பெருவாழ்வின் பதிவுகள்

பெருவாழ்வின் பதிவுகள்

எழுத்தாளர் கி.ரா. நூற்றாண்டை ஒட்டி அவரது படைப்புகள் பற்றி ஏராளமான எழுத்தாளர்களின் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்று இரு தொகுதிகளாக மிகப்பெரிய நூல் தொகுதியை வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு, அனுபவக் கட்டுரைகள் கிராவின் இலக்கிய உலகைத் துய்த்து ரசனை மிகுந்து, சொற்களாக வெளிப்படுகின்றன. பழ. நெடுமாறன், வைகோ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட பல ஆளுமைகளும் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளும் தலைமுறை வித்தியாசம் இன்றி ஒருங்கிணைந்து இந்த தொகுப்பில் பங்களித்துள்ளனர். சோ.தர்மனின் கட்டுரையில் எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர் என கிராவைக் குறிப்பிடுகிறார். கோவில் பட்டியிலிருந்து ஒரு பெரிய பட்டாளமே இலக்கியத்துக்குள் வந்துள்ளது அதற்கு ஒரு மூலகாரணமாக, உந்து சக்தியாக இருந்தவர் கி.ரா என்னும் மாபெரும் சக்தி என்கிறார் அவர். கடைசி வரை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தும் படைப்பாளியாகவும் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளை உபசரிக்கும் பெருங்குணம் கொண்டவராகவும் அவர் இருந்ததை தர்மன் தன் கட்டுரையில் வெளிப்படுத்துகிறார். எல்லா கட்டுரைகளுமே கி.ராவின் படைப்புகளைக் கொண்டாடி, வியந்து, ரசித்துத் தீர்க்கின்றன. ஓர் எழுத்தாளனின் பெரும் படைப்புவாழ்வைப் பதிவுசெய்கிறது இத்தொகுப்பு.

கி.ரா. நூறு, (இரண்டு தொகுதிகள்), வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பொதிகை பொருநை- கரிசல் வெளியீடு, புஸ்தகா டிஜிட்டல் மீடியா. பேச: 7418555884 விலை ரூ 870

யானைகளுக்கு வாசிக்கத் தெரியுமா?

வருங்காலத்தில் இல்லாமல் போய்விடக்கூடிய சாத்தியங்கள் நிரம்பப் பெற்றது யானை என்னும் பேருயிர். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நாம் காணும் உயிர்வதைச் செய்திகளில் அதிகம் இடம்பெறுவது யானை பற்றிய செய்திகளே. நீலகிரி மலைப்பகுதியின் தொலைவான மலைக்கிராமங்களின் கரடு முரடான சாலைகள், ஆதிவாசி குடியிருப்புகள், நவீன மனிதனின் வளர்ச்சி என்ற பெயரிலான காட்டுமிராண்டித் தனங்கள் என்று தொடர்ந்து அலைகிறது இந்நூல்.

கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக் கான புதுமைப்பித்தன் விருது பெற்ற இந்நூலை ஆக்கி யிருப்பவர் பத்திரிகையாளர் வேலாயுதன். யானைகளின் வாழிடங்களில் தான் பெற்ற செய்தி சேகரிப்பு அனுபவங்களின் வழியாக இக்கட்டுரைத் தொடரை எழுதி உள்ளார். யானைகளுக்கு புத்தகம் படிக்கத் தெரிந்திருந்தால் தங்கள் பால் ஆர்வம் காட்டும் இந்த பேனா முனைக்கு மண்டியிட்டு வணக்கம் தெரிவித்திருக்கும். இந்நூலின் மூன்றாம் பாகம் இது. சொந்தப் பதிப்பாக இந்த முக்கியமான நூலை வெளியிட்டுள்ளார் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.

யானைகளின் வருகை பாகம் 3, காசு வேலாயுதன், கதை வட்டம், தமிழ் இல்லம், 105 ப்ரெஸ் என்கிளேவ், கோவைபுதூர், கோயம்புத்தூர் 641042 பேச: 9994498033 விலை ரூ 270

உரை நடை

மறைந்த தமிழறிஞர் ஔவை நடராசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய உரைகளை நூலாக்கித் தந்துள்ளார் அவரது மகன் ஔவை அருள். சங்கப்பாடல்களாகட்டும், திருக்குறளாகட்டும் அனைத்திலும் சாறு பிழிந்து எடுத்ததைப் போன்ற இலக்கியத் திறம் வாய்ந்த உரைகளை ஆற்றுகிறவர் ஔவை நடராசன். அதில் தெறிக்கும் புதிய செய்திகளும் விளக்கங்களும் வியப்பில் ஆழ்த்துபவை.

