'கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் 2024 ஆண்டுக்கான இயல் விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த விருது இனி 'அ. முத்துலிங்கம் இயல் விருது' என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் நிறுவனரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 25 ஆண்டுகளாக இதற்கு உழைத்துவந்ததாகவும் இந்த ஆண்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்கிற அமைப்பானது கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு டொரண்டோவில் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை உலகமெங்கும் பரந்து பரவியிருக்கும் தமிழை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியப் பணியாற்றும் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டு வருகிறது. இயல் விருது எனும் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, பாராட்டுகளுடன் 2400 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது.
புனைவு, அல்புனைவு, கவிதை, தமிழ் தகவல் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் இந்தப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 'கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது 2024 ' வழங்கும் விழா அக்டோபர் நான்காம் தேதி டொரண்டோ ஜேசிஸ் பேன்கட் மற்றும் கன்வென்ஷன் சென்டர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஜோனிட்டா நாதன், மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினை சச்சிதானந்தன் சுகிர்த ராஜா மற்றும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் இருவரும் பெற்றார்கள்.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா இலங்கையில் பிறந்து உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்று 30 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறார். பெர்மிங் காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து இப்போது தகைசால் ஓய்வு நிலைப் பேராசிரியராக இருக்கிறார். தமிழ், ஆங்கிலத்தில் கதைகள் கட்டுரைகள் என்று இவர் எழுதி 20 க்கும் மேற்பட்ட நூல்களும் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. 2024 ஆண்டுக்கான இயல் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
நவீன தமிழ் இலக்கியத்தில் 90களில் உருவான புதுபிரக்ஞையின் அடையாளங்களில் ஒருவர் யுவன் சந்திரசேகர். பின்நவீனத்துவம் என்று அழைக்கப்பட்ட புதிய நடைமுறையில் தனித்துவமான எழுத்து வகைமைகளை உருவாக்கியவர். மீண்டு வந்த இயல்பு வாத ஆக்கங்களுக்கும் நவீனத்தைக் கடந்த சொல்லாடல் களுக்கும் அப்பாற்பட்ட புனைவு முறையை முன்வைத்தவர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாரத ஸ்டேட் வங்கியில் நீண்ட காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். 35 ஆண்டுகளாக எழுதி வரும் இவரது புனைவுகள், அறியப்படும் ஒன்றின் பின்னால் உள்ள அறியப்படாத உண்மையையும் உணர்வையும் கண்டடைபவை. தனது புனைவு முறையை மாற்று மெய்மை என்று குறிப்பிடுகிறார்.
பயணக்கதை ,வெளியேற்றம், குள்ள சித்தன் சரித்திரம், எதிர்க்கரை போன்ற நாவல்கள் இவர் புகழ் பேசுபவை. கானல் நதி, நினைவுதிர்காலம் ,ஆறு தாரகைகள் போன்ற நாவல்கள் இசைப் பின்னணி கொண்டவை. உலகில் கவனம் பெற்ற சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். வாழ்நாள் சாதனைக்குரிய இயல் விருதை இவர் பெற்றார்.
புனைவுக்கான விருதை 'பம்பாய் சைக்கிள்' புனைவுக்காக ரவி அருணாச்சலம், அல்புனைவு பிரிவில் 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்' நூலுக்காக த. பிச்சாண்டி, கவிதைக்கான விருதினை 'அருகிருக்கும் தனியன்' நூலுக்காக ரவி சுப்பிரமணியன், 'நிலங்களின் வாசம்' நூலுக்காக றியாஸா எம்.ஜவாஹிர் , மொழிபெயர்ப்பு விருதினை 'பிரிசன் ஆப் ட்ரீம்ஸ்' ஐந்து பாகங்கள் கொண்ட படைப்புக்காக நீத்ரா ரொட்ரிகோ ஆகியோரும் பெற்றார்கள்.
வசந்த காலத்தில் இருந்து குளிர்காலத்துக்குள் நுழையும் ஒரு தட்பவெப்ப சூழ்நிலையில் இந்த இலக்கிய விழா தொடங்கியது.
விழாவைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலர் சந்திரகாந்தன் தொடங்கி வைத்தார்.
