பழமையின் இனிமை

பழமையின் இனிமை

பழங்கால நூல்கள், இலக்கியம், சுவடிகள் என பழைமையின் இனிய மணம் வீசும் அனுபவத்துக்கு நான் கியாரண்டி என துணிந்து சொல்கிறது இந்த புத்தகம். நிஜம்தான் பக்கத்துக்குப் பக்கம் நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களாக குவிந்து கிடக்கின்றன, வடுவூர்துரைசாமி அய்யங்கார் சமயங்களை ஒப்பிட்டு எழுதிய நூல் பற்றிய கட்டுரை மிகப் பிரமாதமாக இருக்கிறது. பண்டைய எகிப்து மன்னர்களுக்கும் நம்முடைய வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்பு இருக்கிறது என அவர் எழுதி இருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நாடி சோதிட சுவடிகள் பற்றிய கட்டுரையும் முக்கியமான ஒன்று. விடுதலைக்கு முந்தைய சினிமா படங்கள், பழங்கால சமையல் புத்தகங்கள் என கட்டுரைகள். சமையல் பகுதியில் வெல்ல இட்லி, வாழைப்பழ சாதம் என சமையல் குறிப்புகளும் உண்டு. இந்த நூலில் காலத்தின் தூசு படிந்த ஓர் ஆவணக்காப்பகமே உள்ளது. வாசிக்கும் போது தும்மல் வரலாம்!

அந்தக் காலப் பக்கங்கள்,  அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், எப்1, முதல் தளம், அருணாசலா ப்ளாட்ஸ், லட்சுமி நகர், நன்மங்கலம், சென்னை - 600129 விலை ரூ. 200

விரிவும் ஆழமும்

ரகசிய விருந்தாளியைப் போல் தண்ணீர், சென்னையின் பெருவெள்ளத்தின் போது தன் வீட்டில் புகுந்திருந்தது என்கிறார் விநாயகமுருகன்.

சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அதனால் இழப்பை சந்தித்த பல்லாயிரம் மக்களின் சாட்சியத்தை ஒரு நபராக இவர் எழுதி இருக்கிறார். இது போல் கடந்த சில ஆண்டுகளில் நம்மை உலுக்கிய பல்வேறு சர்ச்சைகள், சமூகம், அரசியல் சார்ந்த நிகழ்வுகளை தன் அனுபவம், மாற்றுப் பார்வை சார்ந்து ஆழமாக எழுதப்பட்ட கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன.   அமேசான் காடும் சில அழகிகளும் கட்டுரையில் உடம்பைக் குறைக்க மூலிகை தருகிறோம், மருந்து தருகிறோம் என ஏமாற்றும் குழுவினரிடம் சிக்கிக்கொண்ட அனுபவத்தை விவரித்து இது தொடர்பான மொத்த விவரத்தையும் அள்ளி வைக்கிறார். ஒரு சம்பவத்தில் இருந்து எதையும் விவரித்துக்கொண்டே செல்வது போன்ற பாணியில் எளிமையாக கட்டுரைகளை எழுதி உள்ளார். மது,

நீட் தேர்வுகள், ஐடி துறை போன்ற தலைப்புகளிலும் முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

அமேசான் காடும் சில பேரழகிகளும்,

விநாயக முருகன், வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,

எண் 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், சென்னை 20& பேச: 044&48586727 விலை: ரூ.175

முன்னோடி பதிப்பாளர்

சாகித்ய அகாடமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் முல்லை முத்தையா பற்றிய நூலை வெளியிட்டுள்ளது. பாரதிதாசனின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே முல்லை என்ற பதிப்பகம் தொடங்கிய இவர், தமிழில் மிக முக்கியமான நூல்களை எல்லாம் வெளியிட்டுள்ள முன்னோடி ஆவார். இவர் எழுதிய பாரதியார் பெருமை நூல்தான் தமக்கு பாரதியின் படைப்புகளை தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிடுவதற்கு முன்மாதிரியாக இருந்ததாக சீனி.விசுவநாதன் பாராட்டி இருக்கிறார். ஏராளமான முக்கியமான வெளிநாட்டு இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். டால்ஸ்டாய், தஸ்தவெயேஸ்கி, எமிலிஜோலா போன்ற பலரின் உலகப்புகழ்பெற்ற நாவல்களின் சுருக்கத்தை அழகாக தமிழில் பதிப்பித்துள்ளதுடன் எம்.எஸ்.உதயமூர்த்தியை தமிழில் சுயமுன்னேற்ற நூல் எழுதச் செய்ததும் இவரே. ராஜாஜி, சொக்கலிங்கம், தமிழ் ஒளி போன்ற பல முக்கியமானவர்களின் நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார். இதுபோன்ற பல செய்திகள் அடங்கிய இந்நூலை எழுதி இருப்பவர், முல்லை மு.பழநியப்பன். நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஆளுமைகளுள் ஒருவர் முல்லை முத்தையா.

