லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையில் புகழ்பெற்ற மருத்துவராக திகழ்பவர் டாக்டர் சி.பழனிவேலு. கோவையிலும் சென்னையிலும் 'ஜெம் மருத்துவமனை ' நடத்தி வரும் இவரது வாழ்க்கைக் கதை மிகவும் உந்துதல் தரக்கூடியது. கல்வியின் மூலமாக மட்டுமே தான் உயர்ந்த வரலாற்றை உணர்ச்சி பொங்க நன்றியுணர்வு ததும்ப நூலாக எழுதி உள்ளார். அதன் தலைப்பு: 'எதுவும் இன்றி'
அப்துல் கலாமின் அன்புக் கட்டளை என்ற அத்தியாயத்தில் தொடங்கி ஏழை எளிய மக்களின் நலனே எனது சிகிச்சையின் இலக்கு என்ற அத்தியாயத்துடன் முடித்திருக்கிறார். மலேசியாவில் கூலித் தொழிலாளிகளாகத் தாய் தந்தை இருந்த போது அங்கேயே கல்வி பயின்றவர், பின் தமிழகத்துக்கு வருகிறார். இங்கே நிர்வாகச் சிக்கல் காரணமாக பள்ளிக்கல்வியைத் தொடர முடியாத நிலை. இவருக்காக பொதுநலத் தியாகித் தொண்டர் ஒருவர் அலைகிறார். கடைசி முயற்சியாக கல்வித்துறை உயர் அலுவலரின் காலில் அந்த தியாகி விழுந்து பழனிவேலு படிக்க அனுமதி வாங்கித் தருகிறார். இந்த நிகழ்வைப் படித்த போது உணர்ச்சிப் பெருக்கால் என் கண்களில் நீர் வழிந்தது. தனக்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறி இந்நூலை எழுதி உள்ளார்.
லேப்ராஸ்கோப்பி முறை ஏற்படுத்திய புரட்சி, அதில் பழனிவேலு புகுத்திய புதிய நுணுக்கங்கள் என பலவற்றையும் படிக்கும் போது நாம் பெறும் சிகிச்சைக்குப் பின் எத்தனை பேரின் உழைப்பும் அறிவும் விடா முயற்சியும் உள்ளன என்பதும் புரிகிறது.
முன்னேற்றத்திற்கும் பொது நன்மைக்கும் எந்தவொரு தடையும் பெரிதல்ல என்பதை உணர்த்தும் நூல் இது. ஜெம் ஃபவுண்டேஷன் சார்பாக விலை குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்ட இந்நூலின் ஆங்கில மொழி-பெயர்ப்பு ‘Guts’ அமேசானில் கிடைக்கிறது.
எதுவும் இன்றி, டாக்டர் சி பழனிவேலு, வெளியீடு: ஜெம் அறக்கட்டளை,45 ஏ, பங்கஜா மில் ரோடு, ராமநாதபுரம், கோவை 641045