அந்த வானத்தைப் போல...
ஓவியம்: ரவி பேலட்

அந்த வானத்தைப் போல...

விஜயகாந்த் சாரை விட நல்ல நடிகர்கள்  இருக்கலாம். விஜயகாந்த் சாரை விட நல்ல அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால்  அவரைவிட நல்ல மனிதரை நான் கண்டதே இல்லை' - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

இந்த அஞ்சலிப் பதிவை எங்கிருந்து எப்படி தொடங்குவதென்றே தெரியவில்லை. நடிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான பழக்க வழக்கம் நபருக்கு நபர் மாறுபடும். அறிமுக காலத்தில் நாம் பெயர் சொல்லி அழைக்கும் சிலரை அவர்கள் வளர்ந்த உடன் ‘சார்' போட்டு அழைக்க வேண்டிவரும். இன்னும் சிலருக்கு ஸ்டார் அந்தஸ்து வந்தவுடன் ஞாபகமறதி வந்துவிடும். பத்திரிகையாளர் பெயர் மட்டுமல்ல... அவரது முகமே அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகிவிடும். இவர்களுக்கு மத்தியில் பழசை எப்போதும் மறவாத தனித்த குணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்தில் இருந்தபோது கூட தனது வயதையொத்த சில பத்திரிகையாளர்களை வாஞ்சியுடன் ‘எப்பிடிரா இருக்கே?' என்று கேட்பதும் பதிலுக்கு அவர், ‘நல்லாருக்கேன் விஜி' என்று ஒருமையில் பதில் சொல்வதும் மிக இயல்பாக நிகழும்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் உடல் நலம் குன்றி தெரிந்த மனிதர்கள் நினைவிலிருந்து அழிந்துபோகத் தொடங்குவதற்கு முன்னர்வரை, போன் செய்து அப்பாயின்மென்ட் வாங்கிக்கொள்ளாமல் அவர் இருக்கும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக்கொள்ளமுடியும். அந்த சந்திப்பில் அவருடன் உணவு அருந்தாமல் நீங்கள் தப்பிச் செல்லவே முடியாது. அப்படி செல்ல முயன்றால் செல்லக்கோபத்துடன் அர்ச்சனை நடக்கும்.

அவரது இந்த விருந்தோம்பலைத்தான் இன்று சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிற பலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் அவரை எம்.ஜி. ஆரோடு ஒப்பிட்டு ‘கருப்பு எம்.ஜி.ஆர்' என்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் இந்த உணவு உபசரிப்பு குணத்தில் எம்.ஜி.ஆருக்கும் மேலே என்றுதான் நான் சொல்வேன். அதுகுறித்து இறுதியில் பேசுவோம்.

இந்த ‘2கே' குழந்தைகளுக்காக  விஜயகாந்தின் முன்கதை சுருக்கம் கொஞ்சமும் சொல்லிவிடலாம்.

'79 இல் எம்.ஏ. காஜா இயக்கத்தில் ‘இனிக்கும் இளமை' படத்தில் விஜயகாந்த் என்ற பெயரில் அறிமுகமாகிறார் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. பத்தாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை. அப்பா பார்த்துக்கொள்ளச் சொன்ன ரைஸ்மில் உத்தியோகம் ஒத்துவரவில்லை என்று சென்னை ஓடி வந்து பல கம்பெனிகளில் ஏறி இறங்கி, ‘உம் மூஞ்சிய கண்ணாடியில பார்த்ததில்லையா?'என்று நூற்றுக்கணக்கில் அவமானப்பட்டு கிடைத்த வாய்ப்பு. படம் படு சுமார். அடுத்து ‘ அகல்விளக்கு', ‘நீரோட்டம்', ‘சாமந்திப் பூ' என்று கிடைக்கிற படங்களெல்லாம் ஃப்ளாப் ஆன நிலையில் ‘தூரத்து இடி முழக்கம்' ‘யார்ரா இந்த கருவாப் பையன்?' என்று திரையுலகினரைப் பேச வைக்கிறது.

ஆனால் இந்த இடத்தில் ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொள்கிறார் விஜயகாந்த். அவருக்கு கதை சொல்லி படம் இயக்க இயக்குநர்கள் முன் வருகிறார்கள். தயாரிப்பாளர்களும் தயார்தான். ஆனால் நட்ப்பில் மார்க்கெட்டில் இருக்கிற அத்தனை நடிகைகளுமே, காரணமே சொல்லாமல் ‘அவர் கூட நான் நடிக்கமாட்டேன்' என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

இது குறித்து ஒரு சினிமா இதழுக்கு இப்படி பேட்டி தந்திருக்கிறார் விஜயகாந்த்... ‘‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை'ன்னு

சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூடநடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!

