தெற்கின் புத்தர்

தெற்கின் புத்தர்
Published on

கேரளத்தில் ஈழவ சமுகத்தில் பிறந்தவரான நாராயணகுரு பற்றிய விரிவான புத்தகங்கள் எதுவும் தமிழில் இல்லை என்கிற குறையைப் போக்கும்விதமாக உருவாகி இருக்கிறது தெற்கின் புத்தர் என்கிற இந்த நூல்.

இளம் வயதிலேயே துறவில் பற்றுகொண்டு பல ஞானிகளைச் சந்தித்து, மலைக்குகையில் தவம் செய்து நாராயண குரு ஆகப் புடம் போட்டு ஞானம் பெற்றவர் இவர். அருவிப்புரத்தில் சிவனை பிரதிருஷ்டை செய்து கோவில் கட்டினார்.

சடங்குகளுக்கு எதிரான இக்கோவிலைக் கட்டியதை எதிர்த்து நம்பூதிரி ஒருவர் இவரிடம் வந்து,”ஈழவனான நீ எப்படி சிவனைப் பிரதிர்ஷ்டை செய்யலாம்?’’ எனக் கேட்கிறார். நாராயணகுரு,” அய்யா, நான் பிரதிர்ஷ்டை செய்தது ஈழவ சிவனைத் தானே தவிர, நம்பூதிரி சிவனை அல்ல” என்று பதிலளித்தார். ‘பிறப்பினால் அனைவரும் ஒன்றே- ஏற்றத்தாழ்வு கிடையாது’ என்பதைக் கடைப்பிடித்தார். அவர் உருவாக்கிய கோவில், பள்ளிகளின் அலுவல்களைச் சிறப்பாக வழி நடத்த நம்பிக்கையான சீடர்கள் தேவைப்பட்டபோது கிடைத்தவர்தான், “டாக்டர் பல்பு’ என அழைக்கப்பட்ட பத்மநாபன். நாராயணகுரு உருவாக்கிய ‘நாராயண தர்ம பரிபாலன யோகம்’ அமைப்பு கேரளத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி கற்று அரசுப்பணிகளில் சேர்ந்து உயர் நிலையை அடைய முக்கியப் பங்கு வகித்தது. இதன் செயல்பாட்டில் டாக்டர் பல்புக்கு முக்கியப் பங்கு உண்டு. கேரளத்தின் முக்கிய கவிஞரான குமாரன் ஆசானை நாராயணகுரு வழிகாட்டுதலில் படிக்க வைத்து உருவாக்கியதும் இவரே.

ஈழவப் பட்டதாரிகளுக்கு அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு கேட்டு 1896-லேயே திருவிதாங்கூர் மன்னரிடம் மனுகொடுத்து செயல்பாடுகளைத் தொடங்கியவர். பெரியாருடன் நாராயணகுருவை ஒப்பிடும் நூலாசிரியர் பெரியார் கடவுளை நம்புகிறவர் முட்டாள் என்றார். நாராயணகுரு அதை குறிப்பால் மட்டும் உணர்த்தினார் என்கிறார். கேரளத்தின் கடந்த நூற்றாண்டின் சமூக வரலாற்று ஆவணமாக இந்நூல் 724 பக்கங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தெற்கின் புத்தர் ஆசான் நாராயணகுரு, தமிழன் இளங்கோ, வெளியீடு: நன்செய்- கருப்பு வேர்கள். விலை: ரூ.600, பேச: 9566331195

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com