இந்திய இலக்கிய சிற்பிகள், முல்லை முத்தையா, முல்லை மு.பழநியப்பன், சாகித்ய அகாடமி&

சென்னை, குணா வளாகம், 443, இரண்டாம் தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை -18 பேச: 044&24311741. விலை ரூ.50

பாரதக் கதைகள்

மகாபாரதத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் காலம்தோறும்  மீள்வாசிப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உரையாடல்களில், கதையாடல்களில் புழங்கும் இவை தற்காலத்தில் நாவல்களாக சிறுகதைகளாக கவிதைகளாக மீளுயிர் பெறுகின்றன. காலத்துக்கு ஏற்ப, நீதியின் பெயரால் அவை கேள்விக்குள்ளாகின்றன. பெண்ணிய நோக்கில் பாஞ்சாலி, காந்தாரி, துச்சலை, பானுமதி ஆகியோர் உயிர்பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். கர்ணன் எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறான். அர்ஜுனனை வசைபாடுவது சகஜமாக உள்ளது. பீமன் மீது கனிவு காட்டுகிறார்கள். கடந்த மற்றும் இந்த தலைமுறையைச் சேர்ந்த 16 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.  பானு மதிக்கும் கர்ணனுக்குமான உறவுச் சிக்கலை முன்வைக்கும் கரிச்சான் குஞ்சு, தர்மனோடு பகடை ஆடி வெல்லும் திரௌபதியின் நுட்பமான உணர்வை முன்வைக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அபிமன்யூவின் பிறவிதோறும் பின் தொடரும் சஞ்சலத்தை உடைக்கத்துடிக்கும் தாயான சுபத்திரையின் துடிப்பை முன் வைக்கும் ஜெயமோகன் என சொல்லிக்கொண்டே போகலாம். மகாபாரதம் மானுடப் பரப்பில் எழுந்து எழுந்து வீழ்ந்துகொண்டிருக்கும் எண்ணிலடங்கா உணர்வு அலைகளைப் பிரதிபலித்துக்கொண்டே இருப்பது. இக்கதைகளும் அவ்வாறே.

பத்மவியூகம், மகாபாரதம் குறித்த மீள்வாசிப்புச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்,  வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், 235, பி-பிளாக், எம்எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம், சென்னை&106 பேச: 93828 53646 விலை ரூ. 200

காலத்தின் பதிவுகள்

திரைப்பட இயக்குநரும் மேடைப்பேச்சாளருமான ராசி அழகப்பன் எழுதிய சிறுகதை நூல் இது. வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் இதழில் பணிபுரிந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. 1982&இல் இவை நூலாக்கம் பெற்று வெளிவந்துள்ளன. இப்போது நாற்பதாண்டு இடைவெளியில் மீண்டும் நூலாக தவழ்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் ஜெயகாந்தன் போன்றோர் தீவிரமாக எழுதிவந்த காலத்தில் வெளிவந்த கதைகள் இவை. இடதுசாரி மனப்பாங்கில் வறுமையையும் மனித உறவுகளையும் பார்த்த ஓர் இளைஞரின் கதைகள் இப்படித்தான் இருந்திருக்க முடியும். அன்றைய சமூகச் சூழலின் ஆவணமாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

உதாரணமாக ஆத்மா என்ற இளைஞனை வீட்டின் எதிர்ப்பை மீறி சொப்னா என்ற பெண் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுக்கும் கதை. இக்கதை எழுதப்பட்ட சூழலில் ஒரு பெண் தன் வாழ்வைத் தானே தீர்மானிப்பது பெரும் புரட்சியாகக் கருதப்பட்டிருக்கும். அன்றைய கால

கட்ட பத்திரிகைக் கதைகளில் இந்த கருவைச் சுமக்கும் பதிவுகள் மிகக்குறைவாகவே இருந்திருக்கும். லட்சியவாதம், சமூக அக்கறை, சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு போன்றவற்றை முன்வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை காலத்தின் ஆவணமாக வாசித்து ரசிக்கலாம்.

கதவைத் திற காற்றுவரட்டும், ராசி அழகப்பன்,

பரிதி பதிப்பகம், 56சி/128, பாரதகோவில் அருகில்,ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் 635851. பேச: 7200693200 விலை ரூ.100

மே 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com