
எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய பீச் நாவலின் வெளியீடு காஸ்மோபாலிடன் க்ளப்பில் சனிக்கிழமை மாலை நடந்தது. நூல் அறிமுக உரையை சாரு நிவேதிதா, முருகேச பாண்டியன், நாராயணி சுப்ரமணியன் ஆகியோர் பேசுவதாகவும் ஜி.கார்ல் மார்க்ஸ் ஏற்புரை என்றும் அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காஸ்மோபாலிடன் கிளப்புக்குள் போவதே ஓர் அனுபவம். காலர் வைத்த சட்டைக்குத்தான் அனுமதி. வேட்டி கட்டிக்கொள்ளலாமா என்ற என் ஐயத்தை, அதிஷா கார்ல்ஸிடம் கேட்டுத் தீர்த்து வைத்திருந்தார். ஆனால் நான் கட்டிக்கொண்டுபோனது டிசைனர் வேஷ்டி. ‘இல்ல. இது லுங்கி.. கெட் அவுட்’ என்று சொல்வார்களோ எனும் ஐயத்தில் காரில் ஒரு பேண்ட் வைத்திருந்தேன். ஆனால் கார்ல்ஸின் வாசக நண்பர் ஒருவர், வாயிலிலேயே என்னைப் பார்த்ததும் ‘வாங்க வாங்க’ என்று ஒரு விஐபி ரேஞ்சுக்கு என்னை அணைகட்டிக்கொண்டு நடக்கவும் ரிசப்ஷனில் இருந்தவர்கள் எதுவும் கேட்கவில்லை.
100 பேர் அமரும் அறை முழுக்க நிரம்பியிருந்தது. நிகழ்வின் சிறப்பம்சமே, கார்ல்ஸின் நண்பர்கள் வந்த யாரும் சங்கடப்படாதபடி பார்த்துக்கொண்டதுதான். திரும்பினால் ‘தண்ணீர் வேண்டுமா?’ என்று சைகை காட்டிக்கேட்டார்கள். நின்று கொண்டிருந்தவர்கள் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். யாரோ பசிக்குது என்று வயிற்றைத் தடவ, ஃப்ரூட் சாலட் கொடுத்தார்கள். உபசரிப்பு.. தரம்!
முருகேச பாண்டியன், நாராயணி சுப்ரமணியன் ஆகியோர் மிகச் செறிவாக நூலைக் குறித்துப் பேசி அமர்ந்தார்கள். வாசக பார்வை என்று வான்கோ பதிப்பகம் சுரேன் அருமையானதொரு பேச்சைக் கொடுத்தார். பேசுவதற்கு முன்பான பீடிகையைத் தவிர்த்திருந்தால் அற்புதம் என்று கைவலிக்கத் தட்டியிருக்கலாம். உடை கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த அரங்கில் கார்ல்ஸுக்கு, சுரேன் ஒரு லுங்கியைப் பரிசளித்தபோது இன்னும் அதிக கைதட்டல்கள் வாங்கி சமன் செய்துகொண்டார்.
அதன்பின் சாரு நிவேதிதா எழுந்ததும் ‘தலைவா…’ கோஷங்கள் விண்ணை… ஸாரி, அறையைத் தாண்டி ஒலித்தன. அதில் ஒருத்தர் அரசியலுக்கு வா தலைவா என்றெல்லாம் வேறு… டேய் யார்ரா அவன்!
“நான் பேசி முடிச்சதும் இப்படி வரவேற்பீங்களானு தெரியல” என்று பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தார் சாரு. டிரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து என்றால் என்ன ஒரு பாடமே எடுத்தார். டிரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தில் தன்னை உலுக்கியவர்கள் யார் யாரென்று பட்டியலிட்டார்.
டிரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து என்பது மீறல் இலக்கியம். எழுத்தைப் படித்தால் அது நம்மை அசௌகர்யப்படுத்தவேண்டும். ‘வாசகனை சௌகர்யமாக வைப்பது என்ன எழுத்து, அதை எழுதுவதற்கு நீங்கள் எதற்கு?’ என்பதுதான் சாருவின் கேள்வியாக இருந்தது. “பீச் நாவலில் எல்லாமே யதார்த்தமாக நடக்கிறது. நடந்ததை அப்படியே சொல்கிறது. எல்லாம் வெளியில் நடக்கிறது; உள்ளே - internal - எதுவும் நடக்கவில்லை. யதார்த்தவாதத்தை அப்படியப்படியே பிரதிபலிக்கிறது. அது போதவில்லை. ரியாலிட்டியை உடைக்க வேண்டியதைத்தான் கார்ல் செய்திருக்க வேண்டும். உடைத்திருக்க வேண்டும். துண்டாக்க வேண்டும். கூறுபோட்டிருக்க வேண்டும். ஆனால் எதையுமே பீச் நாவல் செய்யவில்லை. ஆனால், அவை நிகழவேண்டிய தருணங்களும் இருந்தன! ஆனால் அதைப் பயன்படுத்திக்கொள்ள கார்ல் தவறிவிட்டார்.
நாவலின் கதாபாத்திரங்களான ரோகிணி, சந்தியாவை உண்மையாகக் காட்டுகிறது கார்ல் மார்க்ஸின் எழுத்து. ஆனால் அதை மீறியிருக்க வேண்டும்” என்று பேசிய சாரு எங்கெங்கே மீறலை நிகழ்த்தியிருக்கலாம், எப்படி எழுதியிருந்தால் இது தன்னைக் கவர்ந்திருக்கும் என்று உதாரணங்களோடு சொன்னார். சோஷியல் மீடியாக்களில்... ரீல்ஸில் ஒரு இளம்பெண் நிகழ்த்துவதைக் கூட கார்ல் மார்க்ஸ் செய்யாமல் பதுங்கிவிட்டார்" என்று பேசினார்.
அதன்பின் திடீர் விசிட் அடித்து ஆச்சர்யப்படுத்திய மனுஷ்யபுத்திரன், கார்ல் மார்க்ஸுக்கு ஆதரவாக “இது ஒன்றும் டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங் என்று கார்ல் மார்க்ஸ் சொல்லவே இல்லையே. ஒரு நல்ல யதார்த்தவாத நாவலை எழுதியவரிடம் இது ஏன் டிரான்ஸ்க்ரெஸிவாக இல்லை என்று கேட்பது சரியே இல்லை” என்றார்.
கார்ல் மார்க்ஸ் ஏற்புரை நிகழ்த்தினார். சம்பிரதாய நன்றி தெரிவித்தலுக்குப் பிறகு “சாரு நடத்தியது ஒரு பாடம். நாவல் என்றால் என்ன, டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங் என்றால் என்ன என்ற பாடம். சாருவைப் பின் தொடரும் எல்லாருக்குமே தெரிந்த ஒரு பாடம். ஆனால் இங்கு வந்த வாசகர்களுக்கு முன் இதைப் பேசியிருக்கக்கூடாது. அந்த வகையில் சாரு நிகழ்த்தியதில் மோசமாக உரை இது. நீங்கள் பின்நவீனத்துவம் பற்றி பாடம் நடத்துவதென்றால் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டு அதை நடத்துங்கள். கார்ல் மார்க்ஸிடம் தனியே பேசவேண்டியதை இங்கு இதைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் முன் பேசியது தவறு. இங்கே வந்திருப்பவர்களுக்கு இந்தத் தன்மை என்ன என்று புரியாது. சாருவிடம் நான் இந்த நாவலைக் கொடுக்கும்போது, ‘இது டிரான்ஸ்க்ரெஸிவ் நாவல்’ என்று சொல்லிக் கொடுக்கவே இல்லையே. ஒரு நாவலில் வன்முறை, கண்ணீர், உடைப்பு எதுவுமில்லாதபோது அதைத் தேடுவது சாருவின் பிழை” என்று பேசி இன்னும் இன்னும் அதை மறுதலித்தார். “இங்கே நன்றி சொல்லிவிட்டு ஃபேஸ்புக்கில் போய் ஒப்பாரி வைக்கமாட்டேன். சாரு என்னை விமர்சிக்கவும் முடியும் அதற்கு நான் மேடையிலேயே சாருவிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் முடியும். அதுதான் நாங்கள்” என்றும் சொன்னார்.