விஜயகாந்த்
விஜயகாந்த்

இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதைவிட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்' என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது.  பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?''

அடுத்த 85ஆம் ஆண்டில் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் ‘அலை ஓசை' படம் வருகிறது. ராஜாவின் இசையில் ஒலித்த ‘போராடடா ஒரு வாளேந்தடா... வேங்கைகளோ இனி தூங்காதடா' பாடல் விஜயகாந்தை, தமிழகம் முழுக்க மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் கோபக்கார இளைஞனாய் கொண்டு செல்கிறது. கமல், ரஜினி என்கிற இரு ஸ்டார்களுக்கு மத்தியில் இன்னொரு அசைக்க முடியாத ஸ்டாராய் வளர்ந்துவிடுகிறார் விஜயகாந்த்.

பெரிய நிறுவனங்கள் தேவையில்லை. ஹிட் கொடுத்த டைரக்டர்கள் தேவையில்லை. சம்பளத்துக்காக நல்ல கதைகளைத் தவறவிடுவதில்லை. நம்பர் ஒன் நாயகிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை என்று ஏழை ஜாதி ஹீரோவாக, 100 நாள் படங்கள் பல கண்டு, தொடர்ந்து மகுடம் சூட்டிக்கொள்கிறார் விஜயகாந்த்.

இந்த நேரத்தில் ‘ஊமை விழிகள்' படத்தின் மூலம் அவரே நிகழ்த்திக்கொண்ட அற்புதம்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் கைக்கோத்துக்கொண்டது. அதற்கு முன்னர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்பவர்கள் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வேலைக்கு ஆகாதவர்கள். டாகுமென்டரி படங்கள் செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்கிற பிம்பமே இருந்தது. விஜயகாந்த் அவர்களுடன் கைகோர்த்து அவர்களுக்கும் தனக்குமாய் சேர்த்து ஒரு பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டார்.ஆபாவாணனைத் தொடர்ந்து ஆர்.கே.செல்வமணி வந்தார். ‘கேப்டன் பிரபாகரன்' கொடுத்த அபார வெற்றியால் கேப்டன் ஆகவே ஆனார். அடுத்து ஆர்.வி.உதயகுமார், ஹானஸ்ட்ராஜ் ரவி என்று திரையுலகமே திரைப்பட கல்லூரி மாணவர்கள் வசமானது.

குக்கிராமத்து மனிதர்கள் பலர் எப்படி இளையராஜாவால் பெரும் தயாரிப்பாளானார்களோ அப்படியே விஜயகாந்தும் எளிமையான மனிதர்களைத் தயாரிப்பாளர்களாக்கினார். பேசின  சம்பளம் தரமுடியாத பல தயாரிப்பாளர்களுக்கு தானே உதவி படங்களை ரிலீஸ் செய்துகொடுத்தார். விஜயகாந்தின் அந்த வளர்ச்சியில் தோளோடு தோள் கொடுத்து நின்றவர் அவரது உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

சக கலைஞர்களுக்கு உதவி செய்வதில், அவர்களை நேசிப்பதில் ஈடு இணையற்ற மனிதர்களாயிருந்தனர் அவர்கள் இருவரும். தனக்குத் தெரிந்த, தன்னிடம் உதவி கேட்டு வரும் டெக்னீஷியன்களுக்கு, அவர்களது வாரிசுகளுக்கு செய்த உதவிகள் எண்ணில்  அடங்காதவை. தனது இரங்கல் பதிவில் ‘எனது மகளின் படிப்புக்கு உதவி அவரை டாக்டராக்கியவர்' என்று தனுஷ், செல்வராகவனின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா நெகிழ்ந்திருக்கிறாரே... அப்படி எத்தனையோ ஏழை, எளிய ராஜாக்களுக்கு உதவியவர் விஜய்காந்த். ‘மக கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கணும்னு சொன்னேன். நாளைக்கு ஷýட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து குடுன்னு கேப்டன் சொன்னாரு. ஒரு மஞ்சப்பையில போட்டு ரெண்டு லட்சம் கொடுத்தார் மவராசன்' என்று கண்ணீர் ததும்ப பலபேர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். இவரிடம் நீண்டகாலம் பணியாற்றிய சாதாரண தொழிலாளர்கள் பிள்ளைகளில் பலர் டாக்டர்கள், எஞ்சினியர்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோன்ற ஒரு குணம்தான் முன்பே சொன்ன விஜயகாந்தின் விருந்தோம்பல். இவரது வீடு, அலுவலகம், படப்பிடிப்பு தளம் என்று எங்கே இவரை சந்திக்கச் சென்றாலும் உணவு அருந்தாமல் தப்பிச் செல்ல முடியாது. அந்த விசயத்தில் அதை முரட்டு உபசரிப்பு என்று சொன்னாலும் தப்பில்லை.

