சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதக்கூடிய பத்திரிகையாளரான ப.திருமலை எழுதியிருக்கும் 32 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், குடும்பம், உணவு, சமூகம், காலநிலை மாற்றம் ஆகிய தலைப்பில் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய அரிய தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. உலகில் ஐந்து வயது ஆவதற்குள் பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளே அதிகம் இறக்கிறார்கள் என்பது யுனிசெப் கணக்கீடு. ஆனால் இந்தியாவில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் இறப்பு வீதம் 11 சதவீதம் அதிகம் என்கிற அதிர்ச்சியான தகவலுடன் முதல் கட்டுரையே ஆரம்பிக்கிறது. இக்கட்டுரையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வாதிடுகிறவர், அடுத்த கட்டுரையில் உலகில் குழந்தைகளுக்கான நரகம் ஒன்று உண்டென்றால் அது இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகித்தவிக்கும் காசா பகுதிதான் என உலக அரசியலின் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதை தரவுகளுடன் சுட்டிக்காட்டி அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். காலநிலை மாற்றக் கட்டுரைகளில் உலகில் 2050க்குள் அதிக மழைச் சேதங்களை எதிர்கொள்ள உள்ள நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. சென்னைப் பெருவெள்ளத்தின் காரணங்களை ஆராயும் அவர் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார். பொதுவான பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிற இம்மாதிரி எழுத்துகள் சமூகத்துக்கு அவசியம் தேவைப்படுகின்ற எழுத்துகள்.
எல்லோரும் நலமே, ப. திருமலை, வெளியீடு: மண் மக்கள் மனிதம் வெளியீடு, திருப்பதி நிலையம், 106 சி, வேளார் தெரு, ஆரப்பாளையம், மதுரை- 625016, பேச: 9865628989 விலை: ரூ.200