சந்திரகாந்தன் பேசும்போது, " 2001ஆண்டு டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஒரு மண்டபத்தில் ஒரு சிறிய நிகழ்வாகத் தொடங்கப்பட்டது தான் இந்த தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பு இன்று வளர்ச்சி பெற்று விழா எடுக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து இவ்விழாவில் பலர் வந்து பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் . இந்த நேரத்தில் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களை அன்போடு நினைவு கூர்கின்றோம். அவருடைய சிந்தனையிலே தான் இந்த தமிழ் இலக்கியத் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்து நாம் தமிழ் இலக்கியத்தில் கவிதைகள், கட்டுரைகள், நாவல் இலக்கியங்கள் போன்றவற்றில் பாரிய பங்களிப்புகளைச் செய்பவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். அவர்களை முன்னோடிகளாகவும் மூத்த வழிகாட்டிகளாகவும் மற்றவர்களுக்கு விளங்க வேண்டும் என்று எண்ணத்தோடு அவர்களை இனம் கண்டு அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்குகின்ற நிகழ்வாக இது தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பலரும் அதனுடைய காரணிகளாக விளங்குகிறார்கள்." என்றார்.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலரும் பிரபல வழக்கறிஞருமான மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, "தமிழ் இலக்கியத் தோட்டம் சின்ன தோட்டமாக ஆரம்பித்து 25 வருடங்களாக வளர்ந்து இன்று பிரம்மாண்டமான விருட்சங்களைக் கொண்ட தோட்டமாகக் காட்சியளிக்கிறது. இதை எண்ணும் பொழுது மனம் புளகாங்கிதம் அடைகிறது. இன்று உங்கள் முன் ஒரு முக்கியமான, எங்கள் நிர்வாக சபை ஏக மனதாக ஏற்றுக் கொண்ட ஒரு தீர்மானத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
எங்களுடைய ஸ்தாபகரும் இந்த அமைப்புக்காக 25 வருடங்களாக அரும்பாடு பட்டுத் தனது பெரும்பான்மையான நேரத்தை அர்ப்பணித்து இதை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் அ. முத்துலிங்கம் அவர்கள் . இனிமேல் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, 'அ. முத்துலிங்கம் இயல் விருது' என்று அழைக்கப்படும் என்பதை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து விருதளிப்பு விழா வைபவங்கள் அரங்கேறத் தொடங்கின.
முதலில் புனைவு விருது ரவி அருணாசலத்துக்கு அவரது 'பம்பாய் சைக்கிள்' புனைவுக்காக வழங்கப்பட்டது. அவருக்கான தகுதி உரையை ஜனனி பிரஷாந்தன் வழங்கினார்.
விருதைப் பெற்றபின் ரவி அருணாச்சலம் பேசியபோது "எனக்கு எழுத்து வாசிப்பு அறிமுகமானது அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்பு மூலமாகத்தான். முதலில் அவரது அக்கா கதையைப் படித்தேன். அப்படி வளர்ந்த நான் எழுதிய எனது நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்தேன்" என்று குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் சொன்ன அறிவுரை
அல் புனைவு விருது 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்' நூலுக்காக த. பிச்சாண்டிக்கு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியுரையை மதுரா ஜெயபரன் வாசித்தார்.
விருதைப் பெற்றுக் கொண்ட பின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி த. பிச்சாண்டி பேசும்போது,
"கல்வி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு வளர்ந்தவன் நான் . வெளியே தெரியாது இருந்த என்னை எம்.ஜி.ஆர் தனது நேர்முக உதவியாளராக வைத்துக் கொண்டார். எனக்கு எம்ஜிஆருடன் பத்தாண்டு காலம் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆர் என்னிடம் கூறிய ஒன்றை என்னால் என்றுமே மறக்க முடியாது.
'உன்னிடம் ஒருவர் ஒரு கோரிக்கையோடு வரும்பொழுது அதனை உனது நிலையில் இருந்து பார்க்காதே. உன்னை அவர் நிலைக்குக் கொண்டு சென்று சிறிது நேரம் அவர் பிரச்சினையின் உண்மையை எண்ணிப்பார். அவரது கோரிக்கையில் உள்ள நியாயங்கள் அப்போது உனக்கு புலப்படும். அதன் பின்பு உன்னிடத்தில் திரும்ப வந்து அமர்ந்து அவரது கோரிக்கைக்குப் பதில் கொடு' என்று அவர் எனக்குச் சொன்ன அந்த அறிவுரை என் மனதில் ஆழப் பதிந்தது.