விஜயகாந்தின் ஆரம்பகால  படங்களில் ஒன்று ‘அகல் விளக்கு'. அதில் ஷோபா நாயகி. ஷோபாவும் பரபரப்பாக இருந்த காலகட்டம். விஜயகாந்த் காலையில் சாப்பிடவில்லை.  மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரவில்லை. பசி பொறுக்காமல் மதியம் சாப்பிட உட்கார்ந்தார். உடனே ஷோபா வந்துவிட, பாதிசாப்பாட்டில் எழுப்பிக் கொண்டு சென்றார்கள்.  ஒருவேளை இந்த சம்பவம் அவர் விருந்தோம்பலில் கவனம் செலுத்த காரணமாக இருந்திருக்கலாம்.

இதில் இன்னொரு உன்னதம் யாருக்கும் பாகுபாடு பார்க்காத விருந்தோம்பல். பொதுவாக படப்பிடிப்புகளில் பல்வேறு நிலைகள் கடைப்பிடிக்கப்படும். தயாரிப்பாளர், இயக்குநர், ஸ்டார் அந்தஸ்து நடிகர் களுக்கு ஒருவிதமாகவும், அடுத்தகட்ட நடிகர்கள் டெக்னீஷியன்களுக்கு இன்னொரு விதமாகவும் மூன்றாம் நிலை தொழிலாளர்களுக்கு வேறொரு விதமாகவும் உணவு பரிமாறப்படும். அந்தமுறையை அதுபோலவே எட்டிமிதித்து உடைத்தார் விஜயகாந்த். இதனால்தான் இவரை எம்.ஜி.ஆருக்கும் மேலே என்று சொன்னேன். இந்த அரிய குணத்துக்காகவே தமிழ் சினிமா இவரது நினைவை எப்போதும் நெகிழ்வுடன் சுமந்துகொண்டிருக்கும்.

விஜயகாந்த் படப்பிடிப்பொன்றில் இளவரசு
விஜயகாந்த் படப்பிடிப்பொன்றில் இளவரசு

என்றும் மாறாத மனிதர்!

 -நடிகர் இளவரசு

பத்தாம் வகுப்பில் கணக்கில் பெயில் ஆகி 1978-79 இல் மதுரையில் டுடோரியல் படிச்சுட்டு இருந்தேன். பக்கத்தில் ஜீவா படிப்பகம்னு ஒண்ணு இருக்கும். வகுப்பு முடிந்ததும் அங்கே போய் உட்கார்ந்து இருப்போம். அதற்கு எதிர்த்தமாதிரி ஒரு பள்ளிவாசல்.

அங்கே குழந்தைகளுக்கு மந்திரிப்பதற்காக ஒரு கூட்டம் வந்துபோய்க்கொண்டிருக்கும். அந்த தெருவில் மாடியில் சேனா பிலிம்ஸ் என்று ஒரு விநியோகஸ்தர் அலுவலகம் இருந்தது. ரஜினி சாரின் சங்கர் சலீம் சைமன் என்ற படம் சிந்தாமணி திரையரங்கில் ரிலீஸ் ஆகி இருந்தது. எங்களுக்கு அந்த படத்துக்கு முன்கூட்டியே டிக்கெட் வாங்கிப் பார்க்கவேண்டும் என ஆசை. விநியோகஸ்தர் அலுவலகத்துக்குச் செல்லும் குறுகலான படிகளில் ஏறிச் சென்றோம். தவறிவிழுந்தால் பல் பெயர்ந்துவிடும் அப்படியொரு படி அமைப்பு. ஏறி மேலே போனதும் ஒரு உயரமாக, வேட்டி அணிந்த இளைஞர் வந்தார். என்ன வேணும் என்றார் கம்பீரமாக. ரஜினி படத்துக்கு டிக்கெட் என்றோம் தயக்கமாக..

