ரஸ்கின் பாண்ட்
ரஸ்கின் பாண்ட்

கூரை மீது ஓர் அறை ரஸ்கின் பாண்டின் ஒப்பற்ற பயணம்

கே. ஸ்ரீனிவாசராவ், செயலர், சாகித்ய அகாடமி.

உலகம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, உலகின் அனைத்து மொழிகளிலும் எண்ணற்ற எழுத்தாளர்களைக் கண்டுள்ளது - சிலர் தோற்றத்தில் மிடுக்காகவும்  அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் பிரமாண்டமாகவும், இருக்கிறார்கள். இன்னும் சிலர் மென்மையானவர்கள். இருக்கும் இடம் தெரியாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.

ஆனால்  நேரில் பார்த்திராத லட்சக் கணக்கானவர்களின் இதயங்களைத் தொட்டுவிடுவார்கள். சிலர் எந்த வகைக் கதையையும் சொல்வதில் திறமையானவர்கள்.சிலர் கதைகளின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் வைப்பவர்கள்.சிலர் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மர்மமானவர்கள்.

மனிதர்களின் உலகம் பல்வேறு விதமான விஷயங்களால் வளம் பெறுகிறது.அப்படிப் பல்வேறு வகைகள் இல்லாமல் இருந்திருந்தால் நம் வாழ்க்கை வெறுமையாக இருந்திருக்கும். பலநேரங்களில் பெரும்பாலானோருக்கு, -சுவாரஸ்யமாகக் கதை பின்னுவது கிடக்கட்டும்-தங்களது வாழ்வில் கடந்து வந்த மனதுக்கு நெருக்கமான அனுபங்களைக் கூட  வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

நவீன கால கதைசொல்லிகளில் ஆகச் சிறந்த ஒருவர், இந்திய கதைசொல்லல் மரபில் புகழ்வாய்ந்த ஓர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்  அவர் தனது இயற்கை மீதான காதலுடன் கூடிய கதைகளால் பல தலைமுறை இலக்கிய ஆர்வலர்களைக் கவர்ந்தவர். அவரது கதைகள் இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்துகின்றன. பூமி மெதுவாக மகத்தான ஆறாவது அழிவை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரது எழுத்துக்களில் இருந்து பெறப்பட வேண்டிய ஞானம் ஏராளம். அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் நகர வாழ்க்கையின் சலசலப்புகளிலிருந்து விலகி, இமயமலைச் சூழலை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால், ரஸ்கின் பாண்ட் போன்ற ஒரு அசாதாரணமான கதைசொல்லியை ஒரே சட்டகத்திற்குள் மட்டுப்படுத்துவது ஒரு விமர்சகர் தனக்குத்தானே விதிக்கும் துரதிர்ஷ்டவசமான வரம்பு. ரஸ்கின் பாண்ட் பொதுவான எல்லைகள், வரம்புகளைக் கடந்தவர். நிச்சயமாக, இமயமலை நிலப்பரப்பு அவரை பெருமளவிற்கு ஊக்கப்படுத்தியது. ஆனால்  இமயம் எந்தவொரு இயற்கை ஆர்வலரையும் ஊக்குவிக்கும்.

பின்னணி நிலையானதாக இருக்கலாம். ஆனால் ரஸ்கின் பாண்டின் கதைகள் பல்வேறு கருப்பொருள்களை ஆராய்பவை. ஒற்றை ஜன்னல் கொண்ட அரண்மனையில் அமர்ந்து ஜன்னல் திறக்கும் போதெல்லாம் வேறொரு உலகத்தை வெளிப்படுத்தும் அற்புதமான மந்திரவாதி போல அவர் இருந்தார். இது சம்பந்தமாக, அவர் பல இந்திய மொழிகளில் உள்ள  மற்ற தலைசிறந்த கதைசொல்லிகளை ஒத்தவர். உலகம் முழுவதும் சூழ்நிலைகள் வேறாக இருந்தாலும்  ஒரே மாதிரி இருக்கும் நாடகீயமான மனித வாழ்வைப் பற்றி எழுதுவதன் மூலம் தனது வாசகர்களைக் கவர்ந்து பரவசத்தில் ஆழ்த்துகிறார்.

இவற்றுக்கு அப்பால், ரஸ்கின் பாண்ட்  மிகச் சிறந்த ஒரு மனிதநேயர். கிராமப்புற வாழ்க்கை அல்லது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சி அல்லது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பு - ரஸ்கின் பாண்டின் ஒவ்வொரு கதையும் கையாளும் கருப்பொருள் எதுவாக இருந்தாலும், அவற்றின் மையப் புள்ளி மனித வாழ்க்கை.  மனித வாழ்வை மனிதகுலத்தின் அனைத்து புகழ், வெற்றிகள் துன்பங்கள் வழி.ஆராய வேண்டும் என வலியுறுத்துகிறது

எனவே, ரஸ்கின் பாண்ட், அவரது கற்பனை உலகம், அவரது கதைகள், கிராமப்புற மக்களுடன் அவர்  வாழ்நாள் முழுதும் கொண்டிருக்கும் உறவு - இவை அனைத்தும்- இயற்கையின் மீதான காதலுக்கு அப்பாற்பட்டவை. ரஸ்கின் பாண்டின் உலகத்தைப் பகிர்ந்துகொண்டு, அதே சுவாசிக்கும் அதே காற்றை சுவாசித்துக் கொண்டுஅவரது காலத்தில் வாழும் நாம் பாக்கியவான்கள்.

