சில நெருங்கிய நண்பர்களிடமும் கட்டுரை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். திரைப்பட  இயக்குநர் முத்துராமலிங்கம், இலங்கை எழுத்தாளர் பத்தினாதன் உட்பட்ட சிலர்.

பத்தினாதன் எழுதி இருப்பதைப் படித்தால் பல இடங்களில் கண்கள் ஈரமாகிவிடும். ஒரு தீபாவளிக்கு காலையிலேயே இட்லி கறிக்குழம்புடனும் மதியம் மட்டன் பிரியாணியுடனும் வந்து நிற்கிறார் பிரபாகர். ஏன் யா என்றால் தீபாவளிக்கு ஓட்டல் எதுவும் இருக்காதுல்ல.. என்கிறார்.  அகதி வாழ்க்கை முடிந்து இலங்கைக்குச் செல்ல தயாரானபோது நண்பர்களை அழைத்து நடத்திக் கொடுத்த பிரியாவிடை நிகழ்ச்சி.. பத்திநாதன் சொல்லாமல் விட்டது அதிகம் இருக்கலாம்.

அய்யாவின் துணைவியார் மல்லிகா அவர்களின் விருந்தோம்பல் பற்றி ஏராளமான குறிப்புகள்.

பிரபா அய்யா தமிழாசியர்களுக்கான தோற்றம் கொண்டவர் அல்லர். ஜீன்ஸ் போட்டு  டீ ஷர்ட்டில், அலையும் தலைமுடியுடன் இளமை மாறா தோற்றத்துடன் பைக்கில் வந்து இறங்கும் சித்திரத்தை எல்லா கட்டுரைகளும் குறிக்கின்றன.

யாரு சாமி நீங்க.. உங்க கிட்ட தமிழ் படிச்சிருக்கலாமே என்று நூல் முடிகையில் தோன்றுகிறது.

 ஒரு மரம் ஆயிரம் பறவைகள் – ஒரு தமிழ்ப் பேராசிரியரின் காலவெளிக் குறிப்புகள், வெளியீடு: சால்ட்

logo
Andhimazhai
www.andhimazhai.com