இன்றைய தமிழனுக்குத் தேவை!

இன்றைய தமிழனுக்குத் தேவை!

அந்திமழையிலிருந்து அதன் ஆசிரியர் என்னை அலைபேசியில் அழைத்து, வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய அவசியமான ஐந்து புத்தகங்களை வாசகர்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டார். அத்துடன் ஒரு அன்பான வேண்டுகோளும் முன் வைத்தார்.  திருக்குறள்,  பகவத் கீதை, பைபிள், குர்ஆன், ராமாயணம், மகாபாரதம் என்று சொல்வதை தவிர்க்கலாம் என்பதே அது. அனைவரும் சொல்லக்கூடிய இவற்றை தவிர்ப்பதில் உள்ள நியாயத்தை  உடனடியாகப் புரிந்து கொண்டதால் அவை எவற்றையும் இங்கே முன் வைக்கவில்லை. 

அகத்தியம், தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு நூல்கள்,  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள்  ஐஞ்சிறு காப்பியங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் தேவாரம் திருவாசகம் உட்பட்ட பக்தி இலக்கியங்கள், திருமந்திரம்,  சித்தர் பாடல்கள், கம்ப இராமாயணம், வில்லி பாரதம் என்பன போன்ற எண்ணற்ற பொக்கிஷங்களை அறியாமலேயே தமிழன் தமிழன் என்று வெற்று கோஷம் இடுவதும், தேசத்தையும் தெய்வீகத்தையும் இகழ்வதே நவீனம் என்று பேசித் திரிவதும் வழக்கமாகி விட்ட இந்த நாளில், பாரம்பரியத்துடன் தன்னை தொடர்பு படுத்துக்கொள்ள, இன்றைய தமிழனுக்குத் தேவை என்று எண்ணிய ஐந்து புத்தகங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

1. அபிதான சிந்தாமணி  - ஆ. சிங்கார முதலியார் ( சீதை பதிப்பகம் ) 

2. என் சரிதம் - உ வே சாமிநாத ஐயர் ( காலச்சுவடு பதிப்பகம் ) 

3. பாரதியார் கவிதைகள் ( பல்வேறு பதிப்பகங்கள் ) 

4. விடுதலைப் போரில் தமிழகம்  - மபொசி ( இரண்டு தொகுதிகள் ) பூங்கொடி பதிப்பகம் 

5. அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் ( கண்ணதாசன் பதிப்பகம் ) 

அபிதான சிந்தாமணி: ஆ. சிங்கார முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்டு 1910 இல் வெளியிடப்பட்ட முதல் தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியம் இது. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அத்துடன் வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகர வரிசைகளில் தொகுத்து வழங்குகிறது இந்நூல். நம்மை நம் முன்னோர்களோடு தொடர்பு படுத்தக்கூடிய சிறந்த நூல் இது என்றால் அது மிகையல்ல. 

என் சரிதம்: தமிழ்த் தாத்தா உ வே சாமிநாத ஐயரின் சுய சரித்திரம் இது.  தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை மீட்டுத் தந்தவர் உவேசா.  பாதுகாக்கத்தக்க இலக்கியப்  படைப்புகள் பலவும்

இயற்கையால் அழிந்து போய் கொண்டிருந்த  கொண்டிருந்த காலத்தில், தன் வாழ்நாள் விரதமாக அவற்றைத் தேடி, கண்டுபிடித்து,  சேகரித்து தொகுத்துத் தந்தவர் உவேசா அவர்கள்.  இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இந்த நூலில் விளக்கி இருக்கிறார்.

தமிழுக்காக, தமிழ் நூல்களை மீட்டெடுக்க அவர் பட்ட இடர்கள் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டியவை. ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த அவரின் அரிய தொண்டை நாம் அறிவது அவசியம். இவரே உண்மையான தமிழ் மொழிக் காவலர் என்றால் அது மிகையல்ல. எனவே தான் அவர் தமிழ்த் தாத்தா ஆகிறார். நன்றி உள்ள சமூகம் இவரை மறைக்காது, மறக்காது.

பாரதியார் கவிதைகள்: பாரதியும் ஒரு அக்னிக் குஞ்சு தான். இவன் இல்லை எனில் சுதந்திர எழுச்சி இல்லை. இவன் இல்லையெனில், ஆன்மீக விழிப்புணர்வு இல்லை. தேசியத் தையும் தெய்வீகத்தையும் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள,  உணர்ந்து கொள்ள பாரதி போன்று ஒரு ஆசான் இருக்க முடியாது. எந்த சமூகமும் அடிமைப் படுத்தப்படக் கூடாது, எந்த உயிரினமும் உணவு இல்லாமல் இருக்க கூடாது, ஜாதி பேதங்கள் பார்க்கக் கூடாது, பெண்கள் சுதந்திரம் அவசியம் தேவை என்பது போன்ற சீர்திருத்தக் கருத்துகளை முன் வைத்த பாரதியின் வரிகள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வரிகள்.

விடுதலைப் போரில் தமிழகம் - மபொசி இமயம் முதல் குமரி வரை இது ஒரே நாடு ஒரே மக்கள்,  பிரதேசங்கள் வேறு வேறாக  இருந்தாலும், மொழிகள் வேறு வேறாக இருந்தாலும், தர்மம் பண்பாடு கலாச்சாரத்தால் இது ஒரே நாடு. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் சாருக்கு எதிரான போராட்டத்தில், மற்ற பிரதேசங்களை விட தமிழகம் எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறார், படிக்காத,  படைப்புலக  மேதை மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் (  மபொசி ). அன்றைய  தமிழக அரசு செய்ய முன் வராததை, தமிழகப் பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வராததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டி, இந்தப் பணியை தனது பணியாக எடுத்துக். கொண்டு, ஆவணப்படுத்தி இருக்கிறார் மபொசி அவர்கள். பிரிவினை கருத்துக்கள் தூவப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், இவரது இந்த நூல் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியமான நூல்.

அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்

சின்னஞ்சிறு வாக்கியங்களால் உருவாக்கப்பட்ட சின்னஞ்சிறு புத்தகங்கள். 10 பகுதிகள். பதினோராவது பகுதி கேள்வி பதில் பகுதி. தற்போது ஒரே புத்தகமாகவும் கிடைக்கிறது. 

நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறிய கண்ணதாசன், பிற மதங்களை குறை சொல்லாமல், தமிழர்களின் தாய் மதமான இந்து மதத்தின் ஏற்றத்தை நமது தர்மம் பண்பாடு கலாச்சாரத்தோடு இணைத்து அழகாகப் புரிய வைத்திருக்கிறார். அறிவியலோடும் ஆன்மீகத்தோடும் இணைந்த இந்து வாழ்வியல் முறையை நமக்குத் தெளிவுபடுத்தும் இந்த நூல்,  ஒற்றை தெய்வத்தை ஒற்றைப் புத்தகத்தை ஒற்றை தூதரை  திணிக்க முன் வருபவர்களுக்கு சிறந்த பதில் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

( கட்டுரையாளர் இராம.நம்பி நாராயணன், ஒரே நாடு இதழின் ஆசிரியர்)

logo
Andhimazhai
www.andhimazhai.com