கொள்கையற்ற அரசியல் கோலோச்சுகிறதா?

கொள்கையற்ற அரசியல் கோலோச்சுகிறதா?
Published on: 

ஊழலை எதிர்க்கும் இயக்கத்தில் இருந்து உருப்பெற்ற ஆம் ஆத்மி கட்சி, அரசியல் ரீதியாக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது அதன் கொள்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சி வலதா இடதா நடுவாந்திரமானதா என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன.

நல்லதொரு ஆட்சியைத் தந்திருந்தாலும்கூட அதன் கொள்கை எதைச் சார்ந்தது என்றொரு இறுதியான முடிவுக்கு வர கருத்தாளர்களால் முடியவில்லை. அக்கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்குத் தாவிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த ஆண்டு ஏப்ரலில் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்களவை எம்பி ராகுல் சத்தா என்பவர், மேலும் ஆறு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பிகளுடன் இணைந்து பாஜகவில் சேர்ந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து அரசியல் கருத்தாளர்கள் இது பின் சிந்தாத்தவாத அரசியல் காலம். இனி அரசியல்வாதிகள் தம் கொள்கைகளை விட எதார்த்தவாத நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் தருவர் என்றனர். பின்சித்தாந்த வாதம் அல்லது பின் கருத்தியல் என்பது மேற்குலகில் 1950, 60 களிலேயே அறிமுகமான வாதம்.

The End of Ideology என்ற நூல் 1960 இல் வெளியானது. இதன் ஆசிரியரான டேனியல் பெல், பத்திரிகையாளராக இருந்து பின்னர் சமூகவியல் பேராசிரியராக மாறியவர். இதன்படி சித்தாந்தவாதிகள் என்போர் யார்? ‘பொதுவுடைமைவாதிகள், இருத்தலியல்வாதிகள், மதவாதிகள்’ என்று டேனியல் பெல் வரையறுத்தார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் உருவான மாபெரும் மானுட அரவணைப்பை நோக்கிய சித்தாந்தங்கள் 1950களில் பொருத்தமற்றுப் போய்விட்டன. இனி குறுகிய நோக்கம் கொண்ட சித்தாந்தங்களே உருவாகும் என்று தன் நூலில் சொன்னார். இது தொடர்பான கருத்துகளும் கல்விப் புலத்தில் உருவாயின.

அரசியல் கட்சிகள் சித்தாந்தம் என்ற வேரில் இருந்துதான் உருவாகின்றன என்று இதுவரை நினைத்திருந்தால், இல்லை இது பின் சிந்தாந்தவாத அரசியலின் காலம் என்ற சிந்தனை உலகெங்கும் ஒரு சாராரிடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இதற்கு உதாரணமாக வெகுஜன அரசியலில் வெற்றி பெற்ற கட்சிக்கு, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசியல்வாதிகள் மிக எளிதாகத் தாவிச் செல்வது அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்ட முடியும். மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கைப் படி 2016-2020 ஆம் ஆண்டுக்குள் மட்டும் இந்தியாவில் 443 மக்கள் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏக்கள், எம்பிகள்) தங்கள் சொந்தக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து கட்சித் தாவி வந்த 16 எம்.எல்.ஏக்களில் 10 பேருக்கு பாஜக அமைச்சர் பதவி தந்தது. கோவாவில் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கட்சி மாறினர். மராட்டிய சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸிலிருந்து கட்சி மாறி வந்த பலருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பலர் பாஜகவுக்குத்தாவினர். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தோல்விக்குப் பின் அதன் மக்களவை எம்பிக்கள் 20 பேர், என்சிபிஐ என்ற பெயர் தெரியாத கட்சியில் சேர்ந்தபோது நாடே அதிர்ந்தது. திருணாமூல் கட்சியின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியைவிட்டு விலகி, பாஜகவால் மீண்டும் அப்பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த நான்காண்டுகளில் 2022- 26 வரையிலான காலகட்டத்தில் 111 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடுத்த கட்சிக்கு மாறிச் சென்றிருப்பதாக மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.

