நொய்யல் - தேவிபாரதி
நொய்யல் - தேவிபாரதி

முற்றுப்பெறாத நாவலின் இறுதி அத்தியாயம்

நாவல் பிறந்த கதை

நொய்யலுக்கான முதல் வடிவம் 1994ஆம் ஆண்டில் மனதில் உருப்பெற்றது. அதற்கு முன்பாகவே விரோதி என்னும் தலைப்பில் நாவலை ஒன்றை எழுதியிருந்தேன். ஆனால் அது முற்றுப்பெறவில்லை. ஏற்கெனவே எழுதிமுடித்திருந்த நாவலை தூக்கிப்போட்டுவிட்டு நொய்யலைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். எழுபது, எண்பது பக்கங்களுக்குள் குறுநாவல் ஒன்றை எழுதவேண்டும் என நினைத்தேன். அது பற்றிய யோசனைகளில் மூழ்கினேன்.

 பெண் ஒருத்தியின் முகத்தின் ஒரு பாதி அடர்ந்த கறுப்பு நிறத்திலும் மற்றோரு பாதி வெண்மையாகவும் தென்பட்டது. பளீர்னு மின்னும் கருமை. வீட்டை அடைந்ததும் அம்மாவிடம் அதைப்பற்றி சொன்னேன். அம்மா அதற்கான விளக்கத்தை அளித்தாள்.

பிறகு அவளைப் பற்றி யோசிக்க முற்பட்டேன். அந்த முகம் அலைக்கழித்து என் மனதில் ஒரு சித்திரம் உருவானது. தோணை படர்ந்த உடல். பிறகு அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டு மற்ற வேலைகளில் மூழுகினேன். ஆனால் விட்டு விலகமுடியாத வகையில் அவளைப் பற்றிய யோசனைகள் அலைக்கழித்தன. மறுநாளும் அவளைப் பார்க்கமுடிந்தது. கூலிவேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் அவள். ஏனோ அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவள் கட்டடப் பணியாளராக இருந்தாள். அருகில்தான் என் அலுவலகம் நான் அருகில் சென்று பார்த்தேன். ஒரு பாதி கறுப்பாகவும் மறுபாதி வெண்மையாகவும் தென்பட்ட அந்த முகத்தைக் கண்டு பதற்றமடைந்தேன்.

ஆனால் அவள் அழகாக இருந்தாள். ஒரு பாதி கறுப்பாகவும் மறுபாதி வெண்மையாகவும் தென்பட்ட பேரழகின் வடிவம். நான் சிதறிப்போனேன். பதற்றத்துடன் நொய்யல் கரையில் அலைந்து திரிந்தேன்.

பிறகு அவளைப் பற்றிய யோசனைகளை விட்டுவிட்டு நான் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த நாவல் பணிகளைத் தொடர்ந்தேன்.

அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்து.

காரிச்சி என் தாத்தா குமரப்ப பண்டிதனுடன் எங்கள் வீட்டில் வசித்து வந்தவள். எனக்கு பால்ய தோழி. பால்யத்தில் நாங்கள் ஆற்றில் மீன் பிடிப்போம். ஒரு துண்டஞ்சேலையை வைத்து மீன்பிடித்து எங்களுக்குத் தருவாள். மீன்களைச் சுட்டுத்தருவாள். நொய்யல் மீன்களின் சுவையை அறிந்தவர்களுக்கே அது தெரியும். அப்போதுதான் சென்னிமூப்பன் எங்களுக்குக் கதை சொல்வான். நொய்யல்கரை மனிதர்களின் கதையை.

நொய்யல்கரை மனிதர்களைப் பற்றி, அவர்கள் வாழ்ந்து விதம் பற்றி, இந்த வாழ்வோடு அவர்கள் மல்லுக் கட்டியதைப் பற்றி, அதில் வசித்த பறவைகளைப் பற்றி, மீன்களைப் பற்றி, பாம்புகளைப் பற்றியெல்லாம் சின்னிமூப்பன் எங்களுக்குச் சொன்ன கதைகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன. ஆறுமாதம் பனையேற்றம், பிறகு ஆறுமாதம் நொய்யலின் கதையைச் சொல்வது என வாழ்ந்து தீர்த்தான் மூப்பன்.

நரிப்பழனிக் கவுண்டனும் தேவனாத்தாளும் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குப் போன கதையைச் சொன்னவர் எங்கள் பெரியம்மாதான். அவர் சொன்ன கதைகள் இன்றுவரை என் நினைவில் இருக்கின்றன. காகங்களின் கதை, பாம்புகளின் கதை, அடமூக்கன் கதை, அவர் சொல்லித்தீராத கதைகள் அதிகம்.

அப்போதுதான் காரிச்சுக்குப் பேய் பிடித்தது. இரவுகளில் அவள் எழுப்பிய சத்தங்கள் கேட்டு ஊர் பதற்றமடைந்தது. தீவணைபோல அவளது உடலில் தோணைபடர்ந்தது. ஊர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. ஆனால் பேய்பிடித்ததுதான் அவளுக்குத் துயரங்களைக் கொண்டுவந்தது. அவள் பாடும் தெம்மாங்குப் பாடல்களை ஊரார் கேட்டுக்கொண்டிருப்பார்கள். குரல் சுண்டியிழுக்கும். ஆடுமேய்க்கும்போது தன் போக்கில் பாடிகொண்டு போவாள் காரிச்சி. நொய்யலில் வெள்ளம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்துவந்து எல்லோருக்கும் சொல்வாள்.

