சாமி இருக்குதா?

சாமி இருக்குதா?

இமையத்தின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு தாலிமேல சத்தியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பத்து சிறுகதைகளைக் கொண்டுள்ள இத்தொகுப்பு வழக்கம்போல் சமூக அரசியல் யதார்த்தத்தை நேரடியாக முகத்தில் அடித்தாற்போல சொல்லிக்கொண்டிருக்கிறது. கவர்மெண்ட் பிணம், கட்சிக்கார பிணம் என்று என்று இரு சிறுகதைகள் செத்துப்போனவர்களை முன் வைத்து இருப்பவர்களின் அவஸ்தைகளைப் பேசுகின்றன. கொரோனாவில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த ஒரு பெண், புற்றுநோயில் சாகக்கிடந்த கணவனுக்காக சென்னைக்குப் போய் மருந்துவாங்கி வருகிறாள். கொரோனா பரவிய கோயம்பேட்டிலிருந்து வந்த லாரியில் வந்ததால் அவளை மருத்துவமனைக்கு போலீஸ்காரர்கள் அழைத்துப்போக, வீட்டில் கணவன் செத்துப்போகிறான். உதவ யாருமே இல்லாத கொரோனா சாபக்காலத்தில் அந்த பிணம் கவர்மெண்ட் பிணமாகிறது. ‘கவர்மெண்ட் பொணத்துக்கு நீங்க சொந்தம் கொண்டாட முடியாது’  ‘கவர்மெண்ட் பொணத்துக்கு தீட்டெல்லாம் கிடையாது’  ‘கவர்மெண்ட் பொணத்துக்கு கொள்ளியெல்லாம் வைக்க முடியாது’ போன்ற வாசகங்கள் முதல்முதலாக நமக்கு அறிமுகமாகின்றன. அந்த கிராமத்து வீட்டை நோக்கி டிவி காமிராக்கள் படையெடுத்து, ஓர் அபத்த நாடகம் நிறைவேற்றப் படுவதை இமையம் கண்முன்னே சாட்சியாகக் காட்டுகிறார்.

 அடுத்த கதை கட்சிக்காரப் பிணம். கட்சிக்காரராக, கொள்கைப்படி வாழ்ந்தவர் பாண்டியன். திராவிட சுயமரியாதை கொள்கைப்படி தன் வீட்டில் இறந்த உறவினர்களுக்கு சடங்குகள் கூடச் செய்யாதவர். அவர் இறந்த பிறகு, அவர் உடலை கட்சி முறைப்படி அடக்கம் செய்ய உள்ளூர் கட்சிக்காரர்கள் சொல்ல, உறவினர்களோ சாதிமுறைப்படி சடங்குகள் செய்து எடுக்கிறார்கள். கட்சிக்காரப் பிணமாக இருந்தாலும் உறவினர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் அடங்கவேண்டி இருக்கிறது.

‘பணம் வாங்குன நாயெல்லாம் ஓட்டுப்போட்டிருந்தா நான் ஏன் தோக்க்போறேன்?’ ஊர் பிரசிடெண்ட் தேர்தலில் ஓட்டுப்போன ராஜனின் கோபத்தைக் காட்டுகிறது தாலி மேல சத்தியம் சிறுகதை. ஊரில் ஓட்டுக்கு எல்லோருக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்தும் அவன் தோற்றுப் போகிறான். வீடு வீடாக வந்து கொடுத்தப் பணத்தைக்கேட்கிறான். காசு வாங்கிக்கொண்டு அவனுக்கே ஓட்டுப் போட்டிருக்கும் அலமேலுவுக்கோ தர்மசங்கடம் உனக்கு தான் ஓட்டுப்போட்டேன் என தாலி மேல் சத்தியம் செய்தும் அவன் பணத்தை வசூலிக்காமல் போவதில்லை. ஓட்டுக்கு ஐயாயிரமும் ஆறாயிரமுமாக 68 லட்சம் அவன் கொடுத்ததாகவும் அதற்கு மேலும் 12 லட்சம் செலவழித்திருப்பதாகவும் சொல்கிறான். ஊர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு 80 லட்சம் செலவழித்திருக்கும் கொடுமையை இமையம் எந்த விமர்சனமும் இன்றி முன்வைக்கிறார். இந்த நிலைக்கு வந்து சேர்ந்திருக்கும் நமது மக்களாட்சியின் நிலையைக் கண்டு விமர்சிக்க வேண்டியது நமது கடைமையாகத்தான் இக்கதை நிலை நிறுத்துகிறது. எழுத்தாளன் நேரடியாக விமர்சனம் வைப்பதில்லை. இதை அவன் படைப்பாக முன் வைப்பதே அவனுடைய ஆகச்சிறந்த விமர்சனமாக இருக்கிறது.

சாமி இருந்தா கேட்கும் என்கிற கதை இத்தொகுப்பில் மிகவும் உக்கிரமானது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மகனை இழக்கிறாள் வசந்தா. பள்ளி ஆசிரியர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைக்கு அவன் பலியானது தெரிந்ததும் காவல்நிலையத்தில் புகார். ஊர்க்காரர்கள், வக்கீல்கள் வந்து பஞ்சாயத்துப் பேசி, திக்கற்று நிற்கும் அவளது புகாரை வாபஸ் வாங்கி, பணம் பெற்றுக்கொடுக்கிறார்கள். அந்தபணத்திலும் ஆளாளுக்குப் பங்குபிரித்துக்கொண்டு மீதியைத் தான் கொடுக்கிறார்கள். சிறுகதை முழுக்க வசந்தாவின் கண்ணீரையும் ஆற்றாமையை தெறிக்க வைக்கும் சொற்களைக் கொண்டுதான் எழுதியிருக்கிறார்.

 ’நான் பிள்ளையப் பறிகொடுத்து தெருவுல நிக்கற மாதிரி அவனும் ஒருநாளு நடுத்தெருவுல நிப்பான். நான் சொல்றத சாமி இருந்தா கேக்கும்’ என்கிறாள் வசந்தா. ‘எந்தச் சாமி இருக்கு கேட்கறதுக்கு’ என்று சலிப்பான குரலில் கண்ணகி சொன்னாள். – அப்பெண்ணின் துயரைத் தாங்கமுடியாமல் எழுத்தாளர் இமையம் சிறுகதைக்குள் வெளிப்படும் அபூர்வ தருணமாக இதைப் பார்க்கலாம்.

தாலி மேல சத்தியம், இமையம், வெளியீடு: க்ரியா, விலை ரூ 325

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com