நாகலாந்து மாநிலத்தில் 2025 அக்டோபரில் 32 வேற்று கட்சி எம்.எல்.ஏக்கள் மொத்தமாகப் போய் என்.பி.எப் என்ற கட்சியில் சேர்ந்தார்கள். அங்கே எதிர்க்கட்சியே இல்லாமல் இப்போது ஆட்சி நடக்கிறது.

தமிழ்நாட்டில் தவெக வென்றவுடன் அதிமுகவில் வெற்றி பெற்ற ஆறு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இணைந்ததைக் கண்டோம்.

இதில் கட்சிமாறும் மக்கள் பிரதிநிதி அல்லாத அரசியல்வாதிகள் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் மிக ஏராளம். அது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் விஷயம்தான் என்றாலும் தேவைக்கேற்ப அரசியலில் ஒட்டும் வெட்டும் இருக்கும். கொள்கைகள், கருத்தியல்கள், சித்தாந்தங்கள் என்று சொல்லப்படுகிறவற்றுக்கான மதிப்பீடு குறைந்துகொண்டே வருகிறது. தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூட திமுக தலைமை யோசித்ததாகச் சொல்லப்பட்டதையும் அதில் என்ன தவறு என்று அக்கட்சிகளைச் சேர்ந்த ஒரு சாராரே கூறியதையும் இந்த பின்னணியில் வைத்துப் பார்க்கலாம்.

மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் டி தருமராஜிடம் அந்திமழை சார்பாக இதுபற்றிக் கேட்டோம். ”பின் சித்தாந்த அரசியல்தான் உருவாகி இருக்கிறது என்று கூறலாம் தான். ஒரு காலத்தில் நமக்குத் தகவல் பற்றாக்குறை இருந்தது. இன்று பாருங்கள் தகவல்கள் கொட்டுகின்றன. ஆனால் அவை எதுவும் நமக்குப் பலனளிப்பது இல்லை. ஒருகாலத்தில் உணவுப் பற்றாக்குறை இருந்தது. இப்போது உணவு உபரியாகி, அதை அழகூட்டிக் கொண்டிருக்கிறோம். உண்மை என்ற ஒன்று இப்போது இருக்கிறதா எனக் கேட்டால் பல உண்மைகள் இருக்கின்றன. இதை post truth என்கிறார்கள். பல உண்மைகள் உலவுகின்றன. எது உண்மை என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இச்சமயத்தில் பின் சித்தாந்த அரசியல்தான் உருவாகும்” என்கிறார் அவர்.

”மனிதர்கள் நுகர்வோராகவே முழுமையாக மாறுவதுதான் முதலாளித்துவத்துக்குத் தேவை. ஏகப்பட்ட சித்தாந்தங்கள், உண்மைகள், தகவல்கள் என கிடைத்துக்கொண்டே இருப்பதால் அதில் எதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது எனப் புரிவதில்லை. அது வெறும் தகவலாகவே மட்டும் மாறிவிட்டது. முதலாளித்துவத்தின் சீர்கேடுகளை எல்லோரும் அறிவர். ஆனால் அதற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. ஏனெனில் முதலாளித்துவத்தை எதிர்க்கக் கூடிய எல்லா சித்தாந்தங்கள் மீதும் நமக்கு சந்தேகம் உள்ளது. இது தான் பின் கருத்தியல் நிலைப்பாடு. இதை முதலீட்டியம் நமக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் நாம் எந்தச் செயல்பாட்டுக்கும் இறங்குவதில்லை. சகித்து வாழ, இயல்பு என நினைத்து வாழப் பழகிக்கொண்டுவிட்டோம் என்பதுதான் அடிப்படை உண்மை,” என்றும் அவர் விளக்கமளிக்கிறார்.