உதாரணத்துக்கு சங்கப்பாடல் ஒன்றை விளக்குபவர் ‘கல்லாக் கடுவன்‘ என்ற  சொல்லுக்கு மரம் ஏறுவதைத் தவிர வேறொன்றும் பயிலாத குரங்கு என்று பொருள்தருகிறார். 2009-இல் நடந்த தொல்காப்பியப் பயிலரங்கில் அவர் நிகழ்த்திய உரையும் மிகச் சிறப்பானது. தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது அவரிடம் பணியாற்றிய நடராசன் கோப்பொன்றில், இவ்வகையில் இவரைக் கருத விதியில் இடமில்லை என எழுதினாராம். கலைஞரோ, விதியை மதியால் வெல்லலாம் என குறிப்பு எழுதினாராம்! இதுபோல் உரைகளின் நடுவே சுவையான தெறிப்புகளும் உண்டு.

ஔவை சொல்கேளீர், ஔவை அருள்,வெளியீடு: ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், 12/6, போயஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பேச: 044-43418700

மார்க்ஸ்முல்லரின் பார்வை

இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து இந்தியா செல்ல இருக்கும் வெள்ளைக்கார இளைஞர்களுக்கு இந்தியா பற்றித் தெரிந்துகொள்வதற்காக மாக்ஸ்முல்லர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. 1882-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பணியாற்றி, இந்தியவியல் அறிஞராக இருந்த மாக்ஸ்முல்லர், இந்தியாபற்றிக் கொண்டிருந்த கருத்துகளை அவரது உரைகளில் காணலாம். இத்தனைக்கும் அவர் இந்திய மண்ணில் காலடி வைத்ததேஇல்லை. அவர் ஆரியர்களின் வேத காலப் பண்பாட்டையும் சமஸ்கிருத மொழியில் உள்ளவற்றை மட்டுமே இந்திய மக்களின் அனைவரின் பண்பாடாக எடுத்து வைக்கும் அணுகுமுறை கொண்டிருந்தார். அதுவே அவர் மீது வைக்கப்படும் விமர்சனம். இந்தியா குறித்து ஐரோப்பியப் பார்வை எவ்வாறு ஆரம்பகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது என்பதுகுறித்து அறிய இந்நூலை வாசிக்கலாம்.

இந்தியா நமக்குக் கற்பிப்பது என்ன? எஃப் மாக்ஸ் முல்லர், தமிழாக்கம்:தி.ஆதிவராகன், அலைகள் வெளியீட்டகம், எண் 5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன்தெரு, இராமாபுரம் சென்னை-600089, பேச: 9841775112 விலை ரூ: 340

கதை சொல்லும் கதைகள்

சமகால ஹீப்ரு மொழி எழுத்தாளர் எட்கர் கீரத் எழுதிய சிறுகதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்துள்ளார் செங்கதிர்.

ஒவ்வொரு கதையும் நாம் எதிர்பாராத தரத்திலும் போக்கிலும் அமைந்தவை. தபுலா ரஸா என்கிற முதல் கதையே நம்மை மிரட்டுகிறது. அடால்ப் ஹிட்லரை பழிவாங்க எண்பது ஆண்டுகள் கழித்து ஹிட்லர் போலவே இருக்கும் க்ளோன் ஒன்றை ஆய்வுக்கூடத்தில் வாங்கி, கொல்ல முயலும் பெரியவர்... இப்படி இந்த கதையை சுருக்கமாக சொல்லமுடியாது. ஏனெனில் இந்த கதை அந்த க்ளோனின் பார்வையில் இருந்து ஆரம்பமாகிச் சென்று கடைசியில்தான் துலக்கம் அடைகிறது. அது வெறும் க்ளோன் தான்.. உயிர் அல்ல என்று அதற்குத் தெரியவருகிற தருணமே இந்த சிறுகதையின் உயிர்நாடி. அதன் பின்னர் நடக்கின்ற கதையின் இறுதிக்கட்டம் சிறுகதையின் தர்க்கபூர்வமான முடிவை நிகழ்த்த உதவுகிறது. இதே போல் சாளரங்களே இல்லாத அறையில் அடைக்கப்பட்ட மிக்கி என்பவனைப் பற்றிய கதை. கடைசியில் அந்த மிக்கியைப் பற்றி, உயிரற்ற ஒன்றை ஒருபோதும் கொல்லமுடியாது என்று  சொல்லப்படும்போதுதான் நமக்கு எட்கர் கீரத்தின் கதை உலகம் புரிகிறது. இவ்விரு கதைகளுக்கு இடையில் மேலும் எட்டுக் கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நமக்கு தமிழ்ச்சூழலில் அறிமுகம் இல்லாத வாழ்வு, எதார்த்தமும் எதார்த்தத்தை மீறிய சூழல்களையும் கொண்டு பின்னப்பட்டவை. அழகான மொழிபெயர்ப்புக்காகவும் வாசிக்கலாம்.

பறந்துபோய்விட்டான், எட்கர் கீரத் தமிழில்:

செங்கதிர், வெளியீடு: நூல்வனம், எம்22, ஆறாவது நிழற்சாலை, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-600089,பேச:9176549991, விலை ரூ: 230

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com