சரி, என்னளவில் யார் கருத்து சரி. இரண்டு கருத்தும் சரிதான் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் சாருவின் பேச்சுதான் என்னை கவர்ந்தது, நேர்மையாக இருந்தது. கார்ல் மார்க்ஸ் கருத்து அவர் கருத்து என்றாலும், அவர் இதைக் கையாண்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை.
சாரு இதற்காக நிறைய தயாரித்து வந்திருந்தார். இது அறிமுக உரை அல்ல; அனுபவ உரை என்றார். வாசிப்பனுபவம் கிடைத்தது என்றார். எட்டு மணிநேரத்தில் படிக்க முடிகிற அளவு சுவாரஸ்யம் இருந்தது என்றெல்லாம் சொல்லிவிட்டு, “நான் இலக்கியம் என்பது நம்புவது pleasure of text மட்டும் அல்ல. மீற வேண்டிய தளம் இதில் நிறைய இருந்தும் கார்ல் மார்க்ஸ் அதைச் செய்யவில்லை. நாவலில் மாஸ்டர்ஸ் நிறைய பேர் இருக்கும்போது அவர்களைத் தொடவோ, தாண்டவோதான் ஒரு எழுத்தாளன் முயற்சிக்க வேண்டுமென்பதே நான் எதிர்பார்ப்பது. நீங்கள் முதலில் செய்த சாதனையையாவது நீங்கள் முறியடிக்க வேண்டும்” என்றெல்லாம் சொல்லிவிட்டுத்தான் நாவலின் மீதான விமர்சனத்தை வைத்தார்.
கார்ல் மார்க்ஸ் சாருவை மறுத்தது அவர் உரிமை. ஆனால் அவர் பேசும்போது “சாரு பேசும்போது வந்திருந்தவர்கள் முகத்தில் மரண பீதி தெரிந்தது. அவர்கள் பாவமில்லையா.. நாம் தனியாகப் பேசியிருக்கவேண்டியது இது” என்றெல்லாம் பேசியதில்தான் எனக்கு உடன்பாடில்லை. வந்திருந்தவர்களை அப்படிக் குறைத்து மதிப்பிட்டிருக்கவேண்டியதில்லை. அவர்களும் பீதியடையவெல்லாம் இல்லை. அப்படியே அவர்கள் பீதியடைந்திருந்தால், அந்நாளின் நாயகனாக தன் பேச்சில் இலக்கிய மேடைகளில் இப்படி நிகழ்வதுதான் சரி என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருக்கலாம். வந்திருந்தவர்களை இலகுவாக்குவதற்காக சாரு நிவேதிதா நிகழ்த்திய நல்லதொரு உரையை மட்டம் தட்டியிருக்கத் தேவையில்லை என்பதே என் பார்வை.
ஒரு சிலரை காரணமே இல்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நமக்குப் பிடிக்குமில்லையா… எனக்கு கார்ல் மார்க்ஸ் அப்படி. எனவே ஒரு சின்ன பரிசோடுதான் போனேன். அதில் குறிப்பிட கார்ல் மார்க்ஸ் எழுதிய ஒரு வரியைத் தேடிக்கொண்டிருந்தபோது. ஒரு கேள்வி பதிலில் கார்ல் மார்க்ஸ் சொன்னது கண்ணில் பட்டது. அதைத்தான் அந்தப் பரிசில் குறிப்பிட்டேன்.
அது,
“சமரசமற்ற தன்மையே படைப்பாளிக்கான மிடுக்கு.”
அந்த வகையில் சாரு - கார்ல் இருவருமே சமரசமற்று இருந்தது அந்த நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கியது.
முடிந்ததும் சரக்கு பார்ட்டி என்றார்கள். எழுத்திலேயே மீறலை எதிர்பார்ப்பவர்கள், நிஜத்தில் அதை நிகழ்த்தினால் என்ன ஆகும் என்று பயந்து ஓடிவந்துவிட்டேன்.