புதுதில்லி அம்பேத்கர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜன்குறையிடம் இதுபற்றிப் பேசியபோது அவர் இதிலிருந்து மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். “சித்தாந்தங்கள் பற்றி முன்னர் இருந்த புரிதல் வேறு. பொதுவுடைமை, தனிவுடைமை போன்றவற்றை வைத்துப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி இல்லை. முழுக்கவும் முதலீட்டிய நலன்களுக்கும் போராடாமல் மக்கள் நலனுக்காகவும் போராடுகிறார்கள். எல்லோருக்கும் இரண்டுமே வேண்டும். எந்த அளவுக்கு கட்சிகள் முதலீட்டிய நலனுக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்கிற அளவில் கருத்தியல் நிற்கிறது.

முழுமையாக கருத்தியல் தன்மை இல்லாத அரசியல் எனச் சொல்லப்படுவதை நான் ஏற்கமுடியாது. ஆனால் பழைய தனியுடைமை, பொதுவுடைமை கருத்தியல்கள் அழிந்துவிட்டன என்பதை வேண்டுமானால் நான் ஏற்கிறேன். இது புதிய கருத்தியல் வடிவம் பெற்றுள்ளது. உதாரணத்துக்கு கரப்பான் பூச்சி கட்சியை எடுத்தால் முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த கட்சி. மக்களுக்கு ஆள்வோர் பதில் சொல்லவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தவெக அதிமுகவின் தொடர்ச்சி. அதிமுகவில் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற சினிமா பிம்பம் இல்லாதால் உள்ளே நுழைந்தவர் விஜய். இது வலதுசாரித் தன்மைக்கான ஒரு வடிவமே.

திமுக மக்கள் நலன், மாநில நலன் சார்ந்த கட்சியாக அடையாளப் படுத்தப்பட்டதால் அதற்கு மாற்றாக திராவிடத் தன்மையுடனான சினிமா பிம்பமான எம்ஜிஆர் காங்கிரஸ் கட்சியால் கட்டமைக்கப்பட்டார். திமுகவுக்கு அது ஒரு வலதுசாரி மாற்று. அதாவது அதிகமாக கார்ப்பரேட் நலன், தனியுடமை நலன் சார்ந்து இயங்கும். ரொம்ப வித்தியாசம் இருக்காது 20-25 டிகிரி வித்தியாசம் இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவது அதிகரிப்பதைப் பற்றிக் கேட்டோம் “ இதையும் நான் பின் கருத்தியல் சூழல் எனப் பார்க்கவில்லை. வெகுஜன அரசியல் என எடுத்துக் கொண்டால் இதுபோல் கட்சி மாறுவதெல்லாம் இருக்கும் தான். அதையெல்லாம் கடந்து கட்சியோட திசையில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும். முதலீட்டியம், மக்கள் நலன் என நான் இதை இரண்டாகப் பிரித்துக் கூறுவது வழக்கம். இருமுனைகளும் கலந்து இருக்கும். கட்சிகள் எந்த பக்கம் அதிகமான சார்பில் இருக்கின்றன என்பதில் வேறுபடும். இதற்குள் கருத்தியல் ஒளிந்திருக்கும். ஆகவே கருத்தியலே இக்காலகட்டத்தில் இல்லை எனச் சொல்லமுடியாது,” என்கிறார் ராஜன் குறை.

முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் வேர்விட்டு அதன் பலன்களையும் விளைவுகளையும் உலகெங்கும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இச்சூழலில் சித்தாந்தங்கள் குறித்த பார்வைகளும் மாறுகின்றன. அரசியல் மக்களுக்கான சேவை என்பதிலிருந்து வாழ்க்கைக்கான தொழில் என்று வண்ணம் கொள்கிறது. தகவல் பெருக்கத்தால் மாயவலையில் சிக்கி இருக்கும் சமூகத்தில் கருத்தியல் கயிறுகள் அவிழந்துகொண்டே இருக்கின்றன எனலாம்..

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com