ஆண்கள் படிக்கவேண்டிய புத்தகம்!

ஆண்கள் படிக்கவேண்டிய புத்தகம்!

அன்றாட வாழ்வில் பெண்கள் சுரண்டப்படுவதை தெளிவான சொற்களில் யாருக்கும் வலிக்காமல் எடுத்துச் சொல்லும் கட்டுரைகளை எழுதி இருக்கிறார் கீதா இளங்கோவன். பெண்களின் ஆடை, உடல் பிரச்னைகளைச்சொல்லும் துப்பட்டா போடுங்க தோழி இவ்வகையில் மிக முக்கியமானது. பெண்கள் தங்கள் உடலை நினைத்து குற்றவுணர்வு கொள்ள வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது. இக்கட்டுரை அனைவருமே வாசிக்க வேண்டியது. குடும்பப்பெண்ணாக தன்னை அனைவரும் அங்கீகரிக்க வேண்டி, சுமைகளைத் தாங்குவது,

வசதிக்கு ஏற்ப உடை அணிவது, திருமணம், கருவுறுதலில் பெண்ணுக்கு இருக்கும் உரிமை, திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்லுதல் போன்ற சமகாலத்துப் பெண்கள் உணரவேண்டிய அத்தனை அம்சங்களையும் இந்நூல் விளக்குகிறது. பெண்களைப் பற்றி சமூகம் பார்க்கும் அத்தனை பழைய அம்சங்களையும் கேள்விக்குள்ளாக்குவதுடன் முன்னோக்கிச் செல்லவேண்டிய பாதையையும் போட்டுத்தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. பெண்கள் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இது. அதே சமயம் ஆண்கள் அனைவரும் கட்டாயம் வாசித்தே தீரவேண்டிய நூலாகவும் இது அமைந்துள்ளது.

துப்பட்டா போடுங்க தோழி, கீதா இளங்கோவன், வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், 15, மகாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 1, ராக்கியப்பா தெரு, சென்னை 600004, பேச: 7550098666 விலை ரூ 160

சோழர்களின் தேசம்

கரிகாலன் காலத்திய சோழ அரசும் அவருக்குக் கிட்டத் தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரும் ராஜேந்திரன் காலத்திய சோழ அரசும் ஒரே மாதிரி இல்லை. கரிகாலன் ஆட்சி பழங்குடித் தன்மை உடைய ஓர் ஆட்சி என்றே கருதவேண்டும் - பேராசிரியர் சுப்பராயலுவின் நேர்காணலில் இது போன்று ஏராளமான திறப்புகள். நீர்ப்பாசனத் துறை பொறியாளர் பழ. கோமதிநாயகம் கரிகாலன் காலம் தொட்டு  சோழர்களின் நீர்ப்பாசன முறைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார். பழைய ஏரிகளின் கரைகள் கட்டப்பட்டமுறை பற்றி சங்க இலக்கியங்களில் அரை மண் உருவாக்கிக் கட்டினார்கள் என்ற செய்தி கிடைக்கிறது என்பது போன்ற பல புதிய செய்திகளை அவர் தருகிறார். கல்லணை கட்டப்பட்டதன் காரணம், அதன் தொழில்நுட்பங்கள் பற்றி அவர் தரும் செய்திகளும் வியப்பானவை. சோழர்களின் வரி வசூல் பற்றி எஸ்.நீலகண்டன், தமிழர் வணிகம் பற்றி அ.கா.பெருமாள், அவர்களின் கடல் வெற்றிகள் குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர் ஹெர்மன் குல்கே, சோழர்களின் கடற்படையில் அறுபதாயிரம் யானைகள் இருந்ததாகக் குறிப்பிடும் இந்திய கடற்படையில் பணியாற்றியவரும் இத்துறை நிபுணருமான விஜய் சகுஜாவின் நேர்காணல் என சோழர்களைப் பற்றி திணறடிக்கும் அளவுக்கு திரண்டிருக்கிறது அருஞ்சொல் -  தினமலர் வெளியீடாக வந்திருக்கும் சோழர்கள் இன்று நூல். தொகுப்பாசிரியர் சமஸ். பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்கிற அளவுக்கு ஆழமாக கட்டுரைகளைத் தேடித் தொகுப்பதில் ஆர்வம் கொண்டவரான சமஸ் இந்த நூலுக்காகவும் கடுமையாக உழைத்திருப்பதை இந்நூலில் பார்க்க முடிகிறது.

சோழர்கள் என்றால் நொபுரு கராஷிமா இல்லாமல் இருக்க முடியுமா? அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள் இடம்பெறுகின்றன. ஆ. சிவசுப்பிரமணியன் சோழர்கால சமூகக் கலப்பு பற்றிப் பேசுகிறார். சோழர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கும் குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் மாமன்னர் ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் பற்றி விரிவாகப் பேசுகிறார். ஒரு சிற்பிக்கு ராஜராஜப் பெருந்தச்சன் என்று பெயரளிக்கும் ராஜராஜன், ஒரு நாவிதனுக்கும் ராஜராஜ பெருநாவிழன் எனப் பெயரளிக்கிறான் எனச் சொல்லி அம்மன்னனைப் பற்றிய புது பிம்பத்தை உருவாக்குகிறார். அஷோக் வர்தன் ஷெட்டி சோழர்களின் நிர்வாகக் கலை பற்றிக்கூறுகிறார். நிலங்களை அளக்க ஒரே அளவிலான மாளிகைக் கோல் பயன்படுத்தப்பட்ட தகவலை சொல்லும் இவர் சோழர்கள் விதித்த செலவு வரி பற்றிச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.