இயற்கையின் தளராத துணிவு, ரஸ்கின் பாண்டின் எழுத்துகளுக்கு அடிகோலுகிறது, இது இயற்கை, சுற்றுச்சூழல் இவற்றின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையையும் பிரதிபலிக்கிறது. இயற்கையானது பாண்டிற்கு உத்வேகம் அளிக்கிறது, அதில் இருந்து அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான கதைகள், சொற்பொழிவுகளை தீவிரமாக வெளிப்படுத்துகிறார், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை உலகத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். நிலையான வாழ்க்கை, நிலையான வளர்ச்சி அவை நமக்கு அளிப்பவை என்ன?... இவை அனைத்தையும் புரிந்து கொண்ட ஓர் எழுத்தாளர் உண்டென்றால், அது ரஸ்கின் பாண்ட்.

வாசகர்களை வெவ்வேறு உலகங்களுக்குக் கூட்டிச் செல்வதற்கு அப்பால், ரஸ்கின் பாண்டின் கதைகளுக்கு கூடுதலாக ஒரு சமூகப் பங்களிப்பும் உண்டு. அவரது எழுத்துகள் குழப்பமான உள்ளங்களைஆறுதலாகத்  தொட்டு எதிரொலிகளை எழுப்புகின்றன, அதே நேரத்தில் அத்தகைய வாசகர்களின் இதயங்களில் அழகியல் ரீதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான மெய்மறக்கச் செய்யும் விளைவை ஒரு சில எழுத்தாளர்களிடம் மட்டுமே காண முடியும்,  அந்த பட்டியலில் ரஸ்கின் பாண்டை முதலிடத்தில் வைப்பதில் எனக்கேதும் தயக்கங்கள் இல்லை.

சிகரங்களைத் தொட்ட இந்த எழுத்தாளருடன் சுமார் பத்தாண்டுகள் கடிதப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சமீபத்தில், முசோரியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த சாகித்ய அகாடமி விழாவின் போது அவரை நேரில் சந்தித்து சிறிது நேரம் செலவிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது முழுமையான எளிமை, எந்தவிதமான பாசாங்குகளும் இல்லாத தன்மை இவற்றால் நான் முழுமையாகக் கவரப்பட்டேன்.

அவரது இமாலய சாதனைகள், ஏழு தசாப்தங்களாக அவர் பெற்ற பாராட்டுகள், ரஸ்டியை (அவரது கதாபாத்திரங்களில் ஒன்று) உருவாக்கியவர்எனப் பல சிறப்புகளுக்கு அப்பாலும் அவர் அன்பான, நட்புக் கொண்டமனிதராக இருக்கிறார். பெயரும் புகழும் அவர் தலையில் ஏறிவிடவில்லை.இது போன்ற அனுபவத்தை, பேரின்பத்தை நாம் ஒருவரின் முன்னிலையில் பெறுவது என்பது அடிக்கடி நிகழ்வதில்லை.அவர் எப்படி இவ்வளவு வெகுஜன அபிமானத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை இது உணர்த்துகிறது.

எனவே, ரஸ்கின் பாண்ட் எப்படிப்பட்ட எழுத்தாளர்? இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், ஆளுமைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர் மெய்மறக்கச் செய்பவர்.  நான் குறிப்பிட்ட அனைத்து எழுத்தாளர் வகைகளின் ஒரு கலவை. அவர் மர்மத்தைத் நாடுபவர்களுக்கு மர்மமானவர், பிரமிப்வை விரும்புபவர்களுக்கு கம்பீரமானவர், காதல் கதைகளின் வாசகர்களுக்கு மென்மையானவர். எந்தவொரு கருத்தியல் சிமிழிலும் அகப்பட்டுக் கொள்ளாதவர். மனிதநேயத்தைக் கொண்டாடி ஊக்குவிக்கும் எழுத்தாளர். நான் அவரை ஒரு மென்மையான ஜாம்பவான், படைப்பாளி எனப் பார்க்கிறேன், இந்த மென்மையான மேதையை ஆங்கிலத்தில் இந்திய எழுத்துலகில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பிற்காக- அவற்றில் பல இந்திய மொழிகள் பலவற்றிலும் கிடைக்கின்றன-  பாராட்டாமல் இருந்தால், வாழ்வில் நாம் தோல்வியடைந்தவர்களாவோம்.வாழ்வும் வருங்காலமும் அப்போதுதான் நம்மிடம் அன்பு செலுத்தும்.

(கே. ஸ்ரீனிவாசராவ் கட்டுரை தமிழில் மொழி பெயர்ப்பு : மாலன்)

logo
Andhimazhai
www.andhimazhai.com