செறிவும் அகப்பயணமும்

செறிவும் அகப்பயணமும்

நீல.பத்மநாபன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுத நான் மூன்று முறை முயன்றும் கவிஞர் இந்த மெலிந்த நூல் மூலம் எனக்குள் கடத்தியிருந்த அவசங்கள் மனதில் அடர்ந்து கவிந்து எழுத விடாமல் பாதித்தது நிஜம். உணர்ச்சிகளைக் கழற்றி வைத்து விட்டு எழுத மட்டுமாக வாசித்தது உருவெடுத்தது இப்படி :

தேர்ந்த கைகள், எளியனவாகக் காட்சிக்குத் தோன்றும் செறிவு மிகுந்த கவிதைகளை அழுத்தமாக நெய்வதை விட்டு விலகி நிற்பதில்லை என்று சொல்கிறவை இக்கவிதைகள்.

எழுத்தாணி மழுங்கியும் சளைக்கவில்லை

எழுதாமல் இருக்கவும் முடியவில்லை

எழுதிய எழுத்துக்கோ கணக்குமில்லை

எழுதாமல் அணைந்தவை கொஞ்சமில்லை

சுவடியைத் தூக்கிநான் அலையவில்லை

சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ நாதியில்லை.

ஷெல்லி போல சுயம் சார்ந்து, பிலிப் லார்கின் போல் அமைதியின்மையில் கால்கோள் கொண்டு, கவி மனதிலிருந்து பெருகும் இக் கவிதைகளின் தீவிரம் அசாத்தியம்.  

கிட்டே கிட்டே வந்து கௌவிடாமல்

எட்ட எட்டப் போய்விடும் துட்ட நாய்

நாய்க்கும் பேய்க்கும் கூட

வேண்டாத இப்பாவ ஜன்மம்

இன்னும் எத்தனை நாள்

சர்வேசா 

மென்மையான ஆன்மீகமும் சித்தர் பாடலின் அகப்பயண அனுபவமும் வெளிப்படுத்தும் கவியுணர்வு, அண்மைக்காலப் பெருந்தொற்றில் மையம் கொண்டு, ‘கொரோனா காலத்தில் வந்த பிறந்தநாள்‘ என்று தற்காலத்தை எழுத எத்தனை பேருக்கு வாய்த்துள்ளது?  

இறுதிச் சிறுகதையை எழுதி விட்டேன், இறுதி நாவலை எழுதிவிட்டேன், ஆனால் இன்னும் கவிதையோடு மட்டும் எப்படியோ ஒரு உறவும் பிடிப்பும் இருக்கிறது‘ என்று நீல.பத்மநாபன்

சொல்வதில் தட்டுப்படும் சோகம் அவர் எழுத்தை நேசிக்கும் வாசகர்களைப் பாதிப்பது.  நீல.பத்மநாபன் போன்ற உன்னதமான படைப்பாளிக்குப் படைப்பின் பொறி மனதில் தட்டுப்பட்டு  மகத்தான இலக்கியமாக, சர்வேசன் அருளால் வயது ஒரு தடையாக இல்லாதிருக்கட்டும். முதுமை இனிதே என்றாகட்டும்.

இரவில் விரிந்த மலர்கள்  கவிதைத் தொகுப்பு, நீல.பத்மநாபன், விருட்சம் வெளியீடு, அலைபேசி 09444113205, 09176613205, விலை ரூ 80/

செப்டம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com