பிற்காலத்தில் நான் தமிழக அரசில் பல உயர் பதவிகளில் பணியாற்றிய பொழுது அந்த அறிவுரை எனக்கு மிகவும் பயன்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் அவர்களிடம் நான் கண்டு வியந்தவை, அவரது பிரமிக்கத்தக்க மனித நேயமும் தமிழ் மொழியின் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றும் ஆர்வமும் ஆகும். தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது ,அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்றது,அரசு கோப்புகள் அனைத்தும் தமிழில் தான் செயல்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது என்று அவர் தமிழ் வளர்ச்சிக்காக செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்" என்றார்.
முதன்மை விருந்தினராக இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒசாவா நாடாளுமன்றம் சென்ற முதல் கனடிய தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய ஜொனிட்டா நாதன் கலந்து கொண்டார்.
ஜொனிட்டா பேசும்போது, "தமிழ் இலக்கிய தோட்டம் கற்பனை, இலக்கியம், கவிதை ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை கொண்டாடுவதோடு விருதுகள் வழங்குதல், இளம் ஆய்வாளர்களை வளர்க்கும் கல்வி உதவித்தொகைகள், நாடகங்கள், சிந்தனையை தூண்டும் சொற்பொழிவுகள் போன்று பல்வேறு வழிகளில் தமிழ் இலக்கியக் கலையை உயர்த்தி வளர்த்து வருகிறது. இலக்கியம் என்பது வெறும் கலாச்சார செல்வம் அல்ல.
அது சமூகங்களையும் வரலாறுகளையும் தலை முறைகளையும் இணைக்கும் முக்கிய பாலம் என்பதை இந்த நிறுவனம் ஆழமாக உணர்த்தி வருகிறது. ஆசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் விமர்சகர்களாகவும் இவர்கள் அர்ப்பணிப்புடன் தமிழ் இலக்கியத்தை அளவிட முடியாத அளவுக்குச் செழிக்க செய்து வருகின்றனர். எண்ணற்ற வாசகர்களையும் ஆய்வாளர்களையும் இவர்கள் ஊக்குவித்துள்ளனர்" என்று பாராட்டினார்.
கவிதை விருதுகள் இருவருக்கு வழங்கப்பட்டது முதலில் ரவி சுப்பிரமணியன் 'அருகிருக்கும் தனியன்: படைப்புக்காகப் பெற்றார்.
அவருக்கான தகுதியுரையை வழங்கி அறிமுகம் செய்தார் ஜோதி ஜெயக்குமார். விருதினைப் பெற்றுக் கொண்டு கவிஞர் ரவி சுப்பிரமணியன் பேசும்போது, "மூலக்கருத்தின் மோனச் சிறையுள் முடமாய்க்கிடந்தேன்"என்கிற பாடலை ராகத்துடன் பாடியவர்,தொடர்ந்து பேசும்போது,
"இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள கனடா போன்ற நாட்டில் தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு அதன் உறுப்பினர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பான உழைப்போடு செய்திருக்கிற ஒட்டுமொத்த காரியங்களை அறிகின்ற போது மிகுந்த வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 25 வருடங்களாக 200 கலைஞர்களுக்கு மேல் விருதுகளும் கௌரவங்களும் அளித்த , அளிக்கிற, அளிக்கப் போகிற ஒரு அமைப்பாக மட்டுமல்லாமல் அரிய நூல்களுடைய மீள் பதிப்பு, மொழிபெயர்ப்பு, மாணவர்களுக்கான கல்வி பட்டறைகள், நூலகத்திற்கான நூல்கள், கூத்து இன்ன பிற கலைகள் என பரந்து விரிகின்றன இதன் பணிகள்" என்று தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
'நிலங்களின் வாசம்' என்ற கவிதைத் தொகுப்புக்காக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மற்றொரு கவிதை விருது றியாஸா எம்.ஜவாஹிருக்கு வழங்கப்பட்டது . அதற்கான தகுதியுரையை வழங்கி அறிமுகம் செய்தார் ஜனனி பிரஷாந்தன். றியாஸா வர இயலாததால் யாஸ்மின் புகாரி அவரது சார்பில் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு விருந்தினராக மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அவரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர்களின் ஒருவரான திருமூர்த்தி ரங்கநாதன் வரவேற்றார்.
பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் பேசும்போது,
"ஒரு காலத்தில் இந்தி சினிமா தான் இந்திய சினிமா வாக இருந்தது. அதற்குக் காரணம், அப்போது பிராந்திய சினிமாக்கள் பற்றி எழுதப்படவில்லை. தமிழ் சினிமா பற்றிப் போதிய ஆவணங்கள் இல்லை. அது பற்றி எழுத வேண்டும் என்று நான் நினைத்தேன். கடந்த நூற்றாண்டில் இந்தி சினிமாவில் எடுக்கப்பட்டவை 6600 திரைப்படங்கள் . தமிழில் 6000 படங்கள் எடுத்திருந்தார்கள். இரண்டு மொழிகளுக்கிடையே 600 படங்கள் தான் எண்ணிக்கையில் வித்தியாசம். ஆனால் பெரிதாக ஆவணங்கள் இல்லை. சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்று நாம் எழுதினால் ஏன், எப்படி என்று மேலை நாடுகளில் கேள்வி கேட்பார்கள். காரணம் அவர்களுக்குத் தெரியாது.
இப்படி நம் தமிழ் சினிமாக்கள் மேலை நாடுகளில் போய்ச் சேரவில்லை. அங்கெல்லாம் நமது திரைப்படங்களைக் கொண்டு சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
அதற்கு உதவும் வகையில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள்,இந்த தமிழ் இலக்கிய தோட்டத்தில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். அப்படி எனக்கு உதவினார்கள்"என்றார்.
கருடர்கள் பறந்தவானில் நானும் ஒரு ஈ!
2024 க்கான வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இரண்டு இயல் விருதுகள் வழங்கப்பட்டன . முதல் விருது சச்சிதானந்தன் சுகிர்த ராஜாவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கான தகுதி உரையை கவிஞர் பேராசிரியர் சேரன் வழங்கினார்.
கவிஞர் சேரன் பேசும்போது,
" நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்த போது அதன் இந்த ஆய்வின் அதிகாரர்களில் ஒருவராக கடமை ஆற்றிய பேராசிரியர் அருண் பிரபா அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூலைக் கொடுத்தார்.
அதில் உலகின் முன்னணி ஆய்வாளர்களின் கட்டுரைகள் இருந்தன. அந்த நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தேன் அதில் சுகிர்த ராஜாவின் பெயரும் இருந்தது. நான் வாசித்த முதலாவது கட்டுரை அவரது கட்டுரைதான். அந்தக் கட்டுரையின் மூலம் தான் எனக்கு அவர் அறிமுகமானார். இப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன் ''என்றார்.
விருதாளர் சச்சிதானந்தன் சுகிர்த ராஜா பேசும்போது,
"இப்போது உள்ள சமூக ஊடகங்களின் காலத்தில் இது மாதிரி கூட்டத்திற்கு வருவது என்பது மாபெரும் செயல் என்று சொல்ல வேண்டும். உங்களையெல்லாம் பார்க்கும் போது இந்தக் காலத்தில் யார் உங்கள் சிறந்த நண்பன் என்றால், உங்கள் இலக்கிய உரையைக் கேட்பதற்கு வந்த நண்பன் தான் சிறந்த நண்பன் என்று சொல்ல வேண்டும்.
இந்த விருது கிடைத்தது பற்றி என்ன சொல்ல முடியும்? பெர்மிங் காம் பல்கலைக்கழகத்தில் படித்த கார்த்திகேசு சிவத்தம்பி கூறியதைத்தான் நானும் சொல்ல முடியும் . தமிழக அரசு விருது கொடுத்த போது, ''சுவாமி விபுலானந்தர் ,சி.வை. தாமோதரப்பிள்ளை, நண்பன் கைலாசபதி போன்ற கருடர்கள் பறந்த வானில் நானும் ஒரு ஈயாகப் பறக்கிறேன் "என்றார்.நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இப்போது நானும் என்னை ஒரு ஈயாகத் தான் உணர்கிறேன்.இது அவையடக்கம் அல்ல .உண்மை" என்றார்.
மொழிபெயர்ப்பாளருக்கான விருது எழுத்தாளர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட நீத்ரா ரொட்ரிகோவுக்கு வழங்கப்பட்டது. அவர் தமிழ்ச் சமூக மையம் உருவாக்கத்திற்கான ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
நீத்ரா ரொட்ரிகோ பேசும் போது, இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது, உண்மையிலேயே தான் கௌரவிக்கப்பட்டதாக உணர்வதாகக் கூறினார்.
அடுத்து வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நவீன தமிழ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது.
