தகவல்களின் புதிய முகம்

தகவல்களின் புதிய முகம்
Published on

மனித குலம் கற்காலத்தில் இருந்து தற்கால செயற்கை நுண்ணறிவுக் காலம் வரை எப்படி தகவல்களால் பிணைக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளது என்பதை ஆராயும் புத்தகம் யுவால் நோவா ஹராரியின் அண்மையில் வெளியான நெக்சஸ்.

இந்நூலை நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். இது இவரது நூறாவது மொழிபெயர்ப்பு நூல் என்பது குறிப்பிடவேண்டிய தகவல். மனிதன் கண்டுபிடித்த முதல் தகவல் தொழில்நுட்பம் என்பது கதை என்று இந்நூலை ஆரம்பிக்கிறார் ஹராரி. என்ன கதைவிடுகிறாரோ என்று யோசித்தால் வரலாற்றுரீதியில் தகவல்களைச் சொல்லி அதை நிறுவவும் செய்கிறார். ஒரு கதையை அறிந்திருந்தால்போதும். பலகோடி மனிதர்கள் மனிதர்கள் ஒன்றிணைந்துவிட முடியும். ஒரு தலைவனின் பின்னால் தனிப்பட்ட முறையில் அவர்கள் இணைவது இல்லை. அந்த தலைவனின் கதையுடன் தான் இணைந்துள்ளனர். சோவியத் ரஷ்யாவின் மாபெரும் வழிபாட்டுக்குரிய ஆளுமையாக இருந்த ஸ்டாலின், தன் மகனைக் கண்டிக்கும்போது, அவன் நானும் ஸ்டாலின் தானே என்று கேட்கிறான். ‘நீயும் ஸ்டாலின் அல்ல; நானும் ஸ்டாலின் அல்ல. செய்தித்தாளிலும் உருவப்படங்களிலும் இடம்பெற்றிருப்பவர்தான் ஸ்டாலின்!’ என்று ஸ்டாலினே சொல்கிறார். ஸ்டாலின் என்பது மனிதர் அல்ல. அவரைப் பற்றி உருவான கதை.

அரசியல்வாதிகள் பலர் ஏன் கதைவிடுகிறார்கள் என்று சிந்தித்தால் புரிந்துவிடும்.

கதைகளை அடுத்து தகவல் தொழில்நுட்பத்தில் வருவது ஆவணங்கள். புனித நூல்களின் உருவாக்கம், சர்வாதிகாரம், ஜனநாயகம் போன்ற அரசியல் கோட்பாடுகள். இவை பற்றி விரிவாகப் பேசும் நூல், அடுத்ததாக கணினிகள் உருவாக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் தற்கால தகவல் புரட்சி பற்றி பேசுகிறது. கணினி ஒன்று போலிச்செய்தியை உற்பத்தி செய்து ஒரு சமூக வலைத் தளத்தில் பதிவிட முடியும். பிற கணினிகள் இதற்கு எதிர்வினையாற்றக்கூடும். சில காலம் முன்வரை மனிதன் இந்த விசயங்களில் தேவைப்பட்டான். இப்போது அவன் தேவை இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. அவன் கண்காணித்து செயல்படுவதற்குள் கணினிகள் முந்திக்கொண்டுவிடக் கூடும். எப்போதும் உறங்காமல் அவை செயலாற்றிக்கொண்டே இருக்கின்றன.

ஹராரி இந்நூலில் செய்வது ஓர் எச்சரிக்கை. தகவல் பற்றிய வெகுளித்தனமான நம்முடைய கண்ணோட்டத்தைக் கைவிட்டாகவேண்டும். நம் மனித இனத்தை அழிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவை வரவழைத்திருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது. இக்காலகட்டத்துக்கு ஏற்றதொரு எசசரிக்கை மணி.

நெக்சஸ், யுவால் நோவா ஹராரி, மொழிபெயர்ப்பு: நாகலட்சுமி சண்முகம், வெளியீடு: மஞ்சுள் பப்ப்ளிஷர்ஸ், போபால். விலை ரூ 799

வாழ்வியலும் வரலாறும்

மு.கருணாநிதியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிறகு அவரது படைப்புகளை பலரும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சிந்தனையும் செயலும், காலப்பேழையும் கவிதைச் சாவியும் ஆகிய இரு படைப்புகளையும் உள்ளடக்கி ஒரே நூலாக வெளியிட்டுள்ளனர் நவீன மித்ரா பதிப்பகத்தினர். நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக தூரம் தாண்டமுடியும் என்கிற பழமொழியைத் தனக்கு மிகவும் பிடித்தமானது என்கிற கலைஞர் உழைப்பின் முக்கியத்துவத்தை இதிலுள்ள கட்டுரையொன்றில் வலியுறுத்துகிறார். நாராயண நமஹா என்று சொல்லி தியானம் செய்யுங்கள் என யோக ஆசிரியர் சொல்ல, ஞாயிறு போற்றுதும் என்ற சிலப்பதிகார வரியைச் சொல்லி தான் தியானம் செய்வதாகவும் கூறும் கட்டுரையும் முக்கியமான ஒன்று. இவ்வாறு வாழ்வியலும் இலக்கியமும் பேசும் கட்டுரைகள் ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் கற்காலத்தில் இருந்து தமிழினத்தின் வரலாற்றை சோழ பாண்டியர் வரலாற்றை கவிதை நடையில் சொல்கிற காலப்பேழையும் கவிதைச் சாவியும் என்கிற தொகுப்பும் இந்நூலில் உள்ளது. அவரது வாசிப்புத் திறனுக்கும் எழுத்துத் திறனுக்கும் இப்படைப்புகள் சிறந்த சான்றுகள். இவ்விரண்டு நூல்களுமே இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் எழுதப்பட்ட கலைஞரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் எனலாம். அழகான கட்டமைப்பில் வெளியாகி இருக்கும் நூல் இது.

