
தமிழில் புகழ் வெளிச்சம் படாத இடத்தில் இருந்துகொண்டு தமிழ்த் தொண்டாற்றியுள்ள தமிழ்ச் சான்றோர்களை ஆவணப்படுத்தி வருகிறார் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன். இப்படிப்பட்ட தமிழறிஞர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து 'தகைசால் தமிழ்த் தொண்டர்கள்' என்கிற பெயரில் நூல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்..
இந்த நூலில் 42 தமிழ் அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளன. பெருமழைப் புலவர் பொ.வே சோமசுந்தரனார் பற்றி இவர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் புலவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு 10 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையை அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கியது இவரது ஆவணப் பணிகளின் நல்விளைவு என்று கூறலாம்.
இப்படி தொல்காப்பிய அறிஞர் கு. சுந்தரமூர்த்தி, தமிழ் நூற்கடல் தி.வே.கோபாலையர், திருக்குறள் பெருமாள், தொல்லியல் அறிஞர் நடன . காசிநாதன், தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா சண்முகம்,பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் செம்மங்குடி துரையரசன், பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன் என்று இதில் இடம்பெற்றுள்ள 42 அறிஞர்களில் எவரும் சளைத்தவர் அல்ல என்கிற ரீதியில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஆற்றிய தமிழ்த் தொண்டு ஒவ்வொரு தரத்திலானது.
அவர்கள் தமிழ் கற்கப் போராடிய போராட்டமும் அவர்கள் செய்த பணிகளும் படிக்கப் படிக்க சுவாரசியமும் நினைக்க நினைக்க வியப்பும் கூட்டுபவை.
வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம், புதுச்சேரி 605 003. பேச: : 94420 29053. விலை ரூ 350.
- ஆதித்யா