ஆளுமை தரிசனம்!

ஆளுமை தரிசனம்!

கலைஞரிடம் நேர்காணல்கள் என்பது பத்திரிகை-யாளர்-களுக்கு எப்போதும் சுவாரசியமாகவே இருந்திருக்கிறது. காரணம் எந்தக் கேள்விக்கும் சலிக்காமல் பதிலளிப்பதில் சிறந்தவராகவே அவர் இருந்துவந்திருக்கிறார். பத்திரிகையாளர் மணாவுக்கும் சுவாரசியமான பதில்களையே அவர் அளித்துள்ளார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னதன் பின்னர் திமுகவின் நாத்திகம் என்பது புதைந்துவிட்டதா என்று மணா கேட்கிறார். இதற்கு  இல்லை ஆமாம் என்றெல்லாம் பதில் சொல்லாமல் விவரமாக ஒரு பதிலைச்

சொல்கிறார் கலைஞர்: ‘ஒரு கல்லில் சிலை செய்தால் அந்தக் கல் புதைந்துபோய்விட்டதாகவோ அல்லது உடைந்துவிட்டதாகவோ சொல்ல முடியுமா?'

கலைஞரின் இந்த பதிலில் இருந்து  இந்த ஆள் என்ன சொல்லவருகிறார் என

யோசித்துப் புரிந்துகொள்ளவே நேரம் வேண்டும். மணா மீண்டும் ஆதாரத்தை அசைக்கும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று

சொன்னதன் மூலம் தமிழ்நாட்டின் பல் தெய்வங்களை வழிபடும் பல்முனைக் கலா

சாரத்தை அழிக்க முயற்சியா எனக் கேட்கிறார்.

கலைஞரின் பதில்: ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள், பல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்  உண்டாமெனல் கேளீரோ என்று  பாரதியே பாடியிருக்கிறார்.

எப்படிக்கேட்டாலும் சிக்ஸர் அடிக்கும் அரசியல் தலைவராக இருந்த கலைஞரைப் பற்றி ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் அவரைப் பற்றி தான் எழுதிய கட்டுரைகள் குறிப்புகள் நேர்காணல்களைத் தொகுத்து அவற்றுடன் வேறு சில முக்கியமான பார்வைகளை முன்வைக்கும் கட்டுரைகளையும் சேர்த்து நூலாக்கி அளித்திருக்கிறார் மணா.

சொந்த ஊரான திருக்குவளை எனப்படும் திருக்கோளிலியைப் பற்றி தன் நினைவுகளை கலைஞர் சுருக்கமாக முன்வைக்கும் கட்டுரை மிகச்சிறப்பானது. தன் ஊரின் பல மனிதர்களை போகிறபோக்கில் நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே செல்லும் கலைஞர் ஓரிடத்தில் இரு மூதாட்டிகளைப் பற்றிச் சொல்கிறார்: பூனை போலக் கூனிக்குறுகிச் சாகும் வரையில் திருக்குவளையில் இரண்டு ஔவையார்களாக விளங்கியவர்கள் தில்லையம்மா, வைரியாத்தா.

கலைஞரின் வாழ்க்கை பற்றிய பல அரிய தகவல்களை முன்வைக்கிறது நடிகர் சிவகுமார் கலைஞருடன் நிகழ்த்திய நேர்காணல். ஐம்பதாண்டுகாலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் முன்னிலை வகித்த ஆளுமையை பெருமையுடன் அணுகும் நூல் இது. ஆட்சித் தலைமை, கட்சித் தலைமை, நூலாசிரியர் என பன்முகத் திறமையும் கொண்டவராக எப்படி அவர் உருவானார் என்பதை நேரடி அனுபவங்கள், நெருக்கமானவர்களுடனான சந்திப்புகள் மூலமாக ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் விவரிக்கிறது.

கலைஞர் என்னும் மனிதர், மணா, வெளியீடு: பரிதி பதிப்பகம், 56சி/128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம்& 635851 அலைபேசி: 7200693200 விலை: ரூ 500.

மொழியின் வனம்

வானுக்குக் கீழே உள்ள எல்லாமும் கவிஞனுக்குப் பாடுபொருள்தான். அத்தகைய ஒரு சுதந்திரத்துடன் கூர்மையான பார்வையுடன் நறுக்குத் தெறிக்கும் சொற்களைக் கூட்டி இத்தொகுப்பைத் தந்துள்ளார் இயக்குநர் ராசி அழகப்பன்.

அழகான கூண்டுக்கு

ஆசைப்படும் கிளிக்கு

விடுதலை கனவுதான்/

என்ற வரிகளில்தான் இன்றைய உலகம் அடங்கிவிடுகிறது. வேலைகள், பொறுப்புகள் என கூண்டுக்குள் அடைபடுகிறோம்.

கூண்டுகள் இல்லாத வானத்தில் கிளிகள்தான் என்ன செய்யும்? என்று கவலைப்படுகிறார் கவிஞர். சம்பளம் தரும் ஒரு வேலை மட்டும் இல்லாவிட்டால் நாமும்தான் சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்?

இரவைத் துவைத்து

ஈரம் சொட்டாமல்

உலர்த்தவேண்டும்- இது கவிஞரின் வினோத ஆசை. இதுபோன்ற பல சொல்சித்திரங்களை, மொழி விளையாட்டுகளைக் கொண்ட தொகுப்பு.