ஆனால் குமரப்ப பண்டிதன் ஒரு சிறிய பாத்திரமாக உருப்பெற்றிருந்தான். ஒரு பெரிய நாவலுக்கான கூறுகள் அப்போதும்கூட இல்லை. குமரப்ப பண்டிதன்தான் இந்த நாவலுக்கான அறவியல் கூறுகளை உருவாக்கியவன். அவன் இல்லாமல் போயிருந்தால் இந்த நாவலுக்கான அறவியல் கேள்விகள் எழுந்திருக்காது. குமரப்ப பண்டிதன் நொய்யலின் வழியே எழுப்பும் அறவியல் கேள்விகள் முக்கியமானவை. ஒரு ஜோதிடனாக வாழ்வைத் தொடங்கிய குமரப்ப பண்டிதன் நொய்யல் கரையைவிட்டுப் போவதற்கு மனமற்றவனாக இருக்கிறான். நொய்யல்கரை வாழ்வை தன் வாழ்க்கையோடு பிணைத்துக்கொள்கிறான். தன் கடைசிக்காலங்களில் யாருமே அற்றவனாக நிற்கிறான். கிணறு வெட்டும் பொறுப்பு அவனுக்கு வந்துசேர்கிறது. தனது ஜோதிடத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட பண்டிதன் திடமான மனதுடன் தனக்கு விதிக்கப்பட்ட பணியை ஏற்கிறான்.

கிணறு ஊற்றெடுக்கிறது. பண்டிதன் எந்தப் பதற்றமும் அற்றவனான கிணற்றுக்குள் இறங்குகிறான். அமைதிகொள்கிறான். பண்டிதனின் கடமைகள் முற்றுப்பெறுகின்றன. மணிக்கவுண்டர் பண்டிதனைக் கடவுள் எனச் சொல்கிறார்.

காரிச்சி தன் அம்மாவுக்காக வேலம்மாளைப் பழிதீர்க்கிறாள். பழி யாருடையது?

பாரு(பார்வதி) யாரைப் பழிதீர்க்கிறாள். பூபதியையா? வேலம்மாளையா?

பாரு, காரிச்சி, தேவனாத்தா, நொய்யல் எல்லாமும் ஒன்றா?

யார் பொருட்டு வெள்ளி தன்னை ஒப்புக்கொடுத்தான்? காரிச்சியின் பொருட்டா? பாருவின் பொருட்டா? இல்லை அழகுமீனாவின் பொருட்டா?

நொய்யலில் மூழ்கி நொய்யலாகவே ஆகிவிட்ட காரிச்சியைத் தேடிப்போன ஒரு மனிதனின் பயணமா அது? இல்லாமல் போன மனிதனின் பயணம் என அதைச் சொல்லாமா?

இந்த நாவலை எழுதுவதற்கு ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது எனக்கு?

எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான் அதைத்திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தேன். நாவலின் கதைத் திட்டம் மாறிக்கொண்டே இருந்தது. அப்போது காரிச்சியும் சென்னிமூப்பனும் மட்டுமே இருந்தார்கள். வெள்ளி ஒரு துணைப்பாத்திரமாக இருந்தான். பிறகு குமரப்ப பண்டிதன். நாவலின் அறம் சார்ந்த தேடல் குமரப்ப பண்டிதனைக் கொண்டு உருவானது.

தாஸ்த்தாயெவ்ஸ்கியை வெள்ளியோடு பொருத்திப் பார்த்தேன். மிஸ்கின் பாத்திரம். கிறித்துவுக்கு நிகரான பாத்திரமாக வெள்ளியைக் கருதினேன். வெள்ளிதான் இந்த நாவலின் தூய ஆன்மா. காரிச்சியைத் தேடி அலைந்தவன் அவன். அவளுக்காக நொய்யல்கரையில் காத்திருக்கிறாள் அவன். அது மிக நீண்ட காத்திருப்பு. கடைசியில் மனப் பிறழ்வுள்ளவனாக அலைந்து திரிகிறான். ஏறத்தாழ பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு சடலமாக அவளை மீட்டெடுக்கிறான். அப்போது தேவனாத்தா கூட இல்லை. நரிப்பழனிக் கவுண்டனின் குதிரை தலையொரு பக்கமும் முண்டமொரு பக்கமுமாகச் சிதறிக்கிடக்கிறது. காரிச்சி இல்லை, பாரு இல்லை,. அழகுமீனா என்ன ஆனாள்? அந்தப் பேரழகி எங்கே?

அனேகமாக நொய்யலின் அடுத்த பகுதியில் அவளைப் பார்க்கலாம். இப்போதைக்கு வெள்ளியின் இந்தக் கதை முற்றுப்பெறுகிறது. அழகுமீனாவைப் பற்றி நாளைக்குப் பேசலாம். ஆமாம் நாளைக்கு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com