சிந்தனையும் செயலும், காலப்பேழையும் கவிதைச் சாவியும், கலைஞர் மு கருணாநிதி, நவீன மித்ரா பப்ளிகேஷன், 39/90, காளியம்மன் கோவில் தெரு, நடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை 92.

பேச: 8015827644. விலை ரூ.500

சிரிங்க.. சிந்தியுங்க!

தலைப்பிலேயே நக்கலும் நய்யாண்டியுமாக எழுத்தாளர் பாமரனின் நூல் வெளியாகி இருக்கிறது. அவ்வப்போது கடந்த பதினைந்து ஆண்டுகளில் அந்திமழை உட்பட்ட இதழ்களில் எழுதிய கட்டுரைகள்தான் நூல் வடிவம் கண்டுள்ளன.

தாய்மொழி வழிக் கல்விக்காக வாதாடும் கட்டுரை, திராவிட இயக்கம் வேறு கட்சிவேறு என அடித்துப் பேசும்கட்டுரை, திராவிட இயக்கத் தலைவர்களுக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் போன்ற தீவிரமான கொள்கை சார்ந்து பேசும் முக்கியமான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அதைவிட்டால் நக்கலுக்குக் குறைவே இல்லாத கட்டுரைகள் பலவும், படித்தவுடன் நெகிழ்ந்துபோய் கண்ணீர் விட வைக்கும் மேலும் சில கட்டுரைகளுமாக பாமரன் என்கிற எழுத்தாளுமையை முழுவதுமாக முன்வைக்கிற நூலாக இது இருக்கிறது. கவுண்டமணியில் தொடங்கி எம்.எஸ்.எஸ். பாண்டியன் வரைக்குமான ஆளுமைகளைப் பற்றி எழுதப்பட்ட நெஞ்சார்ந்த கட்டுரைகளை இதில் வாசிக்கலாம்.

ஒரு மாபெரும் மடையனின் மலேசியப் பயணம் என்ற கட்டுரையோ பயங்கர நக்கலாகத் தொடங்கி, மிகமிக நெகிழ்வாக முடிவடையும். பாமரனை இனி பேருந்திலேயே ஏற்றக்கூடாது என பேருந்து உரிமையாளர் சங்கமே முடிவெடுக்கத் தூண்டும் கடைசிக் கட்டுரையைப் படித்தால் சிரித்து மாளாது.

கொடை புடிச்சு நைட்டுல… பறக்கப்போறேன் ஹைட்டுல… பாமரன், வெளியீடு: நாடற்றோர் பதிப்பகம், 16, வேங்கடசாமி சாலை கிழக்கு, இரத்தினசபாபதி புரம், கோவை-641002 பேச: 9443536779 விலை: ரூ.180

மனதுக்கு நெருக்கமான கவிதைகள்

நான் கேட்பது உணவல்ல

எளிதில் அடங்கும் பசி

-இந்த வரிகளில் இருக்கும் உக்கிரமான வேதனை பசியோடு அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலையைக் கடந்துவந்தவர்களுக்கு மிக எளிதாகக் கடத்தப்படும். ஏதோவொரு விதத்தில் பசியைப் பார்த்தவர்கள்தான் மிகுதி. ஆனாலும் எல்லோராலும் இப்படியொரு வரியை எழுதிவிட முடிவதில்லை. அது கவிஞனுக்கே வாய்க்கிறது.

நஞ்சைக்கூட தின்று உயிர் பிழைப்பேன்

நஞ்சை சமைக்க

எண்ணவே மாட்டேன்

கொள்கை என்ற தலைப்பிலான இக்கவிதை தான் வாழவிரும்பும் வழியினைப் பிரகடனம் செய்கிறது. இயக்குநர் சீனுராமசாமியின் இக்கவிதைத் தொகுப்பு ஈரமான பல அனுபவங்களை எளிமையான வரிகளில் சொல்லிச் செல்வதாக உள்ளது. பெரும்பாலும் நகரவாழ்வு தரும் நெருக்கடிகளையும் பழைய நினைவுகளையும் பேசும் இக்கவிதைகள் நம்மையும் நெருக்கமாக அழைத்துச் செல்கின்றன. குறிப்பிட்ட வகையிலான படங்களை மட்டுமே எடுப்பேன் என சீனுராமசாமி பிடிவாதமாக இருப்பதன் பின்னால் இருப்பது அவருடைய கவி மனதுதான் என்பதை விளங்கிக் கொள்ள முடியுகிறது.

மாசி வீதியின் கல்சந்துகள், சீனு ராமசாமி, வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண்9, பிளாட் எண் 1080 ஏ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கேகே நகர் மேற்கு, சென்னை 78 பேச: 99404 46650. விலை ரூ.330

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com