காலப்புதிர்வனம், ராசி அழகப்பன், ஓவியா பதிப்பகம்,17-13-11, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ், காந்தி நகர் முதன்மை சாலை, வத்தலகுண்டு- 624202.      பேச: 7667557114 விலை: ரூ150

ஓங்கி ஒலிக்கும் பெண்குரல்!

நீண்ட மரபில் இருந்து வரும் தமிழ்ப் பெண் கவிதையின் தொடர்ச்சியாக இருக்கும் சக்திஜோதியின் அடுத்த தொகுப்பு இது. தனிமையின் கிசுகிசுப்புகளும் பெண்மனதின் தேடல்களும் இயற்கையின் பதிவுகளும் நிரம்பியது.

அவளறிவாள்

குவளையளவு

பச்சைத் தேயிலையைக்

கொதிக்க வைக்க

அவ்வளவு ஒன்றும்

அதிகம் தேவைப்படாது

சுள்ளிகள்& என்று முடிகிறது ஒரு கவிதை. இவ்வரிகளுக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கிறது ஒரு வாழ்க்கை. தேடலுடன் மனப்பகிர்தலுக்காக காத்திருக்கும் வாழ்க்கை. தேநீர் என்பது தனித்து அருந்துவதற்கானது அல்ல ஒருபோதும்.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையென விட்டு விடுதலையாதல் என்பதைச் சொல்லலாம். பூக்களால் நிரம்பும் வேம்பும் அதிலிருந்து விழுகின்ற பச்சைக் கிளிக்குஞ்சும் பருவத்தின் வருகையை முன்னறிவிக்கின்றன. வேம்பு பழுக்கத் தொடங்கும்போது, குணமாகி இருக்கும் கிளிக்குஞ்சைப் பறக்கவிடுகிறாள். கிளிதான் பறந்துபோகிறது. அவளால் ஒருபோதும் வீட்டை விட்டு அகலமுடியாது. வெப்பப் பெருமூச்சும் வானில் விரிந்து பறக்க இல்லாத சிறகுகளுமாகத் தவிக்கும் பெண்மையை முன் வைக்கும் இக்கவிதையை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்,

சக்திஜோதி, டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை-78 பேச: 044-48557525 விலை: ரூ. 100

துயூப்ளேயின் மனைவி

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தகாலத்தில் இங்கே கவர்னராக இருந்தவர் துயூப்ளே என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கலாம். அது ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக் காரர்கள் இந்தியாவில் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ள போட்டியிட்ட காலம். பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் போட்டியில் இருந்து ஒதுங்கினர். இந்த போட்டி சமயத்தில் துயூப்ளே மிகத் திறமைசாலியாக செயல்பட்டவர். அவருக்கு மூளையாக இருந்தவர் மதாம் ஷான் என்றும் ஷான் பேகம் என்றும் அழைக்கப்பட்ட அவரது மனைவி. பிரெஞ்சு ஆணுக்கும் இந்தியப் பெண்ணுக்கும் பிறந்தவர். துயூப்ளேவை இரண்டாவது மணம் புரிந்தவர். ஐதராபாத் நிஜாம் தொடங்கி அக்காலத்தில் இருந்த பல அரசியல்புள்ளிகளுடன் நெருக்கமான உறவைப் பேணியவர்.  துயூப்ளே ஆட்சிக்காலத்தை மதாம் ஷான் மூலமாகப் பார்க்கும் நாவல்தான் இது. மராட்டியர் படையெடுப்புகள், ஆற்காட்டு நவாப் உரிமைப்போர்கள், ராபர்ட் கிளைவின் வளர்ச்சி ஆகிய சம்பவங்களின் வழியாகப் பயணிக்கும் இந்நாவல் புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப்படும் சம்பவம் வரை சொல்கிறது. அப்போதைய மதத் தகராறுகள், அடிமை வியாபாரங்கள் போன்றவற்றைக் கோடிட்டுக் காட்டும் இந்நாவல்,  நம் நாட்டில் வியாபாரம் செய்ய வந்த அந்நியர்கள், தங்கள் சொந்த கஜானாவை நிரப்புவதிலேயே எப்படி குறியாக இருந்தார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. ஆனந்த ரங்கம் பிள்ளையின் குறிப்புகளின் அடிப்படையில் வரலாற்றுச் செய்திகளில் உள்ளதை உள்ளபடியே சொல்கிறது இந்நாவல். கடைசியில் பதவியில் இருந்து

நீக்கப்பட்டு, அதிகாரம் எல்லாம் இழந்து நள்ளிரவில் பாரிஸ் அனுப்பி வைக்கப்படுகிறார். மிதமிஞ்சிய ஆட்டம் எல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும் என்பதை உணர்த்துகிறது மு.ராஜேந்திரன் இ.ஆ.ப. கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இப்படைப்பு.

அந்நியர் ஆட்சிக்காலத்  தமிழ்ப்பரப்பு பற்றி இவர் எழுதிவரும் நாவல் படைப்புகளில் மற்றுமொரு சுவாரசியமான வருகை இது.

மதாம், டாக்டர். மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வெளியீடு: அகநி பதிப்பகம், வந்தவாசி. பேச: 9444360421 விலை ரூ.400

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com