இந்நூலின் தீவிரமான மைய அச்சு மேலே சொல்லப்பட்டவர்களின் பங்களிப்புகள் இடம்பெறும் பகுதியே. இவற்றைச் சுற்றி சோழர்களின் வரலாறு, சமகாலப் பார்வைகள், கலையம்சக் கோணங்கள், ஆளுமைகள் பற்றிய அறிமுகங்கள் ஆகியவற்றைப் பின்னி கனமான நூலாக இது தொகுக்கப்பட்டுள்ளது.

சோழர்கள் இன்று, தொகுப்பாசிரியர் சமஸ் வெளியீடு:

அருஞ்சொல் -  தினமலர். விலை ரூ 500

நூல் பெற: 75500 09565

 கச்சிதமான கதைகள்

சிறுகதைகளில் மனிதவாழ்வின் வேறுபட்ட அனுபவங்களின் துளிகள் சிறைப்படுகின்றன. தன் பயணத்தூடே படைப்பாளி காணும் காட்சிகளை அதன் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளை எழுத்தாக்குகிறான். இத்தொகுப்பில் இருக்கும் 11 சிறுகதைகளில் களவு படித்தவுடனே நெஞ்சில் தைத்துக் கொள்கிறது. பெரிய நீதிபதி ஆகி அதிகாரத்தின் உச்சத் தில் இருக்கும் ஒருவன் தன் பால்யகால நண்பனைச் சந்திக்கிறான். அவனோ இன்னும் சமூக அடித்தட்டில் திருட்டு மணல் அடிக்கும் லாரிக்காரனாக வாழ்கிறான். அவன் மேல் பொறாமைகொள்ளும் மனதுதான் அந்த நீதிபதிக்கு வாய்த்திருக்கிறது. நமக்கோ சல்லிப் பயல் என்று சொல்லிக்கொள்ள வைக்கிறது. அம்மன் சிற்பம் சிறுகதை துல்லியமானதொரு திருப்பத்தை நறுக்கென்று வைக்கிறது. இதுபோன்றதொரு திருப்பத்தை கதை முடிவில் தருகிற உருவ நேர்த்தியை செந்தில்குமார் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறார். உறுதுயர் சிறுகதையில் பயணிக்கும்போது அதிலொரு திருப்பத்துக்காக வரிக்கு வரி தேடிக்கொண்டே செல்கிறோம் இறுதியில் அவர் தரும் 'பஞ்ச்' நம் முகத்தின் மீது விழுவதுபோன்றதொரு வடிவ ஒழுங்கு. சர்வம் சௌந்தர்யம் கதையில் பெண்பித்து கொண்ட கௌதம் என்கிற பாத்திரம் சுக்குநூறாக சிதைந்து அழுகின்ற சித்திரம் மிக நேர்த்தி. நல்லதொரு தொகுப்பு.

பதிமூன்று மோதிரங்கள், ரா.செந்தில்குமார், வெளியீடு: யாவரும், 24, கடைஎண் பி, எஸ்.ஜி.பி. நாயுடு காம்ப்ளக்ஸ், தண்டீஸ்வரம் பேருந்து நிலையம், பாரதியார் பூங்கா எதிரில், வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி. சென்னை - 42, பேச: 9042461472 விலை ரூ: 185 

மழையும் மனசும்

மழைகளைப் பார்க்கும் ஒரு கவிமனது வரைந்து தள்ளி இருக்கும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளன. மழையை ரசிக்காத, பாடாத கவிஞர் இருக்க முடியுமா? உஷாராணியின் ரசனையில் ஈரமான வரிகள் பிறந்துள் ளன. மழைக்காக வாங்கிய வண்ணக் குடை கோவர்த்தன கிரியாகி, காற்றில் தாமரையென மலர்கிற அதிசயத்தை இவரது மழைக்கவிதையொன்று நிகழ்த்துவதை நாமும் ரசிக்கலாம்.

மழைக்குக் கொடுத்த சிறுகுடையை குட்டிகளீன்ற பூனைக்கு மறைப்பாய் வைத்துவிட்டு நனைந்து வந்திருக்கும் சிறுமியைக் கண்டு கடவுள் முறுவலிப்பதாக ஒருகவிதை சொல்கிறது. நாமும் கூடத்தான் முறுவல் புரிகிறோம்.

அய்யோ என்ன அவசரம்

சற்றுப் பொறு மழையே...

பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருக்கின்றன என்று அவர் எழுதுகையில் நாமெல்லாம் தாயாகிறோம். ஆயிரம் ஆண்டுகளாகப் பெய்யும் மழையிலிருந்து நாம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லையே என்ற கேள்வியில் தலைகுனிகிறோம்.

இக்கணத்தின் மழை, பா. உஷாராணி, கிழக்கு வாசல், எண் 525, மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், 614713 பேச: 9443343292. விலை: ரூ 125

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com