அவருக்கான தகுதி உரையை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஆஸ்டின் செளந்தர் வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட யுவன் சந்திரசேகர் பேசும்போது,
"2011 ஆம் ஆண்டு என்னுடைய 'பயணக் கதை' என்கிற நாவலுக்கு புனைவுக்கான இலக்கியத் தோட்டம் விருது கொடுத்தார்கள். அப்போதும் சரி இப்போதும் சரி முத்துலிங்கம் சார்தான் அழைத்து தகவல் கூறினார். நான் பிறவி எழுத்தாளன் இல்லை. திட்டமிட்டு எழுத்தாளர் ஆனவனும் கிடையாது. தற்செயலாக எழுத்தாளன் ஆனவன்.
நான் எழுத வந்தபோது பத்து வருஷம் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன்.கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் மற்றவற்றை எழுத வந்தது ஒரு தற்செயல் நிகழ்வு தான்" என்றவர்,விருதைத் தனது மனைவிக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறினார்.
நிறைவாக எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பேசும் போது,
"இந்த விழா நடைபெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு அளித்த என் மகள் வைதேகி, மகன் சஞ்சயன், பேரப்பிள்ளைகள் அப்சரா, சஹானா மற்றும் என் மனைவி ஆகியோருக்கு என் நன்றி. இதை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து போன் வரும் போதெல்லாம் நெஞ்சு படக் படக் என்று துடிக்கும். ஏனென்றால் இரண்டு மணி நேரம் விசாவுக்காக இழுத்து அடிக்கிறார்கள் என்பார்கள். விழா நாளைக்கு எத்தனை மணிக்கு ? என்று இன்னொரு கால் வரும். அந்தத் தோட்டம் எங்கே இருக்கிறது? என்று சிலர் கேட்பார்கள் இதைவிட இன்னொரு பெண் தொலைபேசியில் அழைத்து போன முறை ஆல்பத்தைப் பார்த்து நான் என்ன ஜாதி? என்ன கலர் ?என்று சொல்லுங்கள் என்பார்.இப்படியான கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து தான் இதை நடத்திக் கொண்டு வருகிறோம்.எல்லோருடைய ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.
இத்தோடு 25 ஆண்டுகள் முடிந்து விட்டன. 25 ஆண்டுகள் என்றால் ஒரு மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு. அதை நான் இதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.இந்த ஆண்டிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.அதைத்தொடர்ந்து நடத்த நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதுவரை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதினை சுந்தர ராமசாமி, கே.கணேஸ்,வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ் ரோம்,அம்பை,கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை,எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன்,டொமினிக் ஜீவா தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், இ.மயூரநாதன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.ரா.வெங்கடாசலபதி,பாவண்ணன் , லெ.முருக பூபதி,ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவில் விழாவுக்கு பெரிதும் ஒத்துழைப்பும் கொடைகளும் வழங்கிய அனுசரணையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மேடைக்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டனர். இரவு உணவுக்குப் பின் விழா இனிதே நிறைவடைந்தது.
எந்த நிகழ்வும் விடுபடவில்லை, யாருடைய பெயரும் மறந்துவிடவில்லை. அவரவருக்கான சிறப்புகளை நேர்த்தியாகச் செய்து முடித்தார்கள்.
பொதுவாகப் பெரும்பாலான இலக்கிய விழாக்களில் காணப்படும் திட்டமிடுதல் குறைபாடுகள் துளியும் இல்லாமல் விழா,குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிந்தது நிகழ்ச்சி வடிவமைப்பின் சீர்மையை வெளிப்படுத்தியது.
இவ்விழாவில் அமெரிக்கா மிச்சிகனிலிருந்து லக்ஷ்மண் தசரதன் , பாஸ்டனிலிருந்து பாஸ்டன் பாலா, வித்யா பாலா, கனடாவில் தூரத்தில் இருந்து ராமன் சிதம்பரம் , வெங்கட் ப்ரஸாத், நியூ ஜெர்சியிலிருந்து கம்பராமாயணம் புகழ் பரப்பும் பழனி ஜோதி , மகேஷ்வரி, அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ஆஸ்டின் சௌந்தர், ராதா சௌந்தர், (அங்கேயும் விஷ்ணுபுரமா?) கனடாவில் இருக்கும் யுவன் சந்திரசேகரின் மகன் அரவிந்த் குடும்பத்தினர், உள்ளூர் இலக்கிய ஆர்வலர்கள் இந்துமதி,டொசதீஸ் ஆகியோரும் வந்து கலந்து கொண்டனர்.