கூரிய பார்வை

கூரிய பார்வை

வானில் மிதந்துகொண்டிருந்த வெண்முகில்களை வரைந்து முடித்த பென்சில் முனைகளைப் போல் நின்ற கஞ்சன் ஜங்கா. மலை எனும் சீலையில் வெயில் வரையும் சித்திரங்கள்.  மேகத்தைப் பார்த்து காவென்று கரைந்து கண்டனம் தெரிவித்தது காகம்... இதுபோன்ற இனிமையான மொழி ஓவியங்களால் நிரம்பி இருக்கிறது என் ஜன்னலுக்கு வெளியே என்கிற மாலன் எழுதி இருக்கும் இந்த கட்டுரைகளின் தொகுப்பு. நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகள் மீதான கூரிய பார்வைகளின் தொகுப்பு. நுனிப்புல் மேயாமல் ஆழமாகச் செல்லும் எக்ஸ்ரே பார்வை மாலனுடையது. பேஸ்புக்கின் தோற்றத்தை விவரித்து, அதன் அபாயங்களையும் விவரித்து தேவைப்பட்டால் இந்தியா சுயமாகவே ஒரு ஊடகத்தை அதற்குப் பதிலாக உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று கேட்கும் கட்டுரை ஓர் உதாரணம்.

சமகால நிகழ்வுகளில் தொடங்கி பழங்காலத் திருக்குறளுக்கு செல்லும் கட்டுரையும் உண்டு. கொரோனாவுக்கு முகமூடி அணிவதில் தொடங்கி, வள்ளுவர் காதலன் காதலி உறவுகளில் தும்மல் பற்றிச் சொல்லும் குறள்களுக்குள் சுவாரசியமாகப் புகுந்து விடுகிறார். அதில் கிடைக்கிறது,

‘ பொஸஸிவ்னெஸ்‘ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் ‘உடமைப் பிடி'.  திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டுவதைப் பற்றி மாலன் எழுதி, அதை தன் ட்விட்டர் கணக்கில் பிரதமரும் பெருமையுடன் வெளியிட்டார். அக்கட்டுரையும் இத்தொகுப்பில் உண்டு.

இக்கட்டுரைத் தொகுப்பில் இல்லாத பொருள் என்ன என்பதை நுண்ணோக்கி கொண்டு நோக்கினாலும் கண்டறியமுடியுமா என்பது ஐயமே. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பிரார்த்தனை, சமூகம், அரசியல், தத்துவம், வரலாறு என ஏராளமான பொருள்களை நுட்பமாக அணுகி கவிதை நடையும் கருத்தாழமும் கொண்ட பாணியில் எழுதியிருக்கிறார் மாலன். எல்லா கட்டுரைகளிலும் கடைசி வரி இருக்கிறதே... அதில் முழு கட்டுரையின் உணர்வையும் இறக்கி வைக்கிறார். அதன் பாரத்தை சுமக்கும் மனம் அதில் இருந்து விடுபட சற்று நேரமாகிறது!

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை -17. பேச: 044-42161657 விலை: ரூ 300

காட்சிகளின் வரிசை

விந்தையாகத்தான் இருக்கும். 1970களில் எழுதி இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் இப்போதுதான் 2021-இல் தொகுப்பாக வெளியாகின்றன.

சிறுகதை ஆசிரியர் நாரணோ ஜெயராமனுக்கு 76 வயது ஆகிவிட்டது! சுந்தர ராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள்(1976) சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதி இருப்பவர் நாரணோ ஜெயராமன். கசடதபற, பிரக்ஞை, ஞானரதம், அஃக் போன்ற அக்கால தீவிர இலக்கிய பத்திரிகைகளில் மட்டும் வெளியான கதைகள் இவை. ஒன்பது கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. இந்த கதைகளில் அன்றாடம் காண்கிற மனிதர்கள் உலவுகிறார்கள். சுற்றிலும்

சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்தான் பதிவாகின்றன.  ஒரு ரயில் நிலையத்தில் நண்பனுக்காக காத்திருப்பதை பதிவு செய்யும் கதை ‘வாசிகள்‘. காத்திருப்பவனின் கண்ணில் படும் காட்சிகளை வெறுமனே பார்வையாளனாக எழுதிவிட்டு, வராத நண்பனை என்ன செய்வது என நகர்ந்து செல்லும் கதை. ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் உலகம் தன் போக்கில் வழிந்து

சென்றுகொண்டே இருக்கிறது. அவன் படிக்கப்போனான் என்கிற இந்த தொகுப்பின் முதல் சிறுகதையும் இப்படித்தான். பாதியில் விட்ட படிப்பைத் தொடர வேலையை விடுகிறான் ஒருவன். திடீரென அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எல்லோரும் அந்நியமாகும் சூழலைச் சொல்லும் கதை.

தற்கால சிறுகதைகளை  வாசிப்பவர்கள், இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும் போது எந்த அளவுக்கு உள்ளடக்கத்திலும் மொழியிலும் படைப்பியக்கம் நகர்ந்து வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

வாசிகள், நாரணோ ஜெயராமன், வெளியீடு: அழிசி, 1-37, சன்னதி தெரு, கீழநத்தம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 627353. பேச:7019426274. விலை ரூ 110

போராடடா! ஒரு வாளேந்தடா!

உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ளவேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப்பேசுகிறார் நூலாசிரியர்.  இவற்றைக் கடைபிடித்தால்  நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர், ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒருமணி நேரம் செய்தல், மாதந்தோறும் சில நல்ல நூல்களை வாசித்தல்.

ஏராளமான நீதிமொழிகள், வெற்றி பெற்றோரின் கூற்றுகள், எழுச்சியூட்டும் அசலான சம்பவங்கள் ஆகியவற்றைக் கோர்த்து அழகிய வடிவில் உருவாகி உள்ளது போராடக் கற்றுக்கொள் என்ற இந்நூல்.

சட்டம் ஒழுங்கு காவலதிகாரியாக வெகுகாலம் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் இந்நூலாசிரியர்.  இளைஞர்களைக் குறிவைத்து இதை எழுதிஉள்ளார்.

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப. , விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர்& 641001 விலை ரூ 200 பேச: 9047087053

தமிழ் வாழ்க்கை

நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர், சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர்& கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழ்க்கை'. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச் செல்கிறார். பெரும்பாலும் தமிழ் இலக்கிய மேடைகளில் கவியரங்குகளில் கழிந்த வாழ்க்கை இவருடையது. அணிந்துரையில் முனைவர் எ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்த தமிழறிஞரின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே இனிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகளே. திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டி, அந்த பக்கமே போகவேண்டாம் என முடிவு செய்த நிகழ்ச்சிகள் புன்னகை வரவழைக்கின்றன.

இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், வெளியீடு: எழில் நிலையம், 26/7, கோ.சு.மணி தெரு,  சூளைமேடு, சென்னை - 600094 பேசி: 94442 66484, விலை ரூ140

புது அனுபவங்கள்

ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு.

சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம்  என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் காணாதவர்கள். இறகுப் பந்து ஆட்டத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் களி என்ற சிறுகதையை இந்த தொகுப்பில் இடம்பெற்ற கதைகளில் முக்கியமானதாகக் கருதலாம். புனைவுகளின் மூலம் சட்டென்று ஆழ்மனதுக்குள் புகுந்துவிடுகிற கலை சுனில்கிருஷ்ணனுக்கு மிக எளிதாக கைவரப்பெற்றுள்ளது. அசலான தமிழக நிலப்பரப்புகள், புனைவில் பறக்கும் குருவிகள், மலேயா தெருக்களில் அலையும் கவிஞன் என வெவ்வேறு எல்லைகளைத் தாண்டிச்செல்லும் கூறுகளுடன் அமைந்திருக்கும் தொகுப்பு இது.

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன் வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, பிஎஸ்ஜிபி நாயுடு காம்ப்ளக்ஸ். தண்டீஸ்வரம் பேருந்துநிலையம்,வேளச்சேரி, சென்னை&42. பேச:9042461472 விலை ரூ:200

டிசம்பர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com