சங்க இலக்கியப் பயணம்

சங்க இலக்கியப் பயணம்
Published on

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சங்கப்பாடல்களை ஆய்வு நோக்கில் மறுவாசிப்பு செய்திடும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. கவிஞர் சக்திஜோதியின் இந்நூல் சங்க இலக்கியப் பாடல்களை மரபு வழியில் நலம் பாராட்டுவதில் இருந்து விலகி அறிவியல்பூர்வமாக ஆராய்ந்துள்ளது.

சங்ககால சமுதாயத்தின் பெண்ணின் இடம் என்னவாக இருந்தது என்பதைப் பாடல் வரிகளைக் கொண்டு விளக்கிச் சொல்கிறார். வேட்டைச் சமூகம், வேளாண்மைச் சமூகம், மேய்ச்சல் சமூகம் எனப் விளங்கிய சங்க கால சமூகத்தில் காலந்தோறும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட மாறுதல்களும் இந்நூலில் இடம் பெறுகின்றன. சங்கப் பாடல்களில் அணங்கு, சூரரமகளிர், பேய் மகளிர், கட்டுவிச்சி, விறலியர், பாடினியர் போன்ற மகளிரைப் பற்றிய விளக்கங்களும் குடும்பம் அரசு ஆகியவற்றில் இவர்களின் பங்களிப்பைப் பற்றியும் கூறி உள்ளார்.

ஆதிச்சமூகத்தில் நிலவிய பெண் தலைமை எப்படி ஆண் தலைமைக்கு மாற்றம் கொண்டது என்பதையும் இந்த கருத்தாக்கம் எப்படி மொழியின் துணைகொண்டு உருவாக்கப்பட்டது என்பதற்கு தொல்காப்பியம் முதலான பாடல்களை சான்று காட்டி இந்நூலில் சொல்லப்படுகிறது. ‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ என்று பொன்முடியாரின் வரிகளில் கடமைகள் உறுதிப்படுத்தப் படுவதைக் காணலாம். ஆண் சமூகம் சார்ந்த புற வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்பட பெண் அவனைப் பெற்று வளர்க்கும் குடும்ப அமைப்பின் மையமாகிறாள். ஆண் பரந்துபட்ட சமூக வெளியில் ஆதிக்கம் பெறுகிறான். அந்த கடமைச் சூழல் இன்று வரை தொடர்கிறது. இந்நூலை வாசிப்பது என்பது ஆசிரியருடன் இணைந்து நாமும் சங்க இலக்கியப் பாடல்கள் வழியாகப் பயணம் செய்வதே ஆகும்.

 சங்க இலக்கியம்: உடல் மனம் மொழி- சக்தி ஜோதி, வெளியீடு: என் சி பி எச், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -50, பேச: 044-26251968. விலை ரூ: 550

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com