 ‘ அதுக்கு ஏன் இங்கே வர்றீங்க? தியேட்டருக்குப் போங்க' என்றார் விரட்டாத குறையாக.  நாங்கள் ஓடிவந்துவிட்டோம்.

கீழே வந்து படிப்பகத்தில் அமர்ந்து இருந்தோம். பின்பு அந்த இளைஞரும் கூடவே ஒரு சிவப்பான ஆளும் அந்தப் பக்கமாக வந்தார்கள். எங்களைப் பார்த்ததும்,‘டே.. டிக்கெட் வேண்டும்னு கேட்டீல்ல..?' என்றார். ‘ ஆமாம்ணே' என்றோம். உடன் இருந்தவரிடம் ‘ஏற்பாடு பண்ணிக்கொடு' என்றார். முன்னே பின்னே என்னை அவருக்குத் தெரியாது. இருந்தாலும் அன்று அவர் செய்த உதவியால் அந்த படத்துக்குப் போய் விட்டு என் சகாக்களிடம் பெருமை அடித்துக்கொண்டதை மறக்க முடியாது. அந்த மனிதர் அன்று விஜயராஜ் என்று அறியப்பட்ட விஜயகாந்த். உடன் இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.

பின் சில காலம் கழித்து நான் சென்னைக்கு வந்து ஸ்டில்போட்டோகிராபர் ரவியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். இனிக்கும் இளமை படம் வெளியாகி விஜயகாந்த் முகம் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்திருந்தது. அப்போது சிவகாசியில் காலண்டர் கம்பெனிக்காரர்களுக்கு சினிமா நாயகர்கள் புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் 100 ரூபாய் தருவார்கள். ராஜாராணி பாண்டியன் என்னுடைய அறைத் தோழர். எனக்கு விஜயகாந்தைத் தெரியும் என்று சொல்லி புகைப்படம் எடுப்போம் எனச் சொல்லி அவரைக் கூட்டிக் கூட்டிக்கொண்டு சென்றேன். தி நகர் ரோஹிணி ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். நாங்கள் காலை பத்தரை மணிக்குப் போனோம். அப்போது அவர் கீழே நின்ற எங்களை மேலே இருந்து எட்டிப்பார்த்தார். கையில் பல்

துலக்கும் ப்ரஷ். ‘அண்ணே, உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறோம்' என்றேன்.

‘மேலே வாங்கப்பா...' என்றார். போனோம்.

'என்னண்ணே பல் துலக்கலையா?''

‘ஆமாப்பா.. சீக்கிரம் பல் துலக்கிட்டா பசிஎடுக்க ஆரம்பிச்சுடும். அதான் கொஞ்சம் லேட் ஆகட்டுமேன்னு வெயிட் பண்றேன்' என்றார்.

‘என்னைப் படம் எடுத்துக் கொடுத்தால் 100 ரூபாய் கிடைக்குமா?' என்றார் ஆச்சர்யமாக.

நாங்கள் தலையாட்டியதும் ‘இதோ வர்றேன்' என்று போய் பல் துலக்கி குளித்துவிட்டு  வந்தார். நாங்கள் கேட்டபடியெல்லாம் போஸ் கொடுத்தார். கிளம்பியபோது நீங்க சாப்பிட்டீங்களா? என்றார். நாங்கள் சாப்பிட்டிருக்கவில்லை. இருந்தாலும் சுயமரியாதை காரணமாக சாப்பிட்டுவிட்டோம் என்று கொஞ்சம் பாதி தலையை ஆட்டினோம்.

உடனே ஒருவரை அழைத்து கீதா கபேயில் இவங்களை சாப்பிட வைத்து அனுப்பணும் என்று எங்களை அனுப்பிவைத்தார். அவரே இன்னும் சாப்பிடவில்லை. இருந்தாலும் நாங்கள் சாப்பிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அதே மனநிலைதான். எந்த மாறுதலும் இல்லை. இயற்கையாகவே எல்லோரையும் மதிக்கக்கூடிய பண்பு உடைய ஒரு மனிதர் அவர்!

(நமது செய்தியாளரிடம்  கூறியதிலிருந்து)

logo
Andhimazhai
www.andhimazhai.com