தமிழ் இலக்கியத்தை உலகளாவிய தளத்தில் முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான அமைப்புகளில் கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் தனிச்சிறப்பு பெற்றது. ரொறொன்ரோவில் 2001ஆம் ஆண்டு அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நோக்கம், தமிழில் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு, நூல் வெளியீடு, கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதுடன், உலகெங்கும் தமிழுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிப்பதாகும்.
இதன் மிக முக்கியமான அடையாளம் ‘இயல் விருது’. ஆண்டுதோறும் ஒரு எழுத்தாளர், ஆய்வாளர், விமர்சகர், பதிப்பாளர் அல்லது தமிழாய்வுக்கு நீண்டகாலச் சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது இது. 2001ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி முதல் விருதைப் பெற்றார். தொடர்ந்து இலங்கையின் கே. கணேஷ், இந்தியாவின் வெங்கட் சாமிநாதன், பதிப்பாளர் பத்மநாப ஐயர், பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட், மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம், எழுத்தாளர் அம்பை, இடதுசாரி விமர்சகர் கோவை ஞானி, ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், வண்ணதாசன், இமையம், சு. வெங்கடேசன், ஆ.இரா. வேங்கடாசலபதி, பாவண்ணன், சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் போன்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழுலகிலிருந்து டொமினிக் ஜீவா, மயூரநாதன், எஸ். பொன்னுத்துரை, எல். முருகபூபதி போன்றோரும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
இந்தப் பட்டியல், இந்தியத் தமிழ் இலக்கியத்தையும் ஈழத் தமிழ் இலக்கியத்தையும் கனடாத் தமிழ் அனுபவத்தையும் ஒரே இலக்கியப் பரப்பில் இணைத்துக் காட்டுகிறது. குறிப்பாக, சாகித்ய அகாதெமி விருது பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அதன் இலக்கிய மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.சாகித்ய அகாதெமி விருதாளர்களான நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், இமையம், அம்பை, அசோகமித்ரன், வண்ணதாசன், பிரபஞ்சன், சு. வெங்கடேசன், ஆ.இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட படைப்பாளிகளின் எழுத்துப் பயணத்துடன் இயல் விருதும் இணைகிறது.
இயல் விருதுக்கு அப்பால் புனைவு, புனைவிலி, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக புனைவிலி விருதுப் பட்டியல் தமிழ் அறிவுலகின் பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. நாஞ்சில் நாடனின் கம்பராமாயண ஆர்வத்துக்குக் கட்டியம் கூறும் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை', உலகத் தமிழர் குறித்த சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றான முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர், இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முதன்மையான நூலான ந. சுப்பிரமணியத்தின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், தியோடர் பாஸ்கரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, பெருமாள் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம், சங்ககாலத் தமிழகத்தை சமகாலத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் பிரபஞ்சனின் 'தாழப் பறக்காத பரத்தையர் கொடி', அசோகமித்திரனின் அனுபவப் பகிர்வான குறுக்கு வெட்டுக்கள், மிஸ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மு. ஜெயராணியின் ஜாதியற்றவளின் குரல், நீதியரசர் கே. சந்துருவின் தன்வரலாற்று நூலான நானும் நீதிபதி ஆனேன் ஆகியவை வெவ்வேறு அறிவுத்தளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும் இத்தோட்டம் அளித்துள்ள அங்கீகாரம் குறிப்பிடத்தக்கது. ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம், வன்னி யுத்தம், நினைவு நல்லது போன்ற நூல்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாறு, போர், நினைவு, புலப்பெயர்வு மற்றும் இலக்கியப் பரிணாமத்தைப் பதிவு செய்கின்றன. கண்டி வீரன், அதிரை, நடுகல் போன்ற புனைவு விருதுப் படைப்புகளும் ஈழத் தமிழரின் சமகால அனுபவங்களை உலகத் தமிழ் வாசகர்களிடம் கொண்டு செல்கின்றன.
கனடாத் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் இந்த விருதுகள் பதிவு செய்கின்றன. பேராசிரியர் ஈ. பாலசுந்தரத்தின் கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும் கனடாவில் தமிழர்கள் உருவாக்கிய சமூக, கல்வி, பண்பாட்டு வளத்தை ஆவணப்படுத்தும் முக்கியமான நூலாகும். அதேபோல், தமிழ் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடனான இலக்கிய நிகழ்வுகள், அடுத்த தலைமுறையையும் இந்தப் பணியுடன் இணைக்கின்றன.
2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் 2026ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பெற்றுள்ளார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் புகழ்மிக்க தமிழ் எழுத்தாளருமான அ. முத்துலிங்கத்தின் பெயரால் இந்த ஆண்டு முதல் இயல்விருது வழங்கப்படவுள்ளது.புனைவில் பா. திருச்செந்தாழையின் 'நெருப்பில் வளர்பவை' இடம்பெற்றுள்ளது. புனைவிலியில் தூக்கு செல்வத்தின் 'ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்', தூக்க கைதியாக இருந்து பின் ஆயுள்கைதி ய செல்வத்தின் சிறை அனுபவங்களின் பகிர்வு ஆகும். புனைவிலி விருது பெறும் மற்றொரு நூலான சங்கர சரவணனின் வைகறை வாசகன் பதிவுகள் விகடன் பிரசுரத்தின் வெளியீடாகும். வாசிப்பு வழிகாட்டல், இலக்கியம், அறிவு, சமூக அனுபவம் ஆகியவற்றை இணைக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.கவிதையில் கருணாகரன் சிவராசா, மொழிபெயர்ப்பில் கீதா சுகுமாரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
25 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், இனி இயல் விருது ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ என அழைக்கப்படுவது, அதன் நிறுவனரின் நீண்டகாலப் பங்களிப்புக்கான பொருத்தமான அங்கீகாரமாகும்.
இவ்வாறு 2001 முதல் இன்றுவரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பயணம் ஒரு விருது வழங்கும் அமைப்பின் வரலாறு மட்டுமல்ல. இந்தியா, இலங்கை, கனடா மற்றும் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களின் படைப்பாற்றல், வரலாறு, நினைவு, அறிவு ஆகியவற்றை ஒரே இலக்கியக் குடும்பமாக இணைத்துச் செல்லும் பண்பாட்டுப் பாலத்தின